Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

பரிபாடல் உரை
ந.சி. கந்தையா



 


1. பரிபாடல் உரை
2.  தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3.  அகம் நுதலுதல்
4.  நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. பரிபாடல் உரை

 


பரிபாடல் உரை

 

ந.சி. கந்தையா

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : பரிபாடல் உரை
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 148 = 168
  படிகள் : 1000
  விலை : உரு. 75
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,
  இராயப்பேட்டை, சென்னை - 600 014.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

பரிபாடல் உரை


முகவுரை
பரிபாடல் 1எட்டுத் தொகையுள் ஐந்தாவதாக உள்ளது. பரிபாடலென்பது செய்யுள் வகையாற் பெற்ற பெயர். சங்ககாலத்து வழங்கிய செய்யுட்கள் 2வெண்பா அகவல் வஞ்சி கலி என்னும் நாலு பாக்களுமே. 3பரிபாடலென்பது வெண்பா உறுப்பாகி இன்னபா வென்று உணராமற் பொதுப்பட நிற்கும் இயல்புடைய ஒருவகை இசைப்பா. 4இப்பாடலுக்குச் சிறுமை இருபத்தைந்து அடியும் பெருமை நானூறு அடியுமாகும்.

இந்நூலிற் கடவுள் வாழ்த்து என வரும் பாடல்கள் கடவுளை வாழ்த்திப் பாடப்பட்டனவேயன்றி நூலுக்குக் காப்பாக பாடப்பட்டன வல்ல. 5சங்க நூல்கள் தொகுத்த காலத்து அவற்றுக்குக் காப்பு எவராலும் பாடப்பட வில்லை. பிற்காலத்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையில் விளங்கிய பெருந் தேவனாரே எட்டுத்தொகை நூல்களுள் ஆறுக்குப் காப்புப் பாடியிருக்கின்றனர். இந்நூலுக்கும் அவர் காப்புச் செய்திருப்பா ரென்றும் அது இறந்து பட்டதென்றும் கருத இடமுண்டு.

பரிபாடற் செய்யுட்களின் தொகை எழுபது. அவற்றுள் திருமாலுக்கு எட்டும் முருகவேளுக்கு முப்பத்தொன்றும் காடுகிழாளுக்கு ஒன்றும் வையை யாற்றுக்கு இருபத்தாறும் மதுரைக்கு நாலும் உரியன.

இப்பொழுது கிடைத்துள்ளன திருமாலுக்குரிய பாடல்கள் ஏழு, முருகக் கடவுளுக்குரியவை எட்டு. வையைக் குரியவை ஒன்பது, மதுரைக் குரியது ஒன்றுமாக இருபத்தைந்து பாடல்கள். இவை மொத்தம் 2034 அடிகளை உடையன. திருமாலுக்குரிய எட்டுப்பாடல்களுள் ஏழு பாடல்கள் கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

இந்நூலில் சங்கு, சமம், சந்தனம், சமழ்ப்பு , சனம், சரணம், சகடம், சலம் முதலிய எட்டுச்சகர முதற் சொற்கள் வந்திருக்கின்றன.

பழந்தமிழரின் பழக்கவழக்கம். கடவுட் கொள்கை, நீர் விளை யாட்டு முதலியவற்றை இந்நூல் சிறப்பாகக் கூறுகின்றது.

தமிழ் நிலையம்

நவாலியூர்

13.5.1938

ந.சி.கந்தையா

PENANG HOUSE
Jaffna, 8th January 1938
Mr.N.S.Kandiah of Navaly is a very agreeable discovery. He is a Tamil whose interest in Tamil Literature is splendidly altruistic. There are not many who are so supremely unselfish. Mr.N.S.Kandiah is a scholar, and a scholar with a modern environment. This is a great advantage, for it enables him to be a liberal in literary values and cultural assessments. He is doing yeoman service to the cause of Tamil learing by his proserending in Tamil of such classics as Pattuppattu and Purapporul. His Tamilagam is a mine of scholarly information well and balancedly presented. He is a patriotic scholar whose scholarship is unaffected by national bias.
(SD.) T.ISSAC THAMBYAH, D. TH

PRESIDENT, JAFFINA ASSOCIATION

பரிபாடல் வசனம்
1 திருமால்
கடவுள் வாழ்த்து

ஆயிரந்தலையுடைய பாம்பு தீயைக் கக்குவது போன்ற தன்மை யோடு (கவிந்து) மேல் நோக்கியிருக்கும் முடியும் கரிய உடையும், பரந்த மார்பும், குற்றந்தீர்ந்த 1சங்கு போன்ற வெண்ணிறமுடைய மேனியும், (மலையிடத்து) உயர்ந்த மூங்கிற் காட்டில் திரியும் பெரிய யானையின் ஏந்திய வாய் போன்று வளைந்த கலப்பைப் படையும், ஒரு காதிற் குண்டலமும் உடையவனே! தாமரை மலர் போன்ற கண்ணை உடையை! காயாவின் விரிந்த மலரை ஒத்த மேனியை! இலக்குமி பொருந்தியிருக்கும் மார்பினை! ஆராய்ந்தெடுத்த மணிகள் மார்பிடத்து விளங்குகின்ற பூணினை! நெருப்புச் சூழ்ந்த பெரிய மலைபோன்று உடுத்த பீதாம்பர உடையை! அழகிய கெருடக்கொடி உடையோய்! ஆணைவழி நிறுத்த லாகிய நின் காத்தற் றொழிலுள் உலகம் அடங்கி இருப்பதைப் புகழ்ந்து துதிக்கும் நாவலந்தீவின் அந்தணரது அரிய வேதங்களின் பொருளா யுள்ளவனே!
நின்னை எதிர்த்துப் போர் செய்வேம் என்றெழுந்தவரின் வலியை அழித்துப் போரில் மேம்பட்ட குற்றந் தீர்ந்த தலைவ! முனிவர்களது தந்தை! இலங்குகின்ற பூணணிந்த திருமால்! நின் வரலாற்றைத் தெளிவாக அறிதல், தெளிந்த உள்ளத்தினையுடைய முனிவர்க்கு மரிது; அவ்வியல் பினதாகிய பழைமையை யுடையோய்! இவ்வியல்பினை என்றுரைத்தல் நமக்கு எவ்வாறு எளிதாகும்; தாமரை மலரில் எழுந்தருளும் இலக்குமி யாகிய மறுவடைந்த மார்பனே! நின் பெருமைகளை அறிந்து உரைக்க மாட்டாமையை நன்குணரினும், பெருமையற்ற யாம் நின்னிடத்திற் கொண்ட பக்தியினாலே கூறும் இத்துதிகளைச் சிறியன வென்றிகழாது ஏற்றுக்கொண்டு அருள் செய்தல் வேண்டும்.

மிகுந்த புகழினையும் பெருஞ் சிறப்பினையுமுடைய அந்தணர் காக்கின்ற அறனும், அடியார்க்கு அருளும் நீ; ஒழுக்க மில்லோரின் ஒழுக்கத்தைத் திருத்திய குற்றந்தீர்ந்த சிறப்புடைய மறனும் பகைவர்க்கு அச்சமும் நீ; உயர்ந்து அகன்ற அழகிய வானத்தில் குளிர்ந்த நிலாவைப் பரப்பும் திங்களும், சுடுகின்ற கிரணங்களையுடைய ஞாயிறும் நீ; ஐந்து சிரங்களைப் பொருந்திய அஞ்சத்தக்க அரிய பெரிய வலிய சதாசிவனும் அவனாலாகின்ற உலகுயிர்களின் ஒடுக்கமும் நீ; இன்னாரை ஒப்பை, இவ்வியல்பினை என்பதற்கு அன்னோரை இவ்வுலகில் யாம் காணேம்; பொன்மயமாகிய அழகிய சக்கரத்தை ஏந்தியவனும், நிலைபெற்ற உயிர்களுக்குத் தலைவனும் நீ ஆதலின், இப்புகழொடு பொலிந்து நீயே நினக்கு ஒப்பாவை. நின்னை ஒத்த புகழாகிய நிழலுடையை; பொன்னை ஒத்த உடையினை உடையை; கருடக் கொடியை; (வலம்) புரியுடைய சங்குடையை; இகழ்ந்தோரை வென்று அழிக்கும் சக்கரப்படை உடையை; கழுவின நீல மணி பரந்தா லன்ன வடிவினை! எண்ணிறந்த புகழினை! அழகிய மார்பினை!
யாம் இம்மைக்கண் விருப்பமமைந்த சுற்றத்தாரோடு மகிழ்ச்சியுற்ற நெஞ்சத்தேமாய் உனது பதங்களில் தாழ்ந்து எப்போதும் பொலிவேமாக வென்று நினது தாள் நிழலைத் தொழுது தினமும் வணங்குகின்றேம்.

2 திருமால்
கடவுள் வாழ்த்து

மண்ணுலகும் விண்ணுலகும் அழிதலால், ஒன்று மறையுமிடத்து ஒன்று வெளிப்படுகின்ற ஞாயிறும் திங்களும் இன்றாய், விசும்பு அழிந்த ஊழிகள் பல தோன்றும். தோன்றியபின் தன் குணமாகிய ஒலியோடு தோன்றி (காற்று முதலிய பூதங்களின் பரமாணுக்கள் வளர்கின்ற) வான மாகிய முதற் பூதத்தின் ஊழிகள் பல கழியும்; கழிந்த பின் வானத்தி னின்று எல்லாப் பொருள்களையும் அசைவிக்கும் காற்றுத் தோன்றிய ஊழிகள் தோன்றும்; அதன்மேல் அக்காற்றினின்றும் நெருப்புத் தோன்றிய ஊழிகளும், அத்தீயினின்றும் தோன்றிய பனியும் மழையும் பெய்த ஊழிகளும் தோன்றும்; பின் அந்நீரினின்றுந் தோன்றுதலால் மீண்டும் அவ் வெள்ளத்தினுட்கிடந்து (நான்கு பூதங்களின் உள்ளீடாக வுள்ள) பெரிய நிலத்தின் ஊழி தோன்றும். இவ்வூழிகளால், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம் என்னும் எண் குறிக்கப்பட்ட அளவில் லாத காலத்தொகுதி கழியும். அதன் பின் உயிர்கள் உளவாதற் பொருட்டு அந்நிலத்தினை உயர்த்தியவராக அவ தாரத்தால் பெயர் பெற்றவராக கற்பந்தோன்றும். இக்கற்பம் நின் செயல்களுள் ஒன்று. அச் செயல்கள் பலவற்றையும் செய்கின்ற நின் பெருமைக்கு உள்ள கற்பங்களை யாவரும் உணரமுடியாத முதல்வ! நீ வாழ்க! சங்குபோன்ற பால்நிற மேனியுடைய பலதேவற்கு இளையை. எல்லாப் பொருள்களையும் மறைக்கும் இருள் போன்ற உடையையும் பனைக்கொடியையுமுடைய பலதேவற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்ற விளங்குவை; தவறில்லாத விரதங்க ளுடைய ஞானிகள் ஆராயும் வேதங்களால் தெரிந்து உணரின் உயிர்கள் தோறும் அந்தரியாமியாய் நிற்பை; இந்நிலைமைகளும் நின்கட்தோன் றும் தொன்மை நிலைபோல நினக்கே உள்ள விசேடங்களாம். வான வில்லை ஒத்த ஆபரணங்களின் அகத்து முத்துப் பதக்கமாகிய மதிக்கு மறுவெனும்படி விளங்கும் இலக்குமியை மார்பில் உடையை. உயர்ந்த திரையுடைய கடலுள் மூழ்கி விளங்குகின்றதும், இடையே புகர் நிற முடையதுமாகிய மருப்பினால் பூமியை எடுத்தாய்; எடுத்து மணனயர் தலின் புள்ளி வடிவினதாய நிலனும் வெள்ளத்தால் வருந்திற்றிலது. வெகுண்டு வீரத்தோடு ஒலிக்கின்ற காற்றுப் போல் திரண்டெழுந்த அவுணர் கொடிகள் அறுந்து வீழவும், செவிகள் செவிடுபட்டு முடிகள் அதிரவும், உலகங்கள் நிலை தளரவும், நின் சங்கு (பாஞ்சசன்னியம்) இடியை ஒப்ப முழங்கிற்று. நீ ஏந்திய ஆழிப்படை, வேரும் மடலும் குருத்தும் பறியாத நீண்ட பனை நின்ற நிலையில் விழ அதன் மீதிருந்த பல பதினாயிரங்குலைகள் அதன் தலையினின்றும் நீங்கித் தரைக்கண் உதிர்வன போலத், தலைகள் வலியழிந்து சாய்ந்து ஒன்றும் உடன்மிசை நில்லாமற் கொத்தாக இற்றுத், தரித்த தாரோடு புரளும் படி ஒரு காலத்தே கொய்தது. அதனால் அவையுருண்டு பிளந்து நெரிந்து பின் வேறு வேறாயுருண்டு சிதறி மூளை சொரிந்து நிலத்தின் கண் சோர அவுணர் மாய்ந்தனர். இவ்வாறு கொடிய போரைச் செய்யுந் தலைவ! நீ தரித்த சக்கரப்படை பகைவரின் உயிரை உடனே உண்ணும். கூற்றின் உடலை ஒக்கும். அதன் நிறம் உருக்கிய பொன் போன்று எழுந்து அசைகின்ற நெருப்பின் வடிவினது. நின் நிறைந்த வாய்மை, தப்பாமல் வருகின்ற நாள்களை ஒத்தது. உனது பொறை, நிலத்தை ஒத்தது. யாவர்க்கு மொத்த நின் அருள் நீர் நிறைந்த மேகத்தை ஒக்கும். நாவலந்தீவிலுள்ள அந்தண ரது அரிய வேதங்களின் பொருளாயுள்ளவனே! இவ்வாறெல்லாம் உணர்ந்து, யாம் சொல்லிய அப் பொருள்களையும், சொல்லாத பிற வற்றையும் பண்புகளானும் தொழில்களானும் ஒத்தனை! ஒத்தும், ஒப்பின்றி எப்பொருள் அகத்தும் இருப்பவன் நீ.

சிவந்த வாயுடைய கருடக் கொடியோய்! வேதத்துட் சொல்லப் பட்ட வேள்வி ஆசானின் சொல்லும், உயர்ந்த வேள்வி யூபத்திற் கட்டிய பசுவும், தீயை உண்டாக்கும்போது சொல்லும் மந்திரங்களைக் கூறி உயர்ந்த எரியை முறையாகத் தீக்கடை கோலிற் கடைந்து தீயை வளர்த்துக் கொள்ளுதலுமாகிய இவை முறையே நின் வடிவும், உண்டி யும், கடவுள் இல்லை என்பார் உண்டு எனும்படி நின் பெருமைக்குத்தக அந்தணர் காண்கின்ற நின் வெளிப் பாடுமாகும்.
தேவர்க் குணவாகிய அமிர்தத்தைக் கடைந்து கொடுப்பதாக நின் மனத்தின்கண் நினைந்த அளவானே அவர்க்கு அதன் பயனாகிய மூப்பின் மையாகிய தன்மையும். ஒழியாத வலியும், தம் சாவா மரபு போல உரியவாயின. ஆகவே நின் பல்புகழ் பரந்தன. அதனால் அத்தன்மைத் தாகிய அரிய மரபினோய்! நின் அடியை யாமும் அசைவில்லாத நெஞ்சி னேமாய் வணங்கிப் பலகாலும் ஏத்தி வாழ்த்தி வேண்டிக்கொள்வேம். எம்மறிவு, கொடுமையை அறியாதிருப்பதாகுக.

கீரைந்தையார்

3 திருமால்
கடவுள் வாழ்த்து

மாயோனே! மாயோனே! மறு பிறப்பை அறுக்கும் மாசில்லாத சிவந்த பாதங்களுடைய நீலமேனி போன்று விளங்குந் தோற்றமுடைய மாயோனே! நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்னும் ஐந்து பூதங்களும், இவற்றோடு ஞாயிறு, திங்கள்,வேள்வி முதல்வன் என்னும் மூவர் சேர்ந்த அட்ட மூர்த்தங்களும் திதியின் சிறுவராகிய அசுரரும், காசிபன் மக்க ளாகிய ஆதித்தர் பன்னிருவரும், குற்றமற்ற எட்டு வசுக்களும். பதினொரு உருத்திரரும், தாவிச் செல்லும் குதிரை வயிற்றிற் பிறந்த அசுவினி தேவர் இருவரும், இயமனும், அவன் ஏவல் கேட்கின்ற கூற்றுவரும், ஒவ்வொன்று ஏழுவகைப்பட்ட மூவகை உலகமும், உலகின் உயிர்களும் நின்கட்டோன்றிப் பரந்தனர் என்று அழியாத மெய்ம்மையுடைய வேத முரைத்தது. அவற்றை யெல்லாம் கூறுவதற்கு உரிய மல்லே மாயினும் ஈண்டு சிலவற்றைப் பிறழ உரைக்கின்றேம், வேதமாகிய தடாகத்துள் மலர்ந்த பிரமனும். அவன் தாதையும் நீ என்று நாவலந் தீவின் அந்தணர் அருமறை புகலும். காவல் காத்து நின்ற விளங்குகின்ற அழகிய ஆபரண மணிந்த அமரரை ஓட்டிக், கவர்ந்து வந்த அமிர்தத்தால் ஈன்றாளது துன்பத்தைக் களைந்த புள்ளினை ஊர்தியாகவுடையோய்! அன்னையின் துயர்களைந்த கருடனை எழுதப் பெற்ற கொடியோய்! உனது சிவந்த பாதங்களைத் தொழாதவர்களுமுளரோ? குறள் வடிவாக உலகை அளக்கின்ற காலத்து கீழேழுலகத்தையும் எஞ்சாமல் அளந்த அடியினை யுடையை! எல்லாவற்றையும் எரிக்கின்ற நெருப்பு, கூற்றுவர், ஞமன், குற்றமில்லாத ஆயிரங்கதிருடைய பன்னிரண்டு ஆதித்தர் என இவரெல் லாம் ஒன்று கூடும் உக இறுதிக்கண் பூமி தீயிடை அமிழ்ந்திற்று. அக் காலத்தும், பன்றியாகி அதனை மருப்பாற் பெயர்த் தெடுத்தாயென்றும், விசும்பினின்றும் ஒழுகும் புனலை வெள்ளை அன்னச் சேவலாய்ச் சிறகினாற் புலர்த்தினா யென்றும், பூமியிலுள்ளவற்றையும் தேவராகிய முனிவரும் வானத்து உறையும் முப்பத்து மூவரும் விசும்பினின்றும் நின்னைத் துதித்துப் பாடுவர். அன்னோர் பாடுவது தமக்கு முன்னோ ராகிய பாடுவோரின் முறையே. எம்பாடல்கள் தாமும் எமக்கு முன்னோர் பாடும் முறையினவே. நின் தொன்மையையும், பெருமையையும் அறிய முடியாத தன்மையில் எமக்கும் அவர்கட்கும் வேற்றுமையின்று.

கூந்தல் மாவென்று கண்டோர் சொல்லும் வடிவோடு வந்த கேசி என்னும் அசுரனது கனல்கின்ற சினத்தை அழித்தோய்; எண்ணிறந்த நின் கைகள் நின் புகழை ஒத்தன. மோகினியாகிய நின் வடிவினைக் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியே அவுணர்க்கு அச்சமாய் முடிய இருதிறத்தாரும் கடைந்த நல்ல அமிர்தத்தை அமரராகிய ஒருவர்க்கே பகுந் தளித்தலால் நடுவு நிலைமை திறம்பின நலனில்லாத ஒரு கையினை யுடையை, இரண்டு கையுடைய மாலே! (அன்பர் தியானிக்கின்றபடி தோன்றும்) முக்கை முனிவ! நாற்கை அண்ணல்! ஐங்கை மைந்த! அறுகை நெடுவேள்! ஏழுகை ஆள! எண்கை ஏந்தல்! ஒன்பது விசாலித்த கையும் பெரும்புகழு முடையோய்! பத்துக் கையுடைய மதவலியோய்! நூறு கையுடைய ஆற்ற லோய்! ஆயிரம் விரிந்தகையும் மாயமும் உடையமள்ள! பதினாயிரங்கை யுடைய வேத முதல்வ! நூறாயிரங்கையுடைய ஆறறிகடவுள்! இவை மாத்திரமல்ல; பல ஆம்பல் என்னும் எண்ணாலும், இனைத்தென எல்லை அறியப்படாத வடிவினை! நின்னை உயர்வு கூறக் கருதின், அவ்வுயர்வை நீயே அறிவை யல்லது, பிறரால் உணரப்படுதியோ? அநாதி யாய் வரும் வேதங்களுக்கு முதல்வ! விரிந்த ஆகமங்கள் அனைத்தானும், அகங்காரத்தானும், மனத்தானும். உணர்வினானும், மற்றும் எல்லாவற் றானும் நினக்கு வனப்பும் எல்லையும் அறியப்படாத மரபினோய். அழகும் தன்மையும் விளக்கமாகிய ஒளியு முடைய பிறையாய் வளர்கின்ற பதினாறுகலையுடைய பூரண சந்திரனின் ஒளியை உணவாக உடையவ ரும், அழகிய இரத்தினங்கள் பதித்த பசிய பூணுடையவருமாகிய அமரர்க்கு முதல்வன் நீ, அவுணர் மயக்கத்தால் நினக்குப் பிழை செய்த னர். அணுத் திணிந்த நிலவுலகத்தை நீ அளக்க அப் பெருமையைக் கண்டு, முறுக்கவிழ்ந்த தண்ணிய மாலையுடைய அவுணர் அஞ்சி அகன்று போய்க் கடலிடத்தே பாய்ந்தனர். அப்பிழை செய்த அவுணர்க்கும் பிழை செய்யாத அவுணர்க்கும் தலைவன் நீ. நின் இயல்பினை அறிவோர்க்கு இவர் பகைவர், இவர் நட்டார் என்றுங் கூறுபாடுண்டோ? விளங்குகின்ற ஆயிரந்தலையுடைய அரவை வாயிடத்தே கொண்ட நின் ஊர்தியாகிய சேவலும் நொந்து செங்கண்மாலே! ஓ! என்று அலறும் காலமுதல்வன் நீ. நீ இத்தன்மையை என்று சாமவேதஞ் சொல்லுதலின் இத்தன்மையை விளக்க அறிந்தனம். தீயினுள் வெப்பம் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணி நீ; சொல்லினுள் வாய்மை நீ; பூதத்துக்கு முதல் நீ; ஞாயிற்றின் ஒளி நீ; திங்களின் தட்பம் நீ; இன்னும் கூறாத எப்பொருளும் நீ; அவற்றின் உட்பொருளும் நீ; ஆதலால் நீ தங்குதலுமில்லை; தங்குமிடமுமில்லை; மறதியில்லாத சிறப்பினால் மாயத்தையுடையவர் அனையை. உலகின் முதலினும், இடையினும், இறுதியினும், படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் தொழில் வேற்றுமை பற்றிப் பிறவாப் பிறப்புடையை அல்லை; அங்ஙனம் பிறந்தும் பிறப்பித்தோரையுடையை அல்லை. காயாம் பூ நிறத்தினை. அருளே கொற்றக் குடையாகவும் அறமே செங்கோலாகவும் வேறு நிழல் படாமல் மூவேழுலகும் ஒரு நிழலாக்கிய காவலுடையை! பூதங்களைந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், புலன்களைந்தும், மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும்; புருடனு மெனப்பட்ட தத்துவம் இருபத்தைந்தானும் நால்வகைப்பட்ட உகங்களினும் ஆராயப்படும் பெருமையுடையை.

வாசுதேவனே! பலதேவனே! பொன்னிற மேனி யுடைய காமனே! பச்சுடம்புடைய மாலே! ஆய்ச்சியரோடு கைகோத்து ஆடுதலின் அவர் குலமும் இடமும் ஆயினோய்! அறியப்படாத மரபினோய்! அன்பரது விடாத நினைவின் கண்ணோய்! மாயாத நிலை பேற்றை யுடையவனே! பழைய முறையில் வந்த புதல்வா! நல்ல யாழுடைய பாண! வனமாலை யணிந்த செல்வ! வெற்றிச் சங்குடையவனே! பொன்னிறத்தால் மிக்க ஆடையை யுடையோய்! வலம்புரிச் சங்கைத் தாங்கிய அண்ணலே! மற்போரில் வல்லவ! இலக்குமியின் நாயக! பெருவலியுடைய மள்ள! பெரிய உலகந் தோன்றாத காலத்து, நிறைந்த வெள்ளத்தின் நடுவே பிரமனைக் கொண்ட உந்திக்கமலமாகிய பொருட்டுத் தாமரையை யுடையை! நின் சக்கரமே உலகுக்கு நிழலாவது.

கடுவனிள வெயினனார்

4 திருமால்
கடவுள் வாழ்த்து

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் மயக்க மற நீக்கி, நட்பு, கருணை, பெரியோர் பற்று, (தீயவற்றில்) இகழ்ச்சி என்னும் நான்கினாலும் சித்தத்தை மாசறுத்து, சமாதி என்னும் ஒரு நிறைக்கண்ணே தம்மை நிறுத்திய அன்பர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர்; அப்புகழ் எல்லாம் நினக்கு இயல்பாவதல்லது வியக்கப் படுவன வல்ல; இத்தன்மையை அறிந்தேமாயினும், யாங்கள் அவற்றுட் சிலவற்றை அங்குமிங்குமாகப் பிறழக் கூறக்கேட்டு நீங்குதலும் எங்கட்குப் பெருமையாகும்; ஆதலால் நாம் நின் புகழை நீங்கேம். நின் திருமேனி நீலமணியையும், கடல்நீரையும் சூல் முதிர்ந்த கால முகிலுமாகிய இம் மூன்றையும் ஒக்கும். நின் கரிய நிறத்தோடு மாறுபட்ட பொன் நிறமுடையை! பகைத்தவர் உயிரைக் கொள்ளும் சக்கரத்தை யுடையை! கோபத்தாலன்றி இயல்பாகச் சிவந்த கண்ணுடையை! பிருங்கலாதன் நின்னைப் புகழ்ந்தான். அதனைக் கண்டு பொறாத இரணியன் சினத்தீ யால் புகைந்தான். புகைந்து பிருங்கலாதனைப் பலப்படப் பிணித்தான். அதனாலுண்டான நடுக்கமுடைய அப்பிருங்கலாதன், தாதை யாதலின் அவ்விகழப் படுவானை இகழாதிருந்தான். நீ அவ்விரணியனை இகழ்ந்து, நின்னை நட்ட அப் பிரகலாதன் வருந்தாமல் அவன் நெஞ்சிற் பொருந் தினாய். நின்னோடு ஒன்றாகும்படி வரம்பெற்ற இரணியனது வரை போன்ற மார்பின் வலிகெட தூணினின்றும் புறப்பட்டாய். அப்போது துன்பத்தைக் காட்டும் உற்பாதங்களோடு பொருந்தி அவனது இடி போன்ற முரசு ஒலித்தது. நீ பலபடியாக, உகிரினால் அவனது ஊனை வகிர்ந்தாய். பூமி வெள்ளத்து அழுந்திய கழுத்தால் தாங்கி அதனை வெள்ளத்தினின்றும் எடுத்தாய். அத்தொழில் பலர் புகழும் மேருவின் தொழிலோ டொக்கும். நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின் கண்ணே காணப்படா நின்றன. நின் தண்மையும் தண்ணளியும் திங்களின் கண்ணே உள; கொடுக்கக் கொடுக்கக் குறையாத நின் தன்மையும், கொடையும் மாரியிடத்துள; நின் தாங்குகின்ற தன்மையும் பொறையும் பூமியிடத்துள; நின் வெளிப்படுந் தன்மையும் பெருமையும் நீரிடத்தே உள; நின் வடிவும் சொல்லும் ஆகாயத்துள; நின் வருகையும் ஒடுக்கமும் காற்றிலுள; அதனால் இவையும் உவையும், அவையும் பிறவுமாய் நின்னிடத்தினின்றும் பிரிந்து நின்னால் காக்கப்பட்டன வெல்லாம் பின்னும் நின்னோடு மேவலமைந்தன.

கருடன் தங்கியிருக்கும் உயர்ந்த கொடியோய்! கருடன் ஓங்கிய கொடியுடைய நின் ஒரு கொடி பனை; மற்றொன்று கலப்பை; இன் னொன்று யானை; நினது ஒப்பில்லாத கொடியோடு ஒப்ப எழுங்கொடி வேறின்று. விடப் பாம்பின் உயிரை உண்ணும் கருடன் தனது வயிற்றில் உதர பந்தமாகக் கட்டியிருப்பது பாம்பு. அவனது வளை பாம்பு; முடிமேல் இருப்பன பாம்பு; ஆபரணங்கள் பாம்பு; தலைமேல் இருப்பன பாம்பு; பகைவர் மதத்தைக் கெடுத்தோய்! கருடன் பொன்னிறமாகிய கொடி மேலிருந்து பாய்ந்தெடுக்கின்ற இரை பாம்பு. கடிய குற்றம் உண்டாக வருத்தும் வெகுளியும். அருளும் கொடுமையும் செப்பமும் ஆகிய இவற்றை மறமும் அறமும் உடையா ரிடத்து உடையை; இல்லா ரிடத்து இல்லையாயிருப்பை. நினக்கு மாற்றாரும் கேளிரும் இல்லாராத லான். அன்பராயுள்ளார் உயிரிடத்தும் அதனை மாற்றுந் தொழிலும் பாதுகாப்புச் செய்யுந் தொழிலும் உடையையல்லை. உயிர்களது இயல்பால் நினக்குப் பகையும் நட்பும் உளபோலத் தோன்றுவதல்லது, நின் இயல்பால் அவை உளவல்ல. அன்பர் மனத்திற் கொண்டனவன்றி நினக் கென வேறு வடிவு இல்லாதோய்! கண்ணைப் பறிக்கின்ற இருண்ட நீல மணி போலும் மேனிக்கண் மலர்ந்த துளசியின் நாறுகின்ற பூங்கொத் தாற் றொடுத்த கண்ணியையுடையோய்! புகழ் பொருந்திய பொன்னிற மாகிய சீதேவி உறைதலின் மறுவேறின மார்புடையோய்! நின் உந்தியிற் தோன்றிய தாமரை போலும் கண்ணுடைய அளப்பரியோய்! வீடளிக்கு மிடத்து நின்னினுஞ் சிறந்த தாருடையோய்! நின்மாட்டுச் சிறந்த கடவுட்டன்மையுடையை அத்தன்மையல்லாத இயல்புகள் நினக்கு வேறுமுள. அவை நின்னை ஒத்த தெய்வ முனிவர்களுணரும் உபநிடதப் பொருள். அழலை ஒத்த இலையும், நிழல்தரும் கிளைகளுமுடைய ஆலும், கடம்பும், ஆற்றிடைக் குறையும், காற்று வழங்காத நிலையான குன்றும் பிறவுமாகிய அவ்விடங்களைப் பொருந்திய பல தெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடை யோய்! எங்கும் நிறைந்தவன் நீயே; நின் அன்பர்கள் தொழுதகையினது தாழ்ச்சிக்கண் அகப்பட்டோய் நீ; அவர் நினைத்தன முடித்தலால் அவரவர் ஏவல் செய்வானும் நீ, அவரவர்கள் செய்த பொருள்களுக்குக் காவலும் நீ.

கடுவனிள வெயினனார்

5 செவ்வேள்
கடவுள் வாழ்த்து

மிகவுயர்ந்த பிணி முகமென்னும் யானையை ஊர்ந்து சமர்புரிந்த ஞான்று சூரபன்மா கடலிடத்தே சென்று மாவடிவாக நின்றானாக, நீ, தீ எழும் படி சுழற்றி எறிந்த வேல், பெரிய இருண்ட கடலிடத்துள்ள கற்பாறைகள் பொடி படும்படி புகுந்து, நடுங்குகின்ற சூர்மாவை அறுத்தது; கொன்றுண்ணலால் வரும் பாவத்துக்கு அஞ்சாத பாவசனம் புண்ணியசனம் என்னும் மாயத்தையுடைய அவுணரைக் கொன்றது. அவ்வேலினால் நாவலந்த தீவினுள் வடபகுதியிற் கிரவுஞ்ச மென்னும் பெரிய மலையைத் துளைத்து வழியை உண்டாக்கிய ஆறுமென் றலையை உடையாய்! ஆறு மென்றலைகளுடனும் பன்னிரண்டு தோள்க ளுடனும் ஞாயிற்றின் தோற்றம் போலும் நிறவழகுடனும் தாமரைப் பூவின் கட்பிறந்த பிறப்பை யுடையை! உலகத்தை அழிக்கும் கடவுட்கு மகனே! அமைதியினை யுடையாய்! நீ வெளிப்படுதலின் கண்டார்க்கு அச்சந்தரும் வெறியாட்டு விழவினுள் வேலன் கண்டு இவ்வாறெல்லாம் நின்னைச் சொல்லி ஏத்தும் வெறிப்பாடு முள. இவ்வுலகிற்கெல்லாம் தலைவன் நீயே யாகலான் அவ்விடத்து அவன் கண்டு ஏத்துகின்ற அப் பாட்டுக்கள் மெய்யுமல்ல; அவற்றுள் ஒன்றாய வழி அத்தலைமைச் சிறப் பினையுடைய நீ அச்சிறப்பின்றி ஒழிகுவை! நின்னை ஒழிந்தார் நல்வினை யாற் சிறப்புடைய உயர் பிறப்பினராதலும் தீவினையால் வழி பிறப்பின ராதலுமாகிய இது நின் ஆணைக்கண்ணது; ஆதலின் அச்சிறப்பு நினக்கு ஒரு காலும் ஒழியாது.

வேதங்களாகிய குதிரை பூண்ட பூமியாகிய தேரை நான்முக னாகிய பாகன் செலுத்துமாறறிந்து செலுத்தினான். அமரர்க்குச் செய்யும் வேள்விக் கண் அவிர்ப்பாகத்தை உண்டவரும், கோபத்தாற் பசிய கண்களையுடைய வருமாகிய ஈசன் தேர்மீது ஏறினான்; ஏறி, வெள்ளி பொன் இரும்பு என்னும் அரிய மூன்று மதில்கள் ஒரு தீயாகிய அம்பால் வேகும்படி வாசுகியை நாணாகவுடைய மேருவாகிய வில்லை வளைத் துத் திசைகள் வெதும்ப எய்தான்; எய்தபின் உடையோடு புணர்ந்து காமத்தை நுகர்கின்ற வதுவை நாளில் அமையாத கலவியை ஒருகாலத்து அமைத்தான். நெற்றிக்கண்ணும் இமையாத நாட்டமும் உடைய அவ் விறைவனிடத்து ஒரு வரத்தைப் பெற்ற இந்திரன் இந்தக் கலவியாற் றோன்றிய கருவை அழிப்பாயாக எனத் தனது வச்சிரப்படையை ஏவினான். மழுப்படையைத் தாங்கிய இறைவன் வாய்மையன் ஆதலின் இந்திரனுக்குத் தான் கொடுத்த வரம் அரிதென்று உலகேழும் அவன் மெய்ம்மையை வியக்கும்படி அதனை மாற்றானாயினான். அதனால் இந்திரன் அதனைப் பலகண்டங்களாகச் சேதித்தான். சேதித்தலால் சிவந்த உடம்பு அதற்குரிய கருவை “இது அமரர் சேனைக்குத் தலைவ னாம்” எனத் தெய்வ முனிவர்கள் ஞான திருட்டியால் நன்றா யறிந்தனர். அறிந்து இந்திரனுடைய கோபம் அணுகாதிருக்கும்படி மறைமொழி கூறி அவன் பக்கலினின்றும் அக்கருவினை எடுத்துச் சென்றனர்; சென்ற தெய்வ முனிவர்கள் எழுவரும், “துண்டங்களாக்கப்பட்ட இக்கருவை நம் மனைவியர் உட்கொண்டு சூல் நிறையப் பெறுவராயின் அவர் கற்பில் நிரம்பார்” என நினைந்தனர்; நினைந்து அங்கியங் கடவுள் தானே தரிப்ப தாக என எண்ணினர்; எண்ணி அழல் வேட்டு அதன் கண் கருவினை அவியுடனே பெய்தார்; அவியோடு குண்டங்களில் எழுந்த முத்தீக் கொள்ளுதலால் பரிசுத்த மடைந்த அதனை வானத்து வடபால் உறை கின்ற அம் முனிவர்களின் மனைவியர் எழுவருள் கடவுட் கற்பினை யுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய விளங்குகின்ற கார்த்திகையாகிய அறுவறும் அப்பொழுதே அயின்றனர். தம் கணவர் வேண்ட அயின்ற கருவாதலின் மறுவற்ற கற்பினையுடைய அம்மாதவர் மனைவியர் நிறை யுடைமை நீங்காதே நின்னைச் சூற் கொண்டார்; கொண்டு, இமயத்துச் சரவண மென்னுஞ்சுனையிற் தாமரைப் பூவாகிய பாயற் கண்ணே ஒருங்குபெற்றாரென்று பௌராணிகர் சொல்லுவர். 1முருகா உன்னைப் பெற்ற அன்றே இந்திரன் தான் கொடுத்த வரத்தைப் பகைமிகுதியால் மீறித் தீயைக் கக்குகின்ற வச்சிரத்தைக் கொண்டெறிந்தான். அப்போது ஆறுருவாயிருந்த நீ ஓருருவாயினை. வெற்றி ஓங்கிய சேயே! வாழ்க! குழந்தைப் பருவத்தினையுடைய நீ விளையாட்டாகச் செய்த போருக்கு இந்திரன் தோற்றான். அதனைக் கண்ட அங்கி இனி இவனே நம் சேனைக்குத் தலைவன் எனக்கூறித் தன் அழகிய கோழியைக் கொடுத் தான். வானின் வளம் பொருந்திய செல்வனாகிய இந்திரன், தன்னிடத் துள்ள விளங்குகின்ற நீலமணி போன்ற இறகுடைய அழகிய மயிலைக் கொடுத்தான். இவரும் பிறரும் அளித்த மறியும், மயிலும் கோழிச் சேவலும், பொறியும், வரியு முடைய வில்லும், மரமும், வாளும், செறிந்த இலைவடிவினதாகிய வேலும், குடாரியும் கணிச்சியும் தெறுகின்ற கதிருடைய நெருப்பும் பாசமும் மணியு மாகிய வெவ்வேறு உருவின வாகிய இவற்றைப் பன்னிரண்டு கரங்களிடத்துக் கொண்டாய்; கொண்டு தேவர் சேனாதிபதியாய் அவர்க் கரசனாகிய இந்திர னது புகழ்வரம்பைக் கடந்தோய்! நினது குணத்தை ஏற்றுக்கொண்டோ ராகிய அறவோரும் வீடு பெறுங்குணமுடையோருமாகிய முனிவோரு மல்லது, உயிர்களைக் கொல்கின்ற தீய நெஞ்சமும் சினமும் உடையோரும் அறத்தின் கட் சேராத புகழில்லோரும் கூடாவொழுக்கத் தாலாழிந்து தவ விரதத்தை யுடையோரும், இப்பிறப்பினுகர்ச்சியேயுள்ளது மறுபிறப்பில்லை என்னும் மடவோரும் ஆகிய இவர்கள் நின் தாள் நிழலை அடையார். வட்டமாகிய பூங்கொத்தாற் றொடுத்த மாலையுடையோய்! நின்னை யாம் இரப்பவை, நுகரப்படும் பொருட்களும், அவற்றை உளவாக்கும் பொன்னும், அவ்விரண்டாலும் நுகரும் நுகர்ச்சியுமல்ல; எமக்கு வீடு பயக்கும் நின் அருளும், அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும், அவ்விரண்டானும் வரும் அறனுமாகிய இம்மூன்றுமே.

கடுவணிள வெயினனார்

6 வையை
(இது, வையை நீர் விழா விளையாட்டிற் காதற்பரத்தை, இற்பரத் தையுடன் நீராடினான் எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தா னெனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு ஆங்கு நிகழ்ந்த செய்தியுங் கூறி வாயின் மறுத்தது)

முகிற் கூட்டங்கள் கடலிடத்தே தாழ்ந்து நிறைய நீரை உண்டு எழுந்து ஆகாயத்தே பறந்தன; பரந்து ததும்புகின்ற பாரத்தை இறக்கி இளைப் பாறுதற்கு மழையைப் பொழிந்தன; அப்போது மலைகளிற் சஞ்சரிக்கும் மான் கூட்டங்கள் கலங்கி ஓடின; மயில்கள் தோகை விரித் தாடின; மலையிடத்துள்ள மாசு கழுவுண்ணும்படி நீர் நிறைந்து தங்கி வாரடித்தோடிற்று; மலையின் சாரல்களின் பல வழிகளால் நீர் ஓடிற்று; புலவர்கள் புனைந்து பாடிய நல்ல பாடல்கள் பொய்யா வண்ணம் உழவுத் தொழில் தழைக்கும்படி வெள்ளம் எவ்விடத்தும் பரந்தது. ஈரம் புலரப் புகைத்தற்கு அகில் முதலியனவும், அழலும், சூடுதற்குப் பூவும், வைகைக்கு ஆராதனைக்கு வேண்டிய பொருள்களும், பொன் பூ முதலிய பலவு மேந்திய பரத்தையர், தம் மகிழ்ச்சி மிகுந்த காதலரைக் காண அலங்காரத்தோடு வையைப் புதுப் புனலிடத்தே கூடினர். இவ்வகைப் புனலிடத்து வந்த மட நல்லாரின் கைகள் பூரித்தலால் தொடிகள் அழுந்தின; தோள் வளைகள் கழன்று முன்கையிடத்தே அலைந்தன; எழுதிய தொய்யிற் கொடிகள் ஒன்றோடொன்று கலந்து அழிந்தன: 1மேகலை வடங்கள் அற்று மணிகள் உதிர்ந்து நூல்கள் தோன்றின; ஆணி முத்துக் கோத்தமாலை, சாந்து முதலியன படுதலால் நிறம் மழுங்கின; நகத்திலும் கன்னத்திலும் எழுதிய செம்பஞ்சு அழிந்தது; தனங்களிடத்து அப்பிய குங்குமக்குழம்பு வட்டலிட்டது; இலைகளாற் தொடுத்த மாலை யும், குலைந்த மயிரும், பூசிய சந்தனக்குழம்பை அழித்தன; தனங்களிடத் தனவும், மார்பிடத்தவுமாகிய ஆடவர் மகளிர் என்னும் இருபாலாரின் ஆபரணங்களும் ஒன்றோடொன்று கலந்தன; அன்பு ஒத்த அவர் உள்ளம் நிறையாகிய வெள்ளத்தை உடைத்தது; வையை ஆற்றின் நிறைந்த வெள்ளம், மலையை ஒத்த அணைகளை உடைத்தது; காவல் புரிகின்ற கரைகாப்பாளர், அவ்வுடைப்பினை அடைத்தற்கு ஆட்கள் வரும் பொருட்டு பறை அறையும்படி பறைகொட்டு வோர்க்குப் பணித்தனர்; பறை ஒலி எழுதலின் அவற்றைக் கேட்டு ஊர் எழுந்தது. இவ்வாறு ஊர் எழுந்த அன்று, போர்க்கணியும் அணையினை யுடைய யானையின் கூட்டம் அழகு பெறச் சென்றாற்போல, அலங்காரஞ் செய்த மகளிரும், மைந்தரும், ஆரோகணித்திருக்கும் பிடிகளும், குதிரைகளும் நிரைநிரை யாகச் சென்றன. அம்மகளிரும் மைந்தரும் அணிகளைக் களைந்து வைத்துப் புனலாடுதற்குரிய உடைகளை அணிந்து விளையாட்டை விரும்பினர்; புனலாடுதற்குரிய நீர்ப்பரப்பைப் போர்க்களமாகக் கொண்டனர்; முன்னணியிற் செல்வோர் 1தூசிப் படை போன்றனர்; புனுகுநெய்பூசிய நீர் சிந்தும் துருத்திகளாலும் பன்னீர் நிறைந்த நீர் விசிறும் கொம்புகளினாலும் நீரை ஒருவர் மேலொருவர் இறைத்துப் போர் செய்தனர். வெண்கிடையாற் செய்த தெப்பங்கள் குதிரையாகவும். நிறம் பிடித்த கிடையாற் செய்த தேர்களை யானையாகவும் கொண்டு ஊர்ந்து திரிந்தனர்; காதலாற் சென்று நீராடும் புறச்சேரி இளையரைத் தாண்டி உட்புகுந்து செல்ல மாட்டாத மெலியோர் துறைகள் தோறும், நின்று நீராடினர்; வலியோர் உட்புகுந்து புதுப்புனலாடினர். அதனால் வாச நீரும். சந்தனம் முதலியவற்றது குழம்பும், வாச எண்ணெயும் சூடிய பூக்களும் நாறும்படி ஒழுகின; நாற்றத்தோடு ஓடுகின்ற ஆற்றை, மறையை விரும்பும் அந்தணர் கண்டனர்; மகளிரும் மைந்தரும் பூசிய விரைகளைக் கழுவின கலங்கல் நீராதலின் தூய்தாய நிலைமை யழிந்து வேறுபட்ட புனலென மருண்டு நீராடுதல் வாய் பூசுதல் முதலிய தந்தொழில் செய்யாது நீங்கினர். சூடிக்கழித்த மென்மலரும்,மைந்தர் தாரும், மகளிர் கோதையும் கரையிடத்துள்ள மரங்களதும் கொடிகளது மாகிய வேரும், காயும், கிழங்கும் மேலே பரந்து வர, அவற்றின் மீது கீழாய மக்கள், உண்டு மிகுந்த கள்ளை ஊற்றுதலால் அந்த அகன்ற வையைப் புனலின் நலனழிந்து வேறுபட்ட தென்று பிறரும் நீங்கினர். அந்தச் சேறாடிய புனலின் செலவு இவ்வகைத்து. எல்லையின்றி இழியும் வெள்ளிய நீரின் நாற்றத்திற் படிந்த தடையின்றிச் செல்லும் உருவிலதாகிய நல்ல காற்று இரவுக் குறிக்கண் மணந்த தலைவரைத் தாலாட்டிற்று. இவ்வாறு மகளிரின் ஆகத்தே கிடந்து துயில் கூடுவது முருகனது பரங்குன்றின் கண்ணதேயாம். அவ்விடத்தே செல்லாதார்க்கு அங்கு நிகழ்பவற்றைச் சொல்லுதல் காரணமாக மதுரைத் தெருவின் கண் ஓடி வஞ்சனை செய்யுங்காமன் இரவிற் செய்த வெல்லாம் ஊரைக் காக்கும் காவலர்க்குப் புலப்பட நின்ற தெரு வைகறைக் கண் வெறு நிலமாக விளங்கிற்று. தமிழையுடைய வையைப் புனல் இவ்வாறு எங்கும் பரந்தது. இவ்வாறு மகளிரும் மைந்தரும் நீராடிய தன்மையைக் கூறித் தலைமகன் காதற் பரத்தைக்குக் கையுறை காட்டினான். அக்கூற்றினால் அவன் இற் பரத்தை யோடு நீராடினா னென்று உட் கொண்ட காதற் பரத்தை, “ பழையே னாதலான், நீ இகழ்கின்ற எனக்கு அன்று, நீ எப்பொழுதும் புதிதாக விரும்பும் மகளிர்க்குக் கொய்தாய்” என்றாள்.

தலைவன்:- நீ அறிந்திலை, இத்தளிர்கள் அத்தன்மையின வல்ல.

காதற் பரத்தை- யான் பணியா நிற்பவும் அன்பின்றி முறிந்த பண்பினை யுடையாய்! இப்பொழுது களவு வெளிப்படா நின்றது, பண்டு எனக்கு நீ கொய்த தெல்லாம் விரைவாக வருதலால் தளிர் உருவத்தில் வாடுதல் உண்டோ? இஃது அவட்குக் கொய்து சென்று அவளால் மறுக்கப் பட்டமையால் துவண்டவாறு பாராய்.
காதற்பரத்தை:- நின் மார்பிடத்துள்ள தார் வாடும்படி நின்று, நீ கொய்த வருத்தத்தை நினைந்து, ஏற்றிலளோ? கொய்த இத்தழையைக் கையிற் கொண்டு நீ செய்த தாழ்ச்சிக்காகவாவது அவள் ஏற்றிலளோ சொல்.

தலைவன்:- புனைந்த தெப்பத்தில் ஏறிவர வேண்டியிருந்தமை யால் பொழுது தாழ்ந்தது; அதனால் இத்தளிர்கள் வையை நீர் காரண மாகத் துவண்டன; முருகன் குன்றத்தின் மீது ஆணை இது மெய்யாகும்.

காதற்பரத்தை- வையை யாற்றின் வரவு அழகிய பெருக்கன்றோ! அவ்இற்பரத்தையின் காமப் பெருக்கம் வையை வரவோடொக்கும்; ஆமாம்; நீ சொல்லுகின்ற தொக்கும்; காதலையுடைய காமம் எப்பொழு தும் ஒரு தன்மையின் நிற்குமோ? சிலர்பால் விரையச் சுருங்குதலாலும், சிலர்பால் விரையப் பெருகுதலாலும் அக்காதல் வையைப் பெருக்குத் தானன்றோ? வேண்டாது சூளுற்றுப் பிழை அடைந்தனை; இனிச் சூளுறல்; வளம் பெய்கின்ற கார்காலத்து எம்பதி நின்பதிக்கு அருகி லிருக்க இளவேனிற் காலத்துக் குருவிகள் இரைதேடும் தன்மைத் தன்றோ புணை காரணமாக நின்னைத் தாழ்ப்பிக்கும் வையை. ஆதலால் நின் காமத்தையும் வையை போலக் கருது.

ஆற்றின்கட் செல்கின்ற புனல் வழியே செல்லும் மரம்போல, வெளவிக் கொள்ளுதல் வல்ல மகளிர்க்கும் புனலாடுதற்குத் தெப்பமாகிய மார்பினையுடையாய்! சிறிதும் அஞ்சாது இரவெல்லாம் அவளோடு தங்கினாய்; அவ்வையைக்கண் உடைந்த மடையை அடைத்த விடத்தும் பின்னும் ஒழுகும் ஊற்று நீர் போல, முன் வருத்திய துன்பங்கெட நீ சோர்ந்த விடத்தும் பின்னும் நீர்வாரும் கண்ணுடைய மகளிர் நெஞ் சத்தை இன்னும் வருத்தா நின்று வருத்தலை ஒழி.
தலைவன்:- கரையிடத்து நின்ற ஒருத்தி தனது பேதைத் தன்மை யால் கரையில் நில்லாது, நான் குளித்த குளத்திற் புகுந்து திரையின் கண் மூழ்கினாள்; பின் எழுந்து என்மேல் வருந்தி வீழ்ந்தாள்; குளித்த யான் எழுந்து அணுகி எடுத்தலும் அவள் எழுந்தாள்; அவள் காமநுகர்ச்சி அறியும் பருவத்தளல்லள்; அவளை அன்றி மாலைபோல் அழுத்தப் பட்டவள் யாவளோ? அவளோடு யான் ஆடிய ஆறுயாது?
காதற்பரத்தை:- அதனை யான் சொல்ல அறிந்து நீயே தெளி; அத்தன்மைய ஆறு உண்டோ? அதுவே இவ்வையை யாறு.

தலைவன்:- யான் குளத்திற் குளிக்க நீ இவ்வையை யாறு என்ற மாறுபாடு என்னை? முன் 1சூளுற்றது போலல்லாது யான் பிறள் ஒருத்தியைச் சேர்ந்திலேன் என்று தண் பரங்குன்றைக் கையாற்றொட்டு இப்பொழுது சத்தியஞ் செய்கின்றேன்.

இவ்வாறு இற் பரத்தையும் தலைவனும் ஊடிப் புலந்து நின்றா ராக. அதனைக் கண்ட
முதுபெண்டிர்:- “நின் கண்ணின் சிவப்பிற்குத் தலைவன் அஞ்சு வான்; துனி நீங்கி நீ அவனோடு விளையாடுதலைத் தொடங்கு; இவ்வாறு துனியின் கண் புகுவாயாயிற் காம இன்பங் கெடும்; அக்காம இன்பத்துக் குக் காரண மாகிய நீ, அவனைக் காய்ந்து காய்ந்து சுழற்சியை நெஞ்சிற் பூட்டுதலால் நீ இராக்காலத்து நீங்கற் பாலை யல்லை; நீங்கின் இடன றிந்தூடி இனிதின் ஊடும் ஒழுக்கத்திற் பிழையாகும்” எனப் புலவி தணியு மாறு இற் பரத்தையை வேண்டினாள்.

இவ்வாறு ஊடல் உணர்த்தவல்ல வாயில்கள் இரந்தும் பரந்தும் வருந்தி யுணர்ந்த அவ்விருவருங் கூடி மது உண்டு களித்தனர்; களித்து வையைக்கட் புனலாடினர்; ஆடிக்காம மிகுதியாற் கலந்தனர்; கலந்தபின் இன்பமுண்டாகப் புலந்தனர்; பின் அவ்வவ் விடங்கடோறும் சென்று விளையாடா நின்றனர்.

இவ்வாறெல்லாம் தலைவன் காதற் பரத்தையோடு இன்பம் நுகர்ந்தானென்று தலைவி, ஊடல் தீர்க்கும் வாயிலாகப் புகுந்த விறலிக் குக் கூறினாள். பின் வையைப் பார்த்து, “வையாய்! நின்கட் புனலாடுவோர் நெஞ்சத்து, மிக்குப் பொருந்திய இக்காமத்தை உண்டாக்குந் தன்மை நினக்கு எஞ்ஞான்றுங் குறையா தொழிக” என்று வாழ்த்தினாள். வாழ்த்தித் தலைமகன் செய்தியை வற்புறுத்தி வாயின் மறுத்தாள்.

ஆசிரியனல்லந்துவனார்

7 வையை
(இது தலைமகன் தலைமகளோடு புனலாடினெனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய், தோழியை நீங்களாடிய புனல் விளையாட்டு இன்பங் கூறு என, அப்புனல் ஆட்டின் இன்பமும் பலவேறு வகைப் பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையுங் கூறி என்றும் இந்த நீராட்டின்பம் யாம் பெறுக என்றது)

முகிலின் கூட்டங்கள், திரையும் குளிர்ச்சியுமுடைய கரிய கடல் வற்றும்படி நீரை உண்டன; உண்டு வலிய இடி வெகுண்டு ஆர்ப்ப, தம்மீது ஏறிய பாரத்தைத் தாங்கமாட்டாது, கரை உடைந்த குளத்து நீர் பெருகுமாறு போல, தமது பாரம் சுழலும்படி மழையைப் பொழிந்தன; மலை உச்சிகளினின்றும் அருவிகள் நிரம்பி இழிந்தன; இழியும் அருவிகள் மற்றிடங்களி னின்றும் வரும் பலபுனல் ஓட்டங்களோடு சென்று பெருகின; வெற்றி யுண்டாக ஒலிக்கின்ற முரசினையுடைய பாண்டியர், கொள்ளக் கருதிய நாட்டைச் சேர நிமிர்ந்து செல்லும் அவர்தானையின் நீண்ட தலையின் நிமிர்ச்சி போல, யாம் செல்லுமிடம் அரிதென்னாது இருளுடைய இரவும் பகலுமாக வந்தது; இவ்வாறு வந்த வையைப் புனல் உயிர்கட்கு நன்மை மிகவும், மெல்லிய புலங்கள் அழகு பெறவும் பெருகி நரந்தம் புல்மீது பரந்தது; வேங்கையின் பூங்கொத்தி னின்று முதிர்ந்த பூவோடு கூடி, கிட்டுதற்கரிய மலை உச்சிகள் தோறும் நின்ற மழையால் வருந்திக் காற்றால் அலையும் கிளைகளுடைய பெரிய மரங்களின் வேரை அகழ்ந்து உயரத்தே யுள்ள பள்ளங்களை நிரப்பிற்று.

உழவர் மகிழ்ச்சியால் ஆடினர்; சிவந்த பூக்கள் அணிந்த முழாக் களும் பெரும் பறைகளும் ஒலிக்க ஆடும் ஆடலியல்பு அறியாத மகளிர் போலத் தான் வேண்டிய இடங்களிற் புனல் சென்றது; ஊடல் இயற்கை அறியாத ஊடல் உவகையாள் கணவனைக் கடந்து நிற்குமாறு போலக் கட்டிய அணைகளை முறித்தது; விதிமுறையோடு செய்த மெய்யிடத்தே பூசும் கலவை நாற்றம் போல் நறிய பல நாற்றத்தை உள்ளே அடக்கி மேலே புதிய நாற்றத்தைச் செய்தது.

வெள்ளம் பாய்ந்து வரப்புகுந்த நீரால் நீர் நிலைகளில் மலர்கள் மேலே மிதந்தன என்று ஒரு பால் ஆரவாரம் எழுந்தது; விளையாட்டு மகளிர், தாம் மணலிலே இழைத்த பாவை சிதைந்த தென்று ஒருபால் நின்றழுதனர்; அகன்ற வயலிடத்துள்ள இளம் நெல்லின் கண்ணும், அரிந்தடுக்கிய நெற்சூட்டின் கண்ணும், நீர் சூழ்ந்த தென்று ஒரு பக்கத்தே ஒரு பால் துடி கறங்கின; ஊரைக் கடல் சூழ்கின்றதென்று ஒரு பக்கத்தே ஆரவாரமெழுந்தது, வானிடத்தே மழை பெய்த லொழிந்ததென்று ஒரு பக்கத்தே ஆரவார மெழுந்தது; பாடுவார் இருந்த பக்கத்தை நீர் கொண்ட தென்றும், ஆடுவார் சேரியை வெள்ளம் அடைந்த தென்றும், வெள்ளம் ஓடும் வாய்க்கால்கள் கழனியை நீரினால் தொடுத்தனவென்றும், தெங்கு, கமுகுகளின் கழுத்தை நீர் முட்டுதலால் வாளைமீன் அவற்றை உண்டன வென்றும் நாற்றங்கால்கள் வண்டல் ஏறுண்டு மேடாயினவென்றும், ஒவ்வொர் பக்கங்களினும் ஆரவார மெழும்படி, ஊடலைத் தானுணர்த்த உணராத மாதரைக் கூட்டுவித்தற்கு முயலும் கணவனது ஆசை வெள்ளம் போல் புனல் விசையோடு சென்றது; சென்று சினைமுதிர்ந்த வாளை மீன் கூட்டம்போல விலாப்புடைக்கும்படி கள்ளுண்டு நிற்கும் உழவர் கூட்டம் நிற்கும் இடத்தே சென்று பரந்தது; பரந்து இடிந்த மலைபோலக் குத்துண்டு நிற்கும் இருகரையாகிய காவலுட்பட்டு நின்றது. (அவ்வையை நீர்) அது நுரை சுமந்து பூவான் மூடுண்டு பொழிலின்கட் பரந்து தன் னிடத்தே விரைந்து நீராடுபவராகிய மகளிர் காதின்கண் தளிரைச் செருகி, மைந்தர் கண்ணியைப் பறித்தது; பின் மகளிர் தலைக் கோலம், உடுத்த துகில், இருவடமாய்த் துகிற்குள் அணியும் மேகலை, எண்வட மாய் அதன் புறத்தணியும் காஞ்சி, மைந்தர் ஆழி, மோதிரம், வாகுவலயம் என்று இவை எல்லாவற்றையுங் கொண்டது; அத்தன்மை பாண்டியன், பகைவர் நாட்டிற் புகுந்த தன்மையை யுடைய தாயிருந்தது.

மிக்க தகைமையுடைய அவன் ஆடுகின்ற ஆய மகளிரெல்லாம் ஒரு வரை ஒருவர் துரந்து புனலை ஏற்றினர்; அவர்கள் கண்கள் அப் புனலை ஏற்று அமைந்தன; அவருள் ஒருத்தி அதற்குத் தோற்றுக் கண்களைக் கையால் மறைத்தாள்; வெற்றியால் இறுமாந்த ஒருத்தி தான் கழுத்திலணிந்திருந்த பொன்னாணினால் தொய்யிற் குழம்பாலெழுதிய கரும்பினையுடைய அணை போலும் அவள் மென் தோள்களைக் கட்டிச் சிறையாகப் பிடித்தாள்; அச்சிறைப்படுத்தப்பட்டவட்கு பரிந்து கைப்பிணிப்பினின்று நீக்குதற்குப் பாய்ந்த ஒருத்தியின் கூரிய வேல் போன்ற கரிய கண்ணொளியால் சிவந்த புதுப்புனல் இருள் நிறமாயிற்று; வையைப் பெருக்கின் வடிவு இதுவாகும்.

புனலை விரும்பி ஆடிய உடம்பு, ஈரந்தீர்ந்து வெம்மை உண்டா தற்குக் காரமுள்ள கள்ளைக் குடித்தற்கு ஏந்திய போது, அவள் கண் நெய்தற் பூவை ஒத்தன. அந்நறவை அருந்தினபொழுது அவள் கண்கள் கண்டார்க்கு மகிழ்ச்சியைத் தரும் பெரிய நறவம் பூவை ஒத்தன.

தலைவன் அக் கண்ணியல்பைக் கண்டு புகழ்ந்து அவற்றின் பெண்ணின் அழகுத் தன்மையுடைய நோக்கினை விரும்பிப் பாண்சாதி போலப் பலவகையாற் பாடினான்; அப்பாட்டைத் தன் காதலியைப் பாடுகின்ற தறியாது; வேறொருத்தி கேட்டு அவனோடு கூடுதற்கு வருத்த முற்றாள்; அவ்விடத்து அதனைக் கண்டு இனி எனக்கு என்ன சம்பவிக் குமோ என்று அஞ்சித் தலைவியைச் சேர்ந்து நடுக்கமுற்றான்; நறவுண்ட தினால் சிவப்பேறிய தலைவியின் சிவந்த கண்முன் குறைகிடந்த ஊட லின் மேல் விளைந்த இதனாலும் சிவப்பேறியது; பல தொகுதியாக நீராடற்கு வந்த மகளிர் காண அவளோடு பகை மிகுந்து தன் மாலையைப் பிடுங்கி மிக வெகுண்டாள்; ஆறாடும் அவள் மேனியின் அழகை உட்கொண்டு பாராட்டிய காதலன், தன் சந்தனச் சேறாடிய மேனி நிலத்தைத் தீண்டும்படி விழுந்து வணங்கினான்; அவன் சிரத்தை மிதித்துப் பின்னும் வெகுளி தீராமையால் ஊடினாள்; சிவந்த புனலாடு கின்ற நேரத்து இவ்வாறெல்லாம் நிகழ்ந்தது.

பாலை ஏழினையுமுடைய புரி நரம்பின் கண் இனிய இசையைத் தருகின்ற யாழும் மிடற்றுப் பாடலுங் கூட, குழல் அவற்றின் சுருதியை அளந்து நிற்ப, முழவு எழுந்து ஆர்ப்ப அரங்கேறிய தலைக்கோல் மகளிரும் பாணரும் ஆடலைத் தொடங்கினர்; அவ்வாரவாரத்தோடு சேர்ந்த கரையைப் பொருது இழியும் பெரிய நீரின் ஒலி அஞ்சத் தக்க இடியோடு கூடிய மழை முழக்கத்தை ஒக்கும் திருமருத முன்றுறைக் கண் சேரும்; அந்நீரிடத்து மகளிரும் மைந்தரும் இன்பம் நுகர்வர்; அவர்கள் மாலைகளை வாங்கி நின் தலைக்கண் புனையும் வையாய்! இன்று நின்னிடத்து ஆடி நீங்காத இப் பயனைப் பெற்றார்போல என்றும் நின்னால் யாம் பெறும் பயனைப் பாராட்டி விடிகின்ற பொழுதின் தன்மையை அடைந்து மகிழுவோமாக.

மையோடக் கோவனார்

8 செவ்வேள்
கடவுள் வாழ்த்து

பூமியிடத்துள்ள துளசியின் மலர்ந்த மலரினாற்றொடுத்த மாலை யையும், அளவற்ற செல்வத்தினையுமுடைய கருடனை மேலே எழுதிய கொடியையுமுடைய திருமாலும், இடப ஊர்தியுடைய சிவபெருமானும் உந்தியங் கமலத்திற்றோன்றிய பிரமனும், அவனிடத்தினின்றும் தோன்றி, உலகின் இருளை அகற்றும் ஆதித்தர் பன்னிருவரும், மருத்துவராகிய அசுவினி தேவர் இருவரும், சிவபெருமான் பெயரால் அறியப்படும் உருத் திரர் பதினொருவரும், நல்ல திசைகளைக் காக்கின்ற திக்குப் பாலகர் எண் மரும், இவரும் இவரொழிந்த பிறருமாகிய அமரரும், அவுணரும், தெய்வ முனிவரும் நின்னைக் காண்பது காரணமாக மண்மிசை வந்து உறையும் இடம் திருப்பரங்குன்றாம். இவ்வியல்பினால் பரங்குன்று நினது பழைய இட மாகிய இமயக் குன்றத்தை ஒக்கும். அவ்விமயக் குன்றின் கண் சிறப்பெய்தி நின்னை ஈன்ற நிரைத்த இதழுடைய தாமரையினது மின் போலும் பூங்கொத்துக்கள் உதிராததும் வற்றாததுமாகிய பொய்கை ஒக்கும். நினது குன்றின் அருவி தங்கும் ஓழுங்குபட்ட சுனை.

முதல்வ! நின் குன்றிடத்து முகிலின் முழக்கம் நின் யானை முழங்கும் ஓசையை ஒக்கும். முகிலின் முழக்கத்தைக் கேட்ட கோழி அஞ்சிக் குன்று எதிரொலிக்கும்படி கூவும். மதமிக்க யானை அக்குரற்கு மாறுமாறாகப் பிளிறும். அவை மலைக்குகைகளிடத்து எதிரொலிக்கும். ஐந்து துளையான வங்கியத்தும். யாழிடத்தும் பிறந்த இசைச் சுருதியை ஒப்ப ஒரே நிறமுடைய கூட்டாகச் செல்லும் விருப்புடைய வண்டுகள் ஆர்த்தன. கொன்றை, சரம் போன்ற பூங்கொத்துக்களை மலர்ந்தன. மணமுடைய மலர்ந்த காந்தட் பூ, இடமெல்லாம் நாறின. நன்றாக மலர்ந்த பன்மலர்கள் தேன் ஒழுக அந்நாற்றங் களோடு தென்றல் வீசும் தலைமையுடையவாய் இருந்தன. மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் இடையேயுள்ள வழி இவ்வாறிருந்தது.

குன்றைப் பிளந்து விளங்குகின்ற வேலோய்! கூடலிடத்து மன்ற லில் கொட்டப்படும் முரசின் ஆரவாரம். காற்றால் ஏறுண்ட கடலின் கொந் தளிப்புப் போலவும். இந்திரனது இடி எனவும் அதிர்ந்தது. நின் குன்றிடத்து முழக்கம் அவ்வொலிக்கு மாறாக ஒலிக்கும்.

தலைவியரால் தூதாக ஏவப்பட்டுத் தலைவரோடு மீண்ட வண் டின் கூட்டத்தின் ஒலி, அத் தலைவியர் காதலை மதுரை மூதூர்க்கண் அரவமாக்கிற்று.

மாவடுவின் வகிரை வென்ற கண்ணும் மாந்தளிர் போன்ற மேனி யும், நீண்ட மூங்கில் போன்ற பணைத்த மிருதுவாகிய தோளும். வளை அணிந்தவருமாகிய இளம் மகளிரின் வரைகடந்த காம இன்பத்தைத் தலைவரோடு பெரிய பொழிலாகிய பாயலின் கண் கூடிப் பெறுவர். இக்களவியற் புணர்ச்சியையும், காதலையுமுடைய 1அடியுறை மகளிர், மைந்தர் அகலத்தை அகலாத நல்ல புணர்ச்சியையும் பூவின் கட் திரியும் அகன்றில் போல் அகலாது அவர் விரும்பியவாறு பெறுவர். இவ்வாறு தருஞ்சிறப்புடையது தண்பரங்குன்று.

(தலைமகள் இவ்வாறு மகளிர்மேல் வைத்து இன்ப மிகுதி கூறியதைப் பொறாத தலைமகள் புலந்து கூறுகின்றாள்)

தலைவி:- இப்பொழுது நீ மிகவும் அயலார் நாற்றத்தை நாறா நின்றாய்; அவரோடு கூடுதற்கு அவ்விடத்தே நீ காலை போய் மாலை வருதல் அடிக்கடி நிகழா நின்றது; இனி பழைய சத்தியத்தைத் தவிர்.

தலைவன்:- இனிய மணலையுடைய வையைக் கரைக் கண்ணுள்ள பொழிலாணை, குன்றத்துச் சாரலாணை, பார்ப்பாராணை, முனியாதே. மலரை உண்ட கண்ணாய். நீ கூறியது எனக்கு இயைவதன்று இந்நாற்றம் பரங்குன்றத்துக் கனியினும் மலரினும் பயின்ற காற்றுச் சீத்தடித்து வந்தது; ஆதலால் மிகவும் துனியாய் ஆகுக.

தலைவி:- நீ உன் சூளை விடு.

தோழி:- 2ஏடா! யானொன்று சொல்லு மளவும் நில்லு நில்லு. நின் சூளைப் பின்னை கூறு. அமைதியுடையோர் பெற்ற மிகத் தகுதியில்லாத மகனே! இவள் தாய்க்கு ஒரு பெண், (இச் சத்தியத்தால் உனக்குத் தீமை வரின் இவள் இறந்து படுவள்)

தலைவன்:- மை உண்ட கண்ணும் விளங்குகின்ற ஆபரணங் களுடையவளும் ஈன்றாட்கு அரியளோ? அரியளாவது நீ சொல்லுதற்கு முன் யான் அறிந்திலேன்; இதனைப் பார்; புனல் வாரடிக்கின்ற வையை யின் மணலைத் தொட்டேன்.

தோழி:- மணத்தைத் தருகின்ற செவ்வேளின் தண்ணிய பரங் குன்றத்தின் அடியைத் தொட்டேன் என்றாய்; கேளிரை ஒத்த மணலோடு நட்பும் இத்தன்மைத்தோ? அது கிடக்க, ஏழுலகையும் ஆளுகின்ற திருவரைமேல் அன்பு அருளைச் செய்யத்தக்கது; நீ தலைவியிடத்து அருள் செய்யாது செய்ததாக, அருளுடைய முருகன் மீது ஆணை செய்யின் நின்னை அருளில்லாத வருத்தத்துடன் அவ்வேல் மெய்யாக வருத்தும்; அதுவேயன்றிப் பார்ப்பார் அடியைத் தொடினும், வெற்றி வேலோன் ஊர்ந்து செல்லும் மயிலையும் அவன் நிழலையும் நோக்கி அவை மீது சூளுறற்க; குறவன் மகள் மீது ஆணை கூறுகின்ற ஏடா! அதனையும் கூறல்; ஐயனே! சூளுறல் வேண்டின் வணங்கப்படும் குன்றோடு வையைக் கேற்ற அழகிய மணலைச் சூளுறா தொழி.

தலைவன்:- நேரிழாய்! யார் பிரிய, யார் வர, யார் வினவ, யாரது விடை உண்டாகின்றது? அது கருதாது நீருரைக்கும் சூளின் தன்மை கடிது என்றாய்; தடாகத்தின் கண்ணுள்ள நெய்தற்பூவையும், கமழ்கின்ற (சிவந்த) நறவம் பூவின் இதழை ஒத்த கண்ணையும், ஒள்ளிய நுதலையும், முல்லை முகையை வென்று முத்தை ஒத்திருக்கும் வெள்ளிய பற்களையு முடைய எனது தலைவி கூறிய குற்றம் நனவு மன்று கனவுமன்று; (நகையாகக் கூறுகின்றான்) என் மாட்டுக் குற்றத்துக்குரியது ஒன்றும் இல்லாதிருக்கவும் அவள் துனிக்குக் காரணம் என் ஒழுக்க நெறியாக நீ ஓர்தலால் யான் செய்தது பொய்ச் சூள் என்று கருதி முருகன் என்னைத் துயர்மிகும்படி வருத்தஞ் செய்வான்; அவன் அவ்வாறு செய்யாமல் நீ சென்று அவள் அடியிற் பணிந்து ஆற்றுவிப்பாயாக; (பின் தன் ஏவல் இளைஞரை நோக்கி) இவ்வுரையை எல்லார்க்கும் அறிவிம்மின்; முருகன் தாளை யாவரும் தொழும் பரங்குன்றத்தின்கட் சென்று மலர் தூவி ஏற்றுதும்; அவியை ஊட்டுதும்; பாணித்தாளத்தையுடைய பாட்டைப் பாடுவேம்; 1கிணை ஒலியை எழுவிப்போம்.

தோழி: ஏடா என்னைச் சமாதானஞ் செய்க என்றாய்; அதனாலே நின் பொய் ஆணையாகிய குற்றம் நின்னைப் பற்றுதலை யாம் அறிந்தேம்; யமனது வலிமையும் இகழும் ஆற்றலுமுடைய முருகன் நின்னை மாறுபடுத்தற்கு முன்னே, யான் வளை சோரும்படி கையை விட்டுப் பேசாது நிற்பேன்; தலைவி நாவைக் கை விரலினாற் தொட்டு முகத்தைக் கவிழ்த்துப் பெரிய சூளுறுதலால் வரும் தீமையை அஞ்சி அருளினால் ஆற்றியிருப்பாள்; அயல் மகளிர்பால் நீ பலகாலும் செல்லும்போது அதனைப் பலகாலும் காண்பாள்.

இவ்வாறு கூறிப் பின்னும் தலைமகளிர் யாவரும் இவ்வாறே செய்வரென அவரது செய்தி கூறுகின்றாள்.

மதுரைக்கும் திருப்பரங் குன்றத்துக்கும் இடையே உள்ள வழி காற்று மோதுதலால் உயர்ந்த மலையிடத்திற் பெய்து ஓடும் மழை நீராற் செழித்து வளர்ந்த இளமரச் சோலைகளை யுடையது; மரங்களில் பறிக்கப் பறிக்கத் தொலையாத மலர்கள் விரிந்திருக்கும்; பொய்கைகள் நீர் நிறைந்திருக்கும்; பொழில்களிடத்துக் குளிர்ந்த மணல் பரந்திருக்கும்; முருகனைப் பூசைபுரிந்து வழிபடுதற்கு இத்தண்ணிய நிழலுடைய வழியால் மகளிர் கூட்டமாகச் செல்வர்; சந்தனமும், புகைப்பனவும், காற்றால் அவியாத விளக்கிற்கு வேண்டிய நெய்யும், நாறுகின்ற பூவும், இசையுடைய முழவும், மணியும், பாசமும், அயிலும், குடாரியும், மயிற் கொடியும் பிறவும் ஏந்திச் சென்று திருப்பரங்குன்றிலுறையும் முருகனது அடிகளைத் தொழுவர். தொழுது சிலர், யாம் கனவில் எங்காதலரைத் தொட்டது பொய்யாகாமல் நனவின்கண் தலைவரை எய்தி வையைப் புதுப்புனல் ஆடுதல் வேண்டுமென வரம் வேண்டுவர்; சிலர், எம் வயிறு கருவுற வேண்டுமெனப் பொருள்களை நேர்ந்தனர்; சிலர் எங்கணவர் வியக்கத்தக்க அமரை வெல்ல வேண்டுமென அருச்சித்தனர். இவ்வா றெல்லாம் பாடுவார் ஆடுவோரின் தாளங்களும், மலையிடத்து எழும் எதிரொலியுமாகிய இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஒலித்தன.

கூரிய எயிறுடைய பாவையர் சுனையிடத்தே பாய்ந்தாடினர். அவர்களது கண்ணும், முகமும், பாதமும் தாமரைப் பூப்போன்றன; அவர்கள் தோள் மீது பொருந்திய சேடியரது கரங்களும் கயத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போன்றன; தனங்களும் தாமரை முகையை ஒத்தன; இளமயிலனையார் பொய்கையிடத்துப் பாய்ந்தாடுதலின் அங்கு மலர்ந்த தாமரை மலர்களுக்கும் இவர்கள் உறுப்புகளாகிய தாமரை மலர்களுக்கும் வேற்றுமை தோன்றாதாயிற்று. அம்மடவார் முலைப் பூணோடு கணவர் தம் மார்பணிகள் மயங்கின. சிவந்த தளிர்போன்ற மேனியுடைய அம்மடவார் அரிவையர் செய்த அமிர்தத்தை ஒத்த காமத்தை உண்டாக்கும் கள்ளுடனே மடையர் சமைத்த மகிழ்ச்சி தரும் கள்ளையும் உண்டு தங்கணவர் மார்பிடத்துத் தோன்றிய வருத்தத்தைத் தீர்த்தனர்.

பரங்குன்றமே! தம்முட்பிரியாத மகளிரும், மைந்தரும், பிறரும், வரம் வேண்டுவோரும் கூடி நின்று, மணிமிடற்றண்ணற்கு மாசில்லாத உமையம்மை தந்த கடம்பின் கீழ் அமரும் முருகனது அழகிய கோயிலை வழிபட, செல்வத்துடன் மண் வருத்த மழை வறண்டதாயினும் அருவி பெருகி மிகும் செல்வம் நினக்கு நிலை பெறுவதாக.

ஆசிரியர் நல்லந்துவனார்

9 செவ்வேள்
கடவுள் வாழ்த்து

வடதிசைக்கண் உயர்ந்து பெரிய நிலம் அசையாதபடி நிற்கும் பெரிய சிகரத்தையுடைய இமையமலை, அழகு மிகுந்த தெய்வச் சாதிக்குத் தலைவனாகிய இந்திரனாற் காக்கப்படும். அம்மலையிடத்தே, அமரருலகினின்றும் அயனால் வீழ்த்தப்பட்ட ஆகாய கங்கையின் வேகத்தை மலர்ந்து விழுகின்ற பூவைப் போல சடாபாரத்திலே தாங்கிய சிவபெருமானுக்கு, தெய்வ முனிவர்கள் உடன்படக் கார்த்திகைப் பெண்களிடத்திற் பிறந்தோய்! இமைக்கின்ற கரிய கண்களையுடைய வள்ளியின் தோளை நீ களவின் கண் மணந்தாய். மணந்த அன்று, ஆயிரங் கண்களையுடைய இந்திரன் மகளாகிய தேவ சேனையின் கண், முதுவேனில் கார்காலமாகி மழை பெய்தா லொப்பப், பரங்குன்றின் கண் நீராகிய மழையைப் பெய்தது.

நான்மறைப் பொருளை விரித்து அம்மறையின் நல்ல புகழை விளக்கும் புலவீர்! சிறந்ததொரு பொருளைக் கேண்மின். காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம்; அஃதாவது: மெய்யுற்றறியாதா ரிருவர் அன்பொத்து ஊழ் வயத்தராய்த் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி. இனி அன்பு ஒவ்வாத கற்புப் புலத்தலாற் சிறந்தது. அப்புலவிதான் 1வாயில் வேண்டி நிற்றல், வாயில் பெறுதல் முதலியன. அவை தலைவனது பரத்தைமையான் வருவன. வாயில் பெற்றுப் புணரும் புணர்ச்சி, தலைவிக்குப் பாங்காயினார் கேட்டு வருத்தமுறப் பரத்தையால் தன் மனைக்கண் அலர் தூற்றப்படுவதாகும். அப்புணர்ச்சி இன்ப இயல்பா னன்றி ஊடலால் உண்டாவது. கற்பொழுக்கம் போலத் தலைவர் பிரித லறியாத களவிற் புணர்ச்சியுடைய மகளிர் தலைவரோடு மாறு கொண்டு துனிக்கும் குற்றமுடையாரன்று. இப் புணர்ச்சியை வேண்டுகின்ற பொரு ளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக்கத் தைக் கொள்ள மாட்டார்.

இனி அக்களவிற் புணர்ச்சியுடைமையான் வள்ளி சிறந்தவாறும், அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார். சந்தன மரங்களுடைய பழைய கரையைப் பெயர்த்து வையைப் புனல் கொண்டு வந்த வயிரிய சந்தனக் கட்டையின் புகை சூழ்ந்த மாலையுடைய மார்பின் கண், விளங்குகின்ற முத்துமாலை அழகு பெறத் தன்னோடு கலத்தற்கு வரும் முருகவேளை தேவசேனை தொழுதாள்; தொழுது, “வஞ்சகனே! வாழ்க. நின்னை அறியாது அகப்பட்ட மகளிர் தன்மை இனி மழையை வேண்டி வருந்தும் காவை ஒக்கும்; ஆதலால் அம்மகளிரே தவறுடையரா வரல்லது நீ தவறுடையை அல்லை; நின்னை எய்தும் திருவுடையார் மென்றோள் மேற் பொருந்தி அருளலும் நினக்கின்று; ஆதலால் நின் சிறந்த நலத்தை உண்ணக் கடவனோ” என்று முருகக் கடவுளைக் கையாற் சுட்டிச் சொன்னாள்; சொல்லிய பின் வள்ளி காரணமாக உண்டான புலவியால் நீங்கினாள். முருகவேள் தேவசேனையைக் சென்றணுகி, தன் தலைமாலை அவள் அழகிய பாதங்களிற் தோயும்படி வணங்கினார். அதனால் புலவி தீர்த்த தேவசேனை ‘வருந்தல்’ என்று சொல்லித் தன் மார்பை அளித்தாள். அப்போது வள்ளி ‘இனி அவளைக் குறுகாதே’ என்று அவன் கையை மிக இறுகப் பிடித்தாள்; பிடித்துத் தானணிந்த மாலையைக் கோலாகக் கொண்டு அடித்தாள். அதனைக் கண்டு ஒருவர் மயில் ஒருவர் மயிலோடு உறவாடிற்று; இருவர் கிளிகளும் தம்முள் மழலை வார்த்தைகளை மிழற்றின. வெறியாட்டை விரும்பும் முருகனது குன்றிடத்துள்ள வள்ளியின் வண்டு தேவசேனை கொண்டை மீது இருந்த வண்டை மேற்சென்று பாய்ந்தது. அதனைக் கண்டு தேவசேனை யின் பாங்கியர் வள்ளி பாங்கியரோடு மாறுபட்டனர்; மாறுபட்டு மாலை களை வீசி அடித்தனர்; கண்ணிகளை ஓங்கித் தடுமாறினர்; மார்பை அழகு செய்யும் கொங்கையின் கச்சுகளை, அடிக்கும் கருவிகளாகக் கொண்டு அடித்தனர்; மாலைகளையும் வரிப்பந்தையும் கொண் டெறிந்தனர். பேதமையுடைய மெல்லிய நோக்கம் வெகுளியால் வேறு பட்டோரும் ஊதவளையும் இடையுடை யோருமாகிய, தேவசேனையின் தோழியர் நெருங்கிய போரைச் செய்தனர். அதனைக் கண்டு வள்ளியின் பாங்கியராகிய மெல்லிய மயிலின் சாயலையுடையோர், தோட்டிப் புண்ணால் மென்மை அடைந்த தலையுடைய மதம் நாறுகின்ற களிற்றின் இயல்பை அடைந்தனர்; வேகமுடைய குதிரைகளின் கதியைத் தம்மிடத்தே கொண்டனர்; தேர் நிரைகள் போல வடிகயிற்றைத் தெரிந்து கொண்டு வந்தனர்; மார்பிலே பொருந்தும்படி வில்லை வளைத்து அம்பைச் செலுத்தும் வில் வீரரதும் வாள் வீரரதும் நிலைமையையும் அடைந்தனர். இந்திரன் மகளுடைய பாங்கியர் அதற்கு அஞ்சி வாட் டழும்பு நெருங்கியிருக்கும் மார்புடைய முருகனைச் சூழ்ந்துகொண்டு சுனையிடத்தே மூழ்கி ஆடினர். அப்பாறையிடத்துத் தேனையுண்ட வண்டாய் நின்று யாழ் போன்ற இனிய பாடலைப் பாடினர்; கொண்டை யுடைய மயிலாய்த் தோகை விரித்தாடினர்; குயில்களாய் நின்று கூவினர்; வருத்த மடைந்தனர்; குறிஞ்சி நில மக்களாகிய குறவர் பெற்ற வீரம் பொருந்திய கொடிச்சியர் திருந்திய போரைச் செய்தவிடம் பரங்குன்று ஆதலின் அவ்விடம் வெற்றி வேலுடைய முருகனுக்கு ஒத்தது.
கொடிய சூரபன்மாவாகிய மாமரத்தை அறுத்து அழித்து வேலாற் பொரும் போரையுடையாய்! நின் குன்றின் மிசை ஆடல் பயின்றாரை ஆடல் பயின்றார் வெல்வர்; பாடல் பயின்றாரைப் பாணர் வெல்வர்; வலிய போரில் வல்லாரைப் போர் வல்லார் வெல்வர்; ஒழிந்த கல்வி யுடையாரைக் கல்வியுடையார் வெல்வர். வெவ்விய புதுப்புனலை ஏற்ற தடாகம் போலும், சுனைப்பக்கத்து வெற்றிக்கொடி உயர்ந்து நின்றது. நினக்கு ஏற்ற வேலினை! வென்றுயர்ந்த கொடியால் வெற்றியமைந்தனை கற்பு நெறியுடைய தேவியரது அன்பு பொருந்திய ஊடலுரிமையை விரும்பும் பண்புடைய குமர! யாம் நின்னை வணங்கி வாழ்த்தி வேண்டிக் கொள்கின்றேம்.

மருத்துவ னல்லச்சுதனார்

10 வையை
(இது பருவங்கண்டு, வருவேனென்று வற்புறத்திச் சென்ற தலைவர் வார்த்தைக்கு மாறாக வருந்திய தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடச் சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும் வையை நீர் விழவணியும் ஆங்குப்பட்ட செய்தியும் கூறியது)
மாலைக் காலத்தே மலையிடத்துப் பெய்த மழையின் மிகுந்த வெள்ளத்தால் நிரம்பிய வையைப் புதுப்புனல், எல்லை காணமுடியாத கடலைக் கூடுவதற்கு வேகத்தோடு சென்றது. செல்லுமிடத்து, நிலவுல கில் பசி முதலிய துன்பங்கள் சுருங்கும்படி விரிந்த பல பூக்கள் நெருங்கின போர்வையுடன் பெரிய மணலை மூடிப் பாய்ந்தது; வரியுடைய வண்டு விரும்புகின்றதும், மொட்டு விரிகின்ற கிளைகளுடைய மாந்தளிர்க ளுடன் வாழை யிலைகளும் தோயும்படி சென்றது. இவ்வாறு பல ஆரவாரத்தோடு கரையைக் காக்கின்ற காவலரை அழைத்தற்குப் பறை கொட்டும்படி சென்றது.

அப்புனலிடத்தே நெருங்கி ஆடுதலை விரும்பிய மக்கள், கூட்ட மாகச் சென்றனர். நூல் போன்ற நொய்த இடையும், மயில் போன்ற சாயலுமுடைய மாதர், இரண்டு முதல் முப்பத்திருக்கோவை யீறாகவுள்ள வடங்களை இறுக்கிக் கட்டினர். அரக்கு நீரை உள்இழுத்து வீசும் துருத்திகள் எல்லாவற்றையும், முத்துப் போலும் பனி நீரோடு அளவிய சந்தனத்துடனே பெட்டியில் வைத்து மூடிச் சென்றனர்; பொங்குகின்ற 1பிடரி மயிருடையவும் தத்துதலால் மேலிருத்தற் கரியவுமாகிய பரிவும் மிக உயர்ந்தவாயினும் மேலிருத்தற்கு இனிய பிடியும், பெயர் சொல்லி அழைக்கப்படும் எருது பூண்ட அழகிய வண்டியும் கோவேறு கழுதை யும், ஆராய்ந்து குதிரை பூட்டிய சகடமும், தண்டார்ந்த சிவிகையும் ஆகிய இவற்றில் அவர்கள் வந்து மொய்த்து விரைந்தேறிச் சென்றனர்.

முகைபோன்ற பருவத்தோரும், மணந் தங்கிய புதுமலர் விரிந்தா லென்ன பருவத்தாருமாகிய இளையரும், விரவிய நரையுடையோரும், வெகு நரையோருமாகிய முதியவரும் என்ற இவ்விருதிற மாந்தரும், கற்புடைய மகளிரும், பரத்தையரும், இம் மாந்தர்க்கும் மகளிர்க்கும் பாங்காயினாரும் ஆகிய இவர்களெல்லாம், தாளத்துக்கு ஒலிக்கின்ற வாத்தியங்களது மெல்லிய நடையைப் போலப் பிற பகுதியிலுள்ளா ரோடு ஆற்றெதிரே நடந்து சென்று அதன் உயர்ந்த கரையைச் சேர்ந்தனர். அலர் வாயவிழ்ந்தன்ன பருவத்தினர் நீரின் அழகைக் கண்டு நின்றனர்; நிரைத்த மாடங்களிற் சென்று தங்கினர்; மைந்தரோடு பொரும் விளையாட்டுப் போருக்கு ஆயத்தமாக நிரையாக நின்றனர், முன்னே செல்லும் காலாட்படைகள் போற் சென்று தாக்கினர்; நறு நாற்றத்தையுடைய பூ மிகுந்த ஆற்றிடைக் குறையைக் குறுகிக் காதலர் ஆகத்தைத் தழுவினர்; யாமத்து ஊடற்குறையாகிய இனிய கலவி விருப்பந் தரும் ஊடற்றேனை நுகர்ந்தனர்; அவ்வூடலைக் காமமாகிய குந்தாலி உடைத் தலால் ஊடலைத் துறந்து அமளி சேர்ந்தனர். ஏனைய முகைப் பருவத்து மகளிர் பூவின் மேம்பாட்டை நாடிவந்து விழும் வண்டு போலக் காதற்கணவர் தம்மை வந்து எதிர்ப்பட்டுப் புணர்தற் பொருட்டு, நீராடல் குறித்துத் தமக்குக் காவலாகிய பாட்டியரைத் தப்பி அவர் தடுத்தலையுங் கடந்துபோய், நாவாயது வரவை எதிர் கொள்வார் போல விருப்பமுற்று நிற்பர்; யான் விரும்பும் வையைப் புனலை ஆடுமிடத்துக் கூடலின் கண் இவ்வாறெல்லாம் நிகழும்.

ஒரு வீரமுடைய களிறு தனக்குப் பாங்காகிய பிடியைக் கண்டு காமத் தால் மயங்கி மெலிந்தது; மைந்தர் நடத்தவும் நடவாது அழகிய நிலையுடைய மாடத்தை அணைந்து நின்றது; அப்பிடியும் களிற்றின் மேற்சென்ற விருப்பால் மயங்கி மேலிருக்கும் மகளிரோடு நடத்தல் சுருங்கி அம்மாடத்தயலே சென்றது; அவ் அம்புலிமாடத்துப் பண்ணி வைத்த புலியைக் கண்டதும் அதனை மெய் வேங்கை யென்றும் அது களிற்றைப் பாயுமென்றும் கருதி அஞ்சிற்று. அஞ்சிய மேகத்தை ஒத்த அப்பிடி, பாகர் செய்யும் தொழிலைக் கேளாது மீதிருக்கும் மகளிர் நடுங்கும்படி வெருண்டது. அதனைக் கண்டு ஆற்றாது பிளிறுகின்ற களிறு, தோட்டியைக் கடந்து சிதைந்தது. உடனே அம்மைந்தர் அது இடி போன்ற முழக்கத்தை ஒழியுமாறு அதனைப் புலிமுக மாடத்தினின்றும் பெயர்த்துப் பிடி சிதையாமல் அணைவித்து அம்மகளிர் நடுக்கத்தைக் களைந்தனர். அத்தோற்றம் பாயும் கயிறும் மரக்கூட்டங்களும் முறிந்து சிதையப் புகாநின்ற மரக்கலத்தைத் திசையறிந்து கலங்களை ஓட்டும் மாலுமி திருத்தி அகத்தே இருந்தோரின் நடுக்கங் களைந்த தொக்கும். வையை நீர் விழவின் கண் மைந்தரும், மகளிரும், விலங்குகளும் ஒத்த அன்பின வாயின. ஐயனே! அது நின்மாட்டில்லையாயிற்று.

பெரிய கோடுடைய யாழின் கூறு, மிடற்றுப் பாடல் ஆடல் முதலி யன திண்மையை அழிக்க அழிந்த துனியுடைய மகளிரும் மைந்தரும் கூடுதற்குச் செல்லுகின்ற காதல் இருவரிடத்தும் ஒத்திருப்பவும் வெற்றி காரணமாக ஒருவரின் ஒருவர் முற்படுதலை நாணிக்கூடாது மெலிவுற்ற னர். அவ்வியல்பு, மாறுபாடுடைய மன்னர் சேனை இரண்டும் தம்முட் கண்ணுற்றுப் பொருது நொந்து சமாதானப்படுதற்கு மனத்தான் இயைந்து வைத்தும் முன்னாக யார் உடம்பட்ட தென்னும் வார்த்தை பிறக்குமென்று அஞ்சிப் பின்னும் நோவோடு நின்ற ஒழுக்கத்தை ஒக்கும்.

காமமிக் கெழ அதனாலாகிய கண்ணின் களிப்புப் புலப்படா நிற்கவும் ஊரிலுள்ளாரை மிகவுமஞ்சி அதனை ஒளிப்பாரது நிலைமை, கள்ளை மறைத்துண்டார் அதனாலுண்டாகிய நடுக்கத்தைப் பிறர் கண்டு அலர் தூற்றுவரென்னும் அச்சத்தால் மறைத்த தன்மையை ஒத்தது.

இவ்வாறு கள்ளையும் காமத்தையும் பொருந்துதலால் இவ் வையைப் புனல் கரையற்ற இன்பத்தைத் தருமியல் பிற்றாய் நின்றது.

புனலாடி இளைத்த மகளிர் தெப்பங்களை விட்டுக் கரை அடைந்து. ஈரம் புலர்த்தற்குப் பொழில்களில் அகிற்கட்டைகளை எரித்தனர். அவ்வகிற் புகை அவர் முலை முகடுகளில் மெழுகிய கலவைக் குழம்பு பெருகினாற் போலப் பரந்து திசை எங்கும் பரந்தது.

தலைக்கோலம் புனைந்து அழகு விளங்கும் நெற்றியுடைய சிலர், முகிற்படலத்தினின்றும் விளங்கும் பூரண சந்திரன் போன்ற பாத்தி ரத்தை உறையினின்றும் எடுத்துக் கள்ளை நிறைய ஊற்றிச் சர்ப்பமுறை கின்ற நிறை மதிபோற் கரத்திற்றாங்கிக் சந்திரனின் நிறைந்த கலையை உண்ணும் தெய்வ மகளிர் போன்றனர்; சிலர், தம்மை வெண்பட்டாற் போர்ப்பர்; சிலர், பூத்தொழி லுடைய வெண்பட்டைக் கூந்தல் மேற்சுற்றி முறுக்குவர்; சிலர், குங்குமச் சேறு, சேறாகச் செய்த அகிற் சாந்து, பலவகைக் கற்பூரம் முதலிய இவற்றின் உட்புறம் சேர்ந்து கலக்கும்படி அழுக்கில்லாத குழவியால் அவியுடைய குண்டத்தின் கண் அழல் போன்று நிறம் பேர அரைப்பர்; சிலர் பொன்னாற் செய்த 1நந்து நண்டு இறவு வாளை முதலியவற்றை நீரின் கண் விடுவர்.

சிலர், இரப்போர் ‘ஈ’ என்று சொல்வதற்கு முன்பே அறத்தை விரும்பி அவர் விரும்பும் தானங்களைப் பண்ணினர்; கழுவிய நீல மணி போன்ற சுருண்டு நெளிந்த மயிரிடத்தே வண்டு ஒலிக்க வாச நீரூட்டி நீராடுவர்; எண்ணெய் போகும்படி விரும்பப்படும் வாசப் பொடிகளைப் பிசைவர்; மாலையும் சாந்தும் கத்தூரியும் அழகு பெறும்படி நீருக்கு ஊட்டுவர். இத் தன்மையராகிய ஒண்டொடியார்க்குப் புனலாடலால் நிறம் ஒளிபெற்று நீரால் ஏறுண்ட முகமும் முலைக்கண்ணும் மிகச் சிவந்தன; காதலரோடு அன்ன வாகிய விளையாட்டை அயர்ந்திருக்கவும் பின்னும் புனலின் மேற்செல்கின்ற அவர் கண்கள் வண்டு மொய்க்கின்ற 2ஐந்து மணத்தினால் மாட்சிமைப்பட்ட காமபாணத்தினது அரத்தாற் கூர்மையிடப்பட்டவாய் போன்றன.

புனல் ஆடி மெலியாத மைந்தர் வாழைத்தண்டைப்பிடித்து மிதந்து சென்றனர்; திரையினும் நுரையினும் தாழம்பூவின் தாதைத் தூவினர்; விசை யுடைய ஓடத்தின் கண் ஏறி அதனை விரைந்து செல்லும் புனல்வழியே செலுத்தினர்; புனல் விளையாடி உண்டான மெய்வருத்தத் தால், பெண்கள் இழைத்த சிற்றிலில் அட்ட சிறு சோற்றைத் தாம் உண்டற்கு ஏற்றனர்; முன் இடுவாராய்ப் பின் மறுப்பாராகிய மகளிருடைய பந்தும் கழங்கும் பிறவுமாகியவற்றைக் கொண்டோடினர்; ஓடி அவரறிந்து வாங்கச் சென்றுழி எட்டாமல் நீருட் பாய்ந் தனர்; பின் அவர் தம்முள் மாறுபட்டு வேலானும் வாளானும் பொய்ப் போரிழைத்தனர். அதனால் யானைகள் போர் செய்து உழக்கிய களம் போல் இனிய தன்மையுடைய புனல் தெளிவின்றாயிற்று.

மாலைக்காலத்தே சந்திரன் பெரிய இருளைப் போக்கிற்று. நீராடச் சென்றோர் வீடு திரும்புவாராயினர்; மகளிர் புதிய இயல்பினை யுடைய அணிகளை நீக்கி மலர்ந்த பூக்களைச் சூடினர்; தோளணி, தோடு, மற்றுமுள்ள ஒளிவிடும் ஆபரணங்கள், முத்து வடம் ஆகிய இவற்றை அணிந்து பாடுதற்குரிய பாடல், பல்லாண்டு முதலாகிய பரவுதலும் பாடினர். ஆடுதற்குரியாரது ஆடலும் அதற்குப் பொருந்தின 1சீருடன் கூடிய தாளமும், அவர் கூந்தலின் மீது வந்து ஊதும் தேனீக்களது செறிந்த பாடலுமாகிய ஓசை எல்லாவற்றோடும் எழுகின்ற பண்ணொலி யைக் கேட்ட ஊரிடத்துள்ள வண்டுகள் தம் மினத்தின் ஆர்ப்பு என்று கருதி அவ்விடத்தே வரும்; வந்து மலர்ந்த மாலை வேய்ந்த அம்மகளிரின் மயிர்க் கற்றைக் கண் உள்ள தேனைக் கொள்ளை கொண்டு ஊத எல்லோரும் தென் திசையை நோக்கி மீள்வர். அப்போது ஊரிடத்தே மாடங்களின்றும் தெறித்த பன்னீர் மணத்தோடு கூடிக் காற்றுத் திரிய அதனோடு மாடத்துள் நின்று புறப்பட்டுப் பரக்கும் அகிற்புகை மலை யிற் பூங்கொடிகளிடத்துத் தங்கிப் பின் மேல் மண்டி ஏறும் வளர் பனி ஆவி போன்றது. துன்பமறியாது தானே வருகின்ற புனற்கு விருந்து செய்யும் கூடற்கண் குற்றமின்றி இசைக்கின்ற இசைக்குரிமை யுடைய ராகிய பாணரும் கூத்தரும் மேவிய கூட்டத்தோடு ஒருங்கே ஏத்தித் தொழுதற்பொருட்டு, இன்மையாற் பற்றப்பட்ட புலவரது ஏற்ற கை நிறையப் பொன்னைச் சொரியும் வழுதியைப் போல வையை, வயலி டத்தே பொன்னைப் பரப்புந் தொழிலை மாறாதொழிக.

கரும்பிள்ளைப் பூதனார்

11 வையை
(இது, வரைவு நெருங்குதலை வேண்டிய தோழி கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டே மென வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது)
1இடபவீதி, மிதுனவீதி, மேடவீதி என வீதிகள் மூன்று. ஒவ்வொரு வீதிக்கும் ஒன்பது நாள்களுண்டு.

வெள்ளி இடபத்தைச் சேரும். செவ்வாய் மேடத்தைச் சேரும். புதன் மிதுனத்தைச் சேரும். கார்த்திகை உச்சமாக விடிதல் உண்டாகும். வியாழம் சனியின் இரண்டு வீடுகளாகிய மகர கும்பங்களுக்கு அப்பா லுள்ள மீனத்தைச் சேரும். இயமனைத் தமையனாக வுடைய சனி தனுவுக்குப் பின்னுள்ள மகரத்தைச் சேரும். அக் காலத்து இராகு மதியை மறைக்கும்.

இவ்வாறு கோள்கள் நிலை பெறுகின்ற ஆவணி மாதத்து நிறையு வாக் காலமாகிய அவிட்டத்தில் அகத்தியன் என்னும் மீன் உயர்ந்த தன் இடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்தும். முறுகின வெயிலுடைய வேனிலுக்குப் பின் வருகின்ற அக் கார்கலத்து உயர்ந்த சைல மலைக்கண் மழை பொழியும். அந் நீர் வரவால் நிறைந்து ஓடுகின்ற வையைப் புனல், வரை ஒத்த புன்னாகத்தினதும். கரையிடத் தோங்கிய சுர புன்னையின தும், வண்டுகள் ஒலிக்கின்ற சண்பக நிரைகளினதும், செவ்வலரியினதும், கூவிளையினதும், கிளையுடைய வேங்கை மரத்தினதும் மலர்களையும் சுனையிடத்துள்ள காற்று முறுக்கவிழ்க்கும் நீலம், மூங்கில் வளரும் சோலையிடத்துள்ள மலர் ஆகிய இவற்றையும், சாரலிற் சோலைக் கண்ணே கொண்டு வந்து சொரியும். அவற்றைத் திரைகள் தள்ளிக் கொண்டு வந்து மருதத் துறைக் கண்ணே தரும். அத்துறை, பூவினை ஆராய்ந்து பறிக்கும் கோலினையுடைய வலிய குடிகள், நிறமுடைய பூக்களைக் கொண்டு வந்து குவிக்கும் பூ மண்டலமோ? அரிய மலர்ப் போர்வையும், முத்துக்களை அணிந்த மலையாகிய தனங்களும், திரையும் நுரையும் குமிழியும் இனிய மணமுமுடைய நிலமாதின் அல்குற்கு அணி யும் சீலையோ? கள்ளை வாய் கொண்டு பருகும் அவள் மிடறோ? என்று சொல்லும்படி யிருந்தது.

(வரைவு மலிந்த தோழி வையையின் சிறப்பை இதுவரையுங் கூறி, இனி அதனைக் கண்டார் கூறியதாகக் கூறுகின்றாள்.)
வையைப் புனல், பிறைதோன்றிய நாள் தொடங்கி நாடோறும் ஒரு கலை வளர்கின்ற முற்பக்கம் போல, நாளுக்கு நாள் பெருகும்; நிலவு எங்கும் பரந்தாற்போல மலைச்சாரல் தொடங்கியுள்ள நிலத்தில் நீரைப் பரப்பி உலகுக்குப் பயனளிக்கும். அமரர்க்குப் உணவாகிய அம்மதி நிறைவு சுருங்கினாற்போல நீர் வரவு சுருங்குமிடத்தும், எட்டாம் பக்கத்து மதியளவு ஆதலன்றி, இருள் உவாவினைப் போல நீர் நேராகக் குறைதலையுடைய நாளைக் காண்கின்றாரில்லை. “நெடுந்தூரத்தைக் கடந்து வந்த வையாய்! பெருகின காலத்துப் புதிய அழகையன்றி வற்றின நாளையின் நின் அழகையும் உலகம் பெற இந்நீர் மிகுதியைத் தணிந்து ஏகுக.

“வையாய்! மறையிற் புணர்ந்த மைந்தரும் மாமயி லன்னாரும் காமத் தாற் சிறப்புடைய அக்களவொழுக்கத்தை விட்டு, இனிவந்த கற்பொழுக்கத்தை யுற்றாற்போல, நீ பிறந்த இடமாகிய மலையை விட்டு இருத்தற்குரிய கடற்றலைவன் இல்லத்து நீ தனியே சேறல் இளிவரவாகும்; ஆதலால் ஆண்டு செல்லற்பாலையல்லை,” எனக் கண்டோர் கூறினர்.

எல்லை அற நீண்டு அகன்ற கண்ணுடையாளை, உடன்கொண்டு வேல் துணையாகச் சென்ற தலைவனை, அவள் சுற்றத்தினர் இடைச் சுரத்துச் சென்று பொருதாற்போல, வெற்றியுடைய மதுரையார் இடையே புகுந்து நீராடுதற்கு ஏற்ற ஆறு இதுவாகும். கிடை முதலியவற் றாற் செய்த வாள் குந்தம் முதலிய படைகளைத் தாங்கிய நீராடு மகளிர தும் மைந்தரதும் தேர்களை மைந்தரும் மகளிருமாகிய பாகர்கள் ஆழ்ந்த வெள்ளத்துள் ஊர்ந்து சென்றனர். கணுக்களுடைய அழகிய மூங்கிற் தண்டால் தெப்பங்களை நீரிடத்து ஓட்டுவோரை அரக்கு நீர் நிரப்பிய வட்டால் எறிவோரும், கழற்றிய மாலையினால் எறிவோரை அழுத்த மான கொம்பு நீரால் தெறிப்போருமாகிய காதலர், இவ்வையைப் புனலிடத்து நாளுந்திளைப்பர்.

(இனி வேனிற்காலத்தில் நீராடற் சிறப்பினைக் கூறுகின்றார்)
மைந்தர், நீராடற்கமைந்த அழகிய அகலத்து, அலங்காரத்துக் கேற்ற ஆபரணங்களையும் தண்ணிய மாலையையு முடையராயிருப்பர். அவர்களோடு, நல்ல வளர்கின்ற புண்ணியத்தைச் செய்த நாகரைப் போல இடைவிடாது இறுகப் புணர்தற்கு மகளிர் இனிய இளமதுவை நுகர்வர்; நுகர்தலால் களிமிகுந்து, தாள மமைந்த பாடலின்பத்தால் தஞ்செவியை நிறைப்பர்; அவர்களின் (ஆடவரும் மகளிரும்) அழகாகிய மதுவை ஒருவரின் ஒருவர் கண் உண்ணும். இவ்வாறு மகளிரும் மைந்த ரும் நீராடிக் களிக்கும் வையை ஆறு, உம்பர் உறையும் ஒளியுடைய வானத்தின் கண் அவர் ஊர்ந்து திரியும் விமானங்களைக் காட்டும் நீரோட்டத்தையுடையது.

வையாய்! இவ்வாறு கார் காலத்திற் கலங்கி வேனிற் காலத்துத் தெளித லான இத்தன்மை எக்காலத்தும் ஒத்திருப்பதில்லை. கார் காலத்து அதிர்கின்ற இடி நீங்கப் பனி மிகுதலால் நடுங்குதலுடைய முன்பனிப் பருவம் வந்தது. ஞாயிறு வெம்மையைச் செய்யாத கடை மாரியுடையது மார்கழி மாதம்; அம் மாதத்துத் திங்கள் மறுவோடு நிறைந்த திருவாதிரை நாளில் ஆகமங்களை உணர்ந்த பூசகர் திருவாவதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்கு விழா எடுப்பர்; அவர்கள் எடுக்கும் விழா நடைபெறவும், புரிநூலையுடைய அந்தணர் பொன்னைத் தானமாகப் பெறவும் நிலம் மழையாற் குளிர்வதாக.

வையாய்! சடங்கறிந்த முது பார்ப்பனிமார் நோற்கு முறைமை காட்டக் கன்னியர் அம்பாவாயாடுவர். பனியுடைய வைகறைக் கண் குளிர்ந்த வாடை வீசுதலால் அம்மகளிர் நின்கண் உறையும் அந்தணரது வேதநெறியால் வளர்ந்து ஆடி எரிகின்ற அனலைப் பேணுவர்; அதனிடத் துத் தம் ஈர உடையைப் புலர்த்துவர். வையாய்! அவ்வந்தணர் அவ்வழற் கட் கொடுக்கும் மடை நினக்கு வாய்ப்புடைத்தாயிருந்தது.

ஒலை பிடித்த இளம் புலவரது வருணனை போல, எழுந்து காமக் குறிப்பில்லாத விளையாட்டைச் செய்கின்ற மகளிர், அக்கினி மத்தியில் புலனை அடக்கிச் செய்யுந் தவத்தை முன் அடுத்தடுத்துச் செய்தத னாலோ? தாயருகாக நின்று தவமாகிய தைந் நீராடலை நின்கட் பெற்றது. மகளிர் ஆடுமிடத்தே ஒருத்தி, மூங்கிலின் அழகை வென்ற தோளையும் நீலத்தைச் செவித்தாராகவுமுடைய ஒரு மாதைப் பார்த்தாள்; அவள் குறிப்பறிந்த அம்மாது அப்பொழுது குளிர்ந்த அசோகினது சாய்ந்த தளிரைத் தன்காதில் அணிந்தாள். பரந்த குழலையுடைய அவள் அணிந்த நீலம் அசோகந்தளிரின் செம்மையால் இளவெயில் போல் விளங்கிற்று.

குழையணிந்த தன் அழகிய காதிடத்தே குவளையைச் செருகி நான்கு விழி படைத்தாள் ஒருத்தியைக் கண்டு மற்றொருத்தி நெற்றியில் சிவந்த திலகமிட்டுக் கொற்றவையின் கோலங்கொண்டாள்.

பவழ வளையைக் கையிற் செறித்தாளொருத்தியைக் கண்ட ஒருத்தி குவளைப் பூவின் மரகதம் போன்ற பச்சைத் தண்டைக்கொணடு தன் கையை அலங்கரித்தாள். குளிரிப் பூவால் மாலை தொடுத்தாளை நில்லென்பாள் போல வேறொருத்தி மல்லிகை மாலைக் கண் நெய்தலை விரவித் தொடுத்தாள்.

(இனி அவர் கருத்தும் அவர் வேண்டிக் கோடலும் கூறுகின்றார்)

முன் வையையுள் வாழைத் தண்டைத் தழுவி ஆடி நின்றவன் ஒருத்தியைக் கண்டான். கண்ட பொழுதில் அவன் நெஞ்சு அழிந்தது. அதனால் புனல் அவன் கையை வலித்தது. நெடுந்தூரம் வலித்து அவன் விரும்பின அவளிடத்துக் கொண்டு செல்லாது வேறிடத்துக் கொண்டு சென்றது. அதனைக் கண்டு அவள் ஆயத்துடன் நில்லாது அவனைத் தொடர்ந்தாள். அவள் அன்புடைமையை அறியாத தாய் மகளைத் தனியே செல்லாது ஆயத்தோடு சேர்ந்து நிற்கும்படி சத்தமிட்டாள். கரையைப் பொருது வரும் சிவந்த கார்காலத்து நீர் வரவு இவ்வாறு ஆரவார முறும்படியிருந்தது.

அந்நீர் போலாது யாம் தைந்நீராடுதற்கு நிறந்தெளிந்தாய்; ஆதலால் நீ தக்காய், எனக் கண்டோர் கூறினர்.

கழுத்திலே இட்ட கையை எடாத காதலரைத் தழுவிப் பெருமை பெறும்படி வரம் வேண்டுதும் என்பாரும், பூவில் வீழ்கின்ற வண்டு போலப் புலம்பிப் பிரியாது கணவரும் யாமும் பொருந்தியிருப்போமென வேண்டி நிற்பாரும், எம் கணவரும் யாமும் கிழவர் கிழவியர் எனப்படா மல் நிலை யுடைய இளமையை இத் தவந்தரச் செல்வத்தோடும் சுற்றத்தோடும் நிலை பெறவேண்டும் என வேண்டி நிற்பாருமாக மகளிர் பலவாறு வரம் வேண்டி நின்றனர்.

(இனி ஒருவன் உவந்தவற்றைக் கூறுகின்றாள்)

இக்காரிகை வருத்துகின்ற தெய்வம் இவளைக் காண்மின். உவள்
காமப் பண்டாரமும் காமன் படையுமாயிருந்ததலைப் பார்மின்; நெய் பூசிய நீலமணி போன்ற கூந்தலையுடைய மகளிர் விலக்க நில்லாது அவர் கூந்தலிடத்துள்ள பூவை ஊதும் வண்டினங்களின் யாழை ஒத்த ஓசை யுடைய பாட்டைக் கேண்மின். அப்பாட்டின் பொருள் விளங்காதிருக்க இனிதாகப் பாடுகின்ற சுரும்பினது இசையைக் கேண்மின். தான் வீழ்ந்த பூவின் ஒடுங்கிய தாளை முனிந்த நெஞ்சுடனே முன்னே எறிந்து பின்னும் எறிதற்கு ஒலித்துவரும் ஒரு தும்பியின் காய்சினத்தின் இயல்பைக் காண்மின் என்று ஒருவன் காட்டா நின்றான்.

(இங்ஙனம் தை நீராடல் கூறி மேல் தலைமகள் கேட்ப வையையை நோக்கிக் கூறுகின்றாள்)
இனிய இயல்பால் மாட்சிமைப்பட்ட தேர்ச்சி பொருந்திப் பரிபாடலாற் சிறப்பிக்கப்பட்ட நறுநீர் வையாய்! மின்னிழையையும் நறுநுதலையுமுடைய மகட்டன்மை மேம்பட்ட கன்னிமை முதிராத கைக்கிளைக் காமத்தைத் தருகின்ற நின்னிடத்து இத்தைந் நீராடலை முற்பிறப்பிற் செய்த தவத்தாலே இப்பிறப்பிற் பெற்றேம்; அதனை யாவரும் நயக்கத்தக்க நின்னீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பினும் பெறுவோமாக.

ஆசிரியர் நல்லந்துவனார்

12 வையை
(இது கார்ப்பருவத்து வையை விழாச் சிறப்பின் பல்வேறு வகைப் பட்ட இன்பங்கூறி, இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்தில ரென வையையை நோக்கித் தலைமகன் கேட்பத்தோழி இயற்பழித்தது)

காற்று வானிடத்தே மோதி அடித்தது. வானம் மின்னலையும் இடியை யும் மாறிமாறிப் பரப்பாநின்றது. சைலமலையிடத்தும் அதன் கிளைகளிடத்தும் இடைவிடாது மழை பெய்தது. அதன் சாரலிடத்தே உதிர்ந்த மலர்கள் நீர்மேல் மிதந்தன. கரைக்கண் நின்ற நாகம், அகில், வாழை, ஞெமை சந்தனம் முதலியன வருந்தத் தகரத்தையும் ஞாழலையும் தேவதாரத்தையும் ஏந்திக் கொண்டு வருகின்ற வையையின் காற்றுப் போன்ற வரவு, ஒரு கடல் உயர்ந்து வருவது போன்றது.

தன்மேல் மலரைப் பரப்பிக்கொண்டு வரும் வையை யாறு மதுரை யின் மதிலைப் பொருமெனக் கேட்ட பெண்கள்,புதுப்புனல் ஆடுதற்கு மின்போல் விளங்கும் ஆபரணங்களை அணிந்தனர்; பொற்றகட்டாற் செய்த பூவைச் சூடினர்; சந்தனச் சாந்தை மாற்றி அகிற்புகையினாலாகிய சாந்தைப் பூசினர். கரிய கூந்தலை வாரிமுடிந்தனர்; வெட்டிவேராற் கட்டிய பலவகை மலரைச் சூடினர்; நீராடுதற்குரிய புடைவைகளை அலங்கரித்துடுத்தனர். கட்டிய கொக்கி அழகு செய்யும் வடங்களைப் பூண்டனர்; வாச எண்ணெய் பூசி வெண்கற்பொடியாற் குற்றந் தீரும்படி கண்ணின் அடியை விளக்கினர்; இயற்கை அழகையும் செயற்கை அழகை யும் கலவியால் வந்த நிறத்தையும் (ஆடியில்) விளங்க நோக்கி, (தக்கோலம் இலவங்கம் கப்பூரஞ் சாதிக்காய் முதலிய) பஞ்சவாசத்தோடிடித்த பாக்கை வாய்க்கண் இட்டனர்; இரண்டு அந்தலையும் மூட்டுவாய் தெரியாது இருக்கும்படி செய்த 1ஆணியிடும் வளையுடன் செறிக்கும் தோள்வளையுடையராயும், கட்டுவடத்தோடு கால் மோதிரம் உடையரா யும், தேனொழுகும் மாலையணிந்தவராயும், ஒரு யோசனை நாறும் வாசனை தடவியவர்களாயும் குதிரைகள் மீதும் யானைகள் மீதும் இவர்ந்து அன்னப் பேடைகள் போற் சென்றனர்; ஒலிக்கின்ற மணிகள் பூண்ட தேர்களிற் பூட்டிய குதிரைகளை முட்கோலால் உறுத்தி ஓட்டி னர். இவ்வாறு மகளிர் விரைந்து விரைந்து சென்று கூடவும் கூடலா ரெல்லோரும் புகழவும் வையை நீர் வந்தது. அதனைக் காண்பவரீட்டம் அதன் கரையை ஒப்பவந்தது. வெள்ளம் கரைக்கு மேல் ஏறிக் காண்பவர் களின் காதல் வெள்ளத்தை யெல்லாம் பருகியது போலப் பெருகிற்று.

(இவ்வளவும் பாணன் தலைமகனுக்குப் பருவ வரவும் வையை நீர் வரவும் கூறியது.)

இனி வையையின் வரவைக் காண வருவார்க்கு, முன் வந்து கண்டவர் தாம் கேட்டவற்றைக் கூறுகின்ற தன்மையானும் காட்டுகின்ற வாற்றானும் விழா வணியின்பம் கூறப்படுகின்றது.

துறைமுன் நெருங்கி அணியாக நின்றவர் மொழிகின்ற மொழி ஒன்றையொன்று ஒவ்வாது பல பல வாய் ஒரே நேரத்தெழுந்தது. அவற்றை எல்லாம் தெரியக் கேட்க வல்லார் யார்? அவை கேட்டல் கூடா; அவற்றுள் யாம் கேட்டன சிற்சில.
வங்கியத்தின் இசை எழுந்தது; முழவு மத்தரி தடாரி தண்ணுமை முதலிய ஓசையுடைய தாளத்தை அளந்து ஆடும் அரிவையர் தமது நேரிய இறையுடைய முன் கைகளைத் தூக்கித் தாளத்தை அளத்தலைக் காண்மின்.

ஒருத்தி நாணுக் குறையில்லாத குலமகளாக யிருக்கச் சிறந்த கணவன் தன் தோள் நலத்தை யுண்டு பரத்தையிற் பிரிந்தான். அது கண்டு அவள் அவனோடு புலந்து இப்போது புனல் வெள்ளத்திலே அவனோடு பிடியின் முதுகில் ஏறினாள். தோழீ! அந்நங்கை நாணுடையளல்லளோ? என்று சிலர் கூறினர். பூங்கொம்பை ஒப்பாளது குவிந்த முலையை, அரங்கின் கண் நின்று நோக்கி நின்றவன் ஓட்டை மனத்தன்; திண்மை யில்லாதான் என வேறு சிலர் கூறினர். சொறிந்ததூஉம் சொன்னதூஉம் அறியாது நிறை அழிந்து நிறம் மாறுபட்டு. வழியே செல்லும் ஒருவன் பின் இவள் நெஞ்சைப் போக்கினாள்; அன்பு மிகுந்தால் நிறையழிதற்கு அஞ்சி, அதன் மிகுதியை (மிகுந்த அன்பை) விடக்கடவேம் என்பர் சிலர். இக்காரிகை பூண்ட முத்தாரத்தினது அழகை உவன் நோக்கி இம் மாலைகளுக்கேற்றன இவை என நெருங்கிய முலை களைப் பார்த்தான். அதற்கு அவள் நாணினாளல்லள் என்றனர் சிலர்.

அணங்கை ஒப்பான ஒருத்தி அமிர்தத்தை ஒத்த நோக்கால் ஒருத்தி யின் கணவனைப் பார்த்தாள். அது பொறாத அவன் மனைவி அவனைத் தன் மாலையைக் கோலாகக் கொண்டு அடித்துத் தன் மார்பின் வடத்தை வாங்கி அவன் கையை இறுகக் கட்டினாள். கட்டி நீ பிழையையுடையை என்றனள். அது கண்ட அவன் தொழுது தான் செய்த பிழையாதெனக் கேட்கும் தூயவனைக் காண்மின். ஒருத்தி நின்னைப் பார்த்தாளென்று ஒருத்தி தன் கணவனை நோக்கிக் கூறினாள். அவன் அவளைப் பார்த்து நீ இவளை யானறியே னென்று இரந்து மெய்யாகிய சத்தியஞ் செய்தான்; அதனை அவள் பொய்ச்சூளென்று சொன்னாள். அஞ்ஞான்று அவள் ஊடல் தீர்க்கும் அவனைக் கூடாது, அச்சூள் காரணமாக மிக்கும் வெகுண்டும் புலந்தாள்; புலந்து பூ நாற்றத்தையும் அழகையுமுடைய அரக்கு நீர் நிரப்பிய வட்டை அவன் வலிய மார்பில் எறிந்தாள். வேல் போன்ற கண்பட்ட புண்ணில் இரத்தம் சொரிவது போல அரக்கு நீர் சொரியப் பகையின்றி உள்ளஞ்சோர்ந்து ஆற்றானாய் நேர் நில்லாது நீங்கி அவளை வணங்கினான்; தான் அவன் வலிய மார்பில் எறிந்ததால் விழுந்தா னென்றஞ்சி மயங்கினாள்; உடன் முன்னுள்ள துனி நீங்கித் தன் கணவன் ஆகத்தைச் சேர்ந்தாள்; இவ்வாறு சேர்வித்தலை வையைப் புனல் இன்றே யன்றி என்றும் செய்திடும்; இதனைக் காண்மின், என்று சிலர் காட்டுவராயினர்.

மல்லிகை, முல்லை, மணங்கமழுஞ் சண்பகம், அல்லி, செங்கழுநீர், தாமரை , ஆம்பல், குல்லை, மகிழ், குருக்கத்தி, பாதிரி, நல்ல பூங்கொத் துடைய நாகம், நறவு, சுரபுன்னை முதலியவற்றின் பூக்கள் கமழும் இருகரைகளிலும் கலங்கிய நீர் ஏறித் தெளிந்து செறிந்த இருண்ட கரிய பாறைமீது தங்கி நின்று மேலுலகத்தின் அழகைப் பிரதிபலித்துக் காட்டும். இருள் நீங்கும் வைகறைக் காலையில் வையை நீர் கலங்கி இரத்தத்தின் தன்மையுடையதாயிருக்கும். போரை வெல்லும் பாண்டிய னது இவ்வகையான ஆற்றிடத்தே ஒருத்தி. மாட்சிமைப்பட்ட காதணி போலத் தூங்கும்படி சிவந்த அசோகின் புது மலரைக் காதிடத்தே செருகினாள். செருகி முறுக்குவிட்ட மலரைத் தாங்கும் பூங்கொடி போல வளைந்து அடிமேல் அடிவைத்து நடந்து வளையணிந்த முன்கையாலே தன் கூந்தலிற் கண்ணியை அழகுண்டாகும்படி திருத்தினாள். அந் நல்லவள் செய்த குறிப்புகளால் இவ்விடத்து நிற்பவன் அவள் கணவனா யிருந்தான்; அதனைக் காண்மின் என்று சிலர் காட்டினர்.
துகிலின் கட் சேர்ந்த பூத்தொழில் போலப் புனலின் கண் நீரினை யுடைய 1மணி நிறைந்தது. புனலாடுவோர் வார்த்தையின் ஆரவாரம் அப் புனலைப் போன்ற மதுரையிடத்து மிகுந்தது. அவர்களின் அழகு அவர்கள் உரைகளிடத்தே மிகுந்தது. அவ்வழகு மிகுந்து பிற அழகோடு மாறுகொண் டது. அவர் மார்பினின்று அழிந்து வீழ்ந்த தகரச் சாந்தால் மணல் சேறாந் தன்மைப்பட்டது. துகிலினின்று பொசியும் நீரினால் கரைகள் மழை பெய்தது போன்றன. புனல் விழாவால் வானுலகம் சிறப் பொழிந்தது.

வையாய்! நின்னால் ஆரவாரமுடைய மூதூரின் வாழ்வார்க்கு இன்பமும் கவினும் நல்ல பலவகைப்பட்டன வாயின; அதனால், இவ் வுலகு அகன்ற இடத்தை யுடைத்தாயினும் நின்புகழை அடக்க மாட்டாது.
நல்வழுதியார்

13 திருமால்
கடவுள் வாழ்த்து
நின் பூத் தொழிலுடைய பீதாம்பர உடை, நீலவரைக் கட்பரந்த இருளைக் கெடுக்கும் இள ஞாயிற்றினது அழகமைந்தது. அழகு செய்யப் பட்ட முடி நீலவரையை ஊரும் அஞ் ஞாயிற்றின் எழில் போன்றது. அந் நீலவரையினின்று இழியும் பொன்னையும் மணிகளையுமுடைய அருவி யின் நிறத்தை ஒத்தது நின் தார். நின் அழகிய கொடி கருடனை எழுதப் பெற்றது. விண்ணின் கண் நின்று அருளுகின்ற நிறைமதியை ஒக்கக் குளிர்ந்த காத்தற் றொழிலைக் கொண்டவரும், அசுரரை வருத்தும் சக்கரப் படையைத் தரித்த வருமாகிய மாலே1

கார்கால மேகத்தின் இருபாலும் விளங்குகின்ற சந்திர சூரியரைப் போல நின் கைகளிடத்தே சக்கரமும், சங்கும் ஒளிரும். மின்னற் கூட்டம் போல் ஒளி விடுகின்ற பொன்னாரத்தோடு, அருவி பாய்வது போன்ற முத்தார மணிந்த நின் திருமார்பைத் தொழுவோர்க்கு நீ உறையும் வைகுண்டமும் உரிமையாதல் உடைத்து.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் முதலிய புலன்களும் நீ; அவற்றை நுகரும் பொறிகளும் நீ; புலன்களுள் ஓசை அறியப்படும் விசும்பு நீ; ஓசையும் ஊறும் அறியப்படும் காற்று நீ; ஓசையும் ஊறும் ஒளியும் அறியப்படும் நெருப்பு நீ; இவற்றோடு சுவையும் அறியப்படும் நீரும் நீ; சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்தும் அறியப்படும் நிலனும் நீ. ஆதலால் 1மூலப் பகுதியும் அறனும் அநாதியான காலமும் ஆகாயமும் காற்றோடு கனலுங் கூடிய இம்மூவேழு உலகத்து உயிர்களெல்லாம் நின்னிடத்த வாயின.

தன் நீல நிறத்தோடு மாறுபடும் வெண்மை நிறத்தினையுடைய பாற்கடல் நடுவே மின்னலை ஒத்து விளங்குகின்ற, சுடர்விடும் மணி யோடு விரிந்த ஆயிரந் தலையுடைய படுக்கையிற் துயிலும் துளவஞ்சூடிய அறிதுயிலோன் எனவும், மிக்க ஆரவாரமும் வீரமும் பொருகின்ற மிக்க படை யுடனே, ஒழுக்கத்தைக் கடந்து வரும் பகைவருயிரைப் போக்கும் வெற்றி மிகுந்த வலியும், ஓசை மிகுந்து நிலத்தை உழும் வளைந்த வாயுடைய கலப்பைப் படையுமுடைய பல தேவனெனவும், பூமி அசையும்படி எடுத்தற்கு முற்றாகச் சாய்த்த பொன் இதழுடைய அழகிய கிம்புரி பூண்ட மருப் பினையுடைய பன்றி எனவும் மூன்றுருவாகப் பிரிந்து ஒன்றாய் விளங்கும் ஒருவன் நீ. பரந்த சிறகும் பல நிறமுமுடைய கருடனைக் கொடியாகக் கொண்ட சலியாத செல்வன் நீ. ஓதுதற் கினிய வேதம் துதிக்கின்ற புள் உயர்ந்த கொடியுடைய செல்வ! நல்ல புகழுடைய மேகம், காயாம்பூ, கடல், இருள், நீலமணி என்னும் ஐந்தையும் ஒப்ப விளங்கும் அழகிய மேனியுடையை.

நின் அருளுடைய மொழி வலம்புரி முழக்கையும் வேத முழக்கை யும் ஒக்கும்; நின் முனிவிடத்து எழும் மொழி வான்முழக்கை ஒக்கும். நின்தாள் நிழல் இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூன்று காலக் கூறுபாடு களையுங் கடந்தன. நின்னை ஏத்துமன்பர் இருவினையு முடையரல்லர். காத்தலாகிய ஒரு வினைக்கண் மேவுகின்ற உள்ளத்தினை! இலையின் மேல் உயர்ந்து மலர்ந்த பெரிய இதழ் உடைய தாமரை மலர், நின் அடியும், கையும், கண்ணும், வாயும், தொடியும், உந்தியும், தோளணி வலயமும், தாளும், தோளும் கழுத்து மாகும் பெருமை யுடையை; மார்பும் அல்குலும் மனமும் பெரியை; அன்பர் குறையைக் கேட்டு அறியும் அறிவும், அறிந்து அருள்புரியும் நுண்மையு முடையை; வேள்வியை விரும்புதலோடு போரிடத்துக் கொடுமையை; நீங்காத வலியினையும், பொராதிருக்கவே சிவந்த கண்ணையும், சக்கரப் படை யாற் செய்யும் வெல்லும் போரையுமுடைய செல்வ! நிறத்தால் நெருப்பை ஒத்த வெட்சிமலரை இடையே வைத்துக் கட்டின நறிய துளப மாலையை அணிந்த மார்புடையோய்! பண்டும் பண்டும் யாம் செய்த தவப்பயனால் இத்தன்மையை என நினைந்து நின்னடியைக் கையாற் றொழுது பலகாலும் அடுத்து இறைஞ்சி வாழ்த்துகின்றேம்; யாம் மென்மேலும் ஆசைப்படுகின்ற பொருள் இதுவேயாம்.

நல்லெழுநியார்

14 செவ்வேள்
கடவுள்வாழ்த்து

(பருவங்கண்டழிந்த தலைமகள் கேட்பச் செவ்வேளைப் பரவுவா ளாய், இப்பருவத்தே தலைமகள் வருமென்பதுபடத் தோழி வற்புறுத்தி யது)
மேகம் பெரிய மழை பொழிந்தது. அம்மிகுந்த நீரான் நிறைந்த சுனைகளிடத்துள்ள பூமலர்ந்தன. தண்ணிய நறிய கடப்ப மலரின் தாதை அழகிய வண்டுகள் பண் போன்ற ஒலியுடன் ஊதின. நெடிய மலையிடத் துள்ள மூங்கில்கள் வழிபடுகின்ற மகளிரின் அசைகின்ற தோள்களை ஒத்தன. வாகையின் ஒள்ளிய பூப்போன்ற சூட்டையுடைய மயில்களது குரல் மணந்து பிரிந்தோரைப் பிரிந்து நீடி யாது வாருமென்பவர் சொற்கள் போன்று ஒலித்தது. கொன்றையின் புதிய மலர்கள் பொன் தார் போன்று விளங்கின. அழுகையுடைய மகளிர்க்கு அது தீர்த்தற் பொருட்டுத் தாயர் புலி புலி என்று சொல்லுமாறு வேங்கையின் மலர்கள் பெரிய பாறையிடத்தே பரந்தன. நீரின் அயலே செருக்கி வளர்ந்த நெருங்கிய முகையுடைய காந்தளின் நீண்ட கொத்தின் அலர்ந்த பெரிய இதழ் நிரையாகத் தோன்றும். கொடிகளிடத்து மலர்ந்த பவளம் போற் சிவந்த பூக்கள் பரந்து கிடத்தலால் நின் குன்று கார் காலத்தன்மை மிக்கது.

மிகுந்த போரிடத்துக் சூரபன்மாவைக் கிளையோடு அழித்த சுடர்விடு கின்ற படையுடையோய்! கறையில்லாத கார் காலத்து வெண் மேகம் எழுந் தாலன்ன நறிய அகில் முதலியவற்றின் புகையை விரும்பி னோய்! ஆறு முகத்தையும் பன்னிரண்டு தோள்களையு முடையாய்! அழகாற் பிறமகளிரை வென்ற வெற்றியுடைய வள்ளியது நலத்தை நயந்தோய்! பிரிந்த கணவர் மீண்டு வந்து புணர்ந்து பின் நீங்கா துறைதற் பொருட்டு வரம் வேண்டி மகளிர் யாழை மீட்டு நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினோய்! பிறந்த ஞான்றே நின்னை எதிர்த்து இந்திரன் முதலாகிய தேவர்கள் அஞ்சிய சிறப்புடையோய்! இருபிறப்பினையும் அப்பிறப்பான் வந்த இரண்டு நாமத் தினையும் இளகிய நெஞ்சத்தினை யும் ஒப்பில்லாத புகழினையு முடைய அந்தணரது வைதிக ஒழுக்கத் தினைப் பொருந்தினோய்! நின்னை யாங்கள் மேவி அடுத்தடுத்து வழிப்படுவதன் பயன், அவ்வழிபாடுகள் மென்மேலும் நின் புகழினும் பல வாகுதலே யாகும்.

கேசவனார்

15 திருமால்
கடவுள் வாழ்த்து

அறிவின் எல்லையால் அறியப்படாத புகழுடனே நில எல்லை யைக் காட்டுகின்ற தன்மை நீங்காததும், கெடாததுமாயுள்ளது சக்கர வாள மலை, இம் மலை முதலாகப், பழைய புகழுடைய புலவர் ஆராய்ந்து பாடிக்கொண்டாடிய நெடிய குன்றுகளைச் சிறப்பு வகையாற் கூறாது, பொது வகையாற் பல வென்றுரைக்கின், அப் பலவற்றுள்ளும், நிலத்துள் ளோரைப் பசிவெம்மை ஆற்றி நிறை பயன்களெல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படு குன்றுகள் சிலவாகும். அச்சில வற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலரையுடைய அகன்ற நீர் நிலைகளுடனே மேகங்கள் படியும் சிகரமுடைய சிறந்த மலைக் கூட்டங்கள் சில. அக்குல வரைகள் சிலவற்றினும் கல்லென அறையும் கடலும் கானலும் போல் வேறு வேறாகிய நிறத்தினையும், பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனையும் அவன் தமையனாகிய பல தேவனையும் தாங்கும் நீண்ட நிலையினையுடைய புகழாலமைந்த1 பெரிய குன்றம் சிறந்தது.

அரவு மெல்லிய தலையாற் கவிக்கின்ற தம் முன்னோன் மார் பிடத்து வெண்கடப்பமலர்த்தாரின் பெரிய அழகு தோன்றும். அசை கின்ற அருவி மிக ஆர்த்து இழிதலால், சிலம்பாறு அழகு செய்யும் இவ் வியக்கத்தக்க திருமாலிருஞ் சோலை என்னும் பெயருக்கு ஏற்ப அதன் பெருமை பூமியின்கண் நன்றாகப் பரக்கும். மகளிரும் மைந்தரும் தாம் விரும்புங் காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தின் இயல்புடையது அக்குன்றம். அதனிடத்து அந்நிலைபெற்ற குளிர்ச்சியுடைய இளவெயில் சூழ அதனிடையே இருள் வளர்தலை ஒப்பப் பீதாம்பரத்தையுடை யோன் தம்முன்னோனாகிய பல தேவனோடு அமர்ந்திருப்பன். மாந்தரே! அத்தோற்றத்தை நினைமின்.

இனி அம்மலையது சிறப்பைக் கேண்மின்! சுனைகள் தோறும் நீலம் மலர்ந்திருக்கும். 2சுனை சூழ்ந்த அசோகின் கிளைகளெல்லாம் மலர்கள் விரிந்திருக்கும். காய்கனிகளோடு நிறம் மாறுபட வேங்கை பூங்கொத்துகளை மலர்த்தும். இவ்வியல்புகளால் அம்மலை மாயோனை ஒத்த இனிய நிலைமையுடையது. பெரிய ஆரவாரமுடைய உலகில் பெரிய குன்று என்றும் புகழ்பரந்த அவ்வளவு பழைதாய் இயல்கின்ற புகழையுடையது. அது, காண்போரின் பாவத்தை அறுக்கும் வழிபடு தெய்வம். ஆதலின், சென்று அவனைத் தொழமாட்டாதீர்! அதனைக் கண்டு பணிமின். அங்கு மகவைத் தழுவியிருக்கும் மந்தி ஒரு சிகரத்தி னின்று ஒரு சிகரத்திற்குப் பாயும்; முகைகள் நெருங்கிய முல்லை, மகளிர் கற்பு ஒழுக்கத்தைக் காட்டும். தேன்பொருந்திய துளசியுடைய கரிய குன்றம் அனையை! ஒளிபோன்ற ஒரு குழை உடையை! கருடன் இருக் கின்ற அழகிய கொடியுடையோய்! கோபமிக்க தண்டேந்தினை; வலம் புரியோடு வெற்றிநேமியுடையை; வரிசிலையோடு வெற்றி அம்பினை யுடையை; புகர் நிறமுடைய சுழல் படையுடையை. இவ் இருங்குன்றத் தின் அடியில் உறைதல் எய்துக என்று எமக்கு, அழகிய சீரையும் புனிதத்தையு முடைய வேதம் அவர் பெருமையை இத்தன்மையவென்று கூறிற்று. ஆதலால் யாம் விரும்பி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தே மாய்ப் பெரும் புகழுடைய இருவரையுந் தொழுது வேண்டு தும்.
இளம்பெரு வழுதியார்

16 வையை
(இது, காதற் பரத்தையுடன் புனலாடிய தலைமகன்; தோழியை வாயில் வேண்ட அவள் புனலாடியவாறு கூறி வாயின் மறுத்தது)

கொடையுடைய பாண்டியனது ஈகைபோலுமென்று கண்டார் கூறக் கரிய மலையிடத்துள்ள மிளகுக் கொடிகளோடும் சந்தனத்தோடும், வெண்ணெய் கடையும் தயிர்போன்ற நுரையோடும் பிறவற்றோடும் கரை யின் எவ்விடத்தும் நீர் மேலும் மேலும் பெருகா நின்றது. துறையிடத்து, ஒத்த முத்துகளைக் கோத்த வடம், தலையில் அணியும் முத்து, பொன் னால் ஆய ஆபரணம். வலமாகச் சுழிக்கின்ற ஆற்றுநீர் கொண்டு வந்த மணிகள், நீராடு கின்ற புதல்வர் சிறிய தலையிற் சூடிய முஞ்சமென்னும் மணி ஆகிய இவற்றை அணிந்து தத்தம் கணவரோடு நீராடும் தத்துகின்ற வரியுடைய கண்ணார் நிற்கும் இடந்தோறும் நீர்வாரா நிற்கும்.

வயல்களிடத்தில் ஐதாகிய மலர்களைச் சுமந்து, பூவையுடைய நீர்நிறைதல், பாடுகின்ற இயங்களின் கண்ணொலியையும் பாட்டினையும் பயின்ற மகளிர் ஆடுகின்ற அரங்கினது அலங்கரித்த அழகை ஒக்கும்.

தமக்கு (சோலைகளுக்கு) விருந்தயர்வது போல் ஒலித்தொழுகும் தீம்புனலுக்கு எதிர்த்து விருந்தயர்வன போல், கா, மென்மேலும் நெருங்கும் கரும்புகள் ஒலிக்கும் மகரந்தத்துடனே நரந்தம் போன்ற நறிய மலர்களை அளிக்கும் மணமுடைய காவினும், கயங்களிலும், ஆற்றிடைக் குறையினும் மதுவையுண்டு தேன்கள் பாடப் பூக்களினாலுண்டாகிய அழகுவையை வரவின்கண் திசைதோறும் பொலிந்தது.

நீர் விசிறும் கருவிகளால் ஆயத்தார் சுற்றி நின்றெறியத் தன் குரும்பை முலைக்கட்பட்ட அரக்கு நீரைத் துடையாளாய் துகிலின் முன்புறத் தால் ஒற்றி நின்றாள். அவள் பாற் கணவன் வந்தான். அதனைத் தோழியர் கண்டு ‘அவள் பூத்தனள்; அவளைப் பொருந்தாதே, நீங்கு’ என்று பொய்யாகக் கூறினர். அப்பூப்பின் தோற்றத்தை ஒரு தலையாக ஒத்த செஞ்சாந்தின் நாற்றத்தால், அப்பூப்பின்மையை அறிந்து வைத்தும் சனத்திடையனாதலால் அவன் ஆண்டு நின்றும் நகையோடும், கடலை நோக்கி மலையினின்றும் பரந்து வரும் ஆற்றை ஒப்ப விரைந்து வீடு போந்தான். போந்து மகிழுமாறு பழத்தினாற் சமைத்த களிப்பு மிக்க தேறலை நுகராது, அவளது குருதி போலும் நீரைத் துடைத்து மருவி னான். மருவி அவ்வில்லத்தார் கேட்கும்படி நங்கை பூத்தனள் என்று சொல்ல அதற்கு அவள் நாணினாள். வையையின் வரவு இத்தன்மை யுடைதாயிருந்தது.

(இதுவும், வருவனவும் காதற் பரத்தையைக் குறித்துக் கூறியன)
மலையினின்றும் இழிந்து செல்லும் அருவி கரையிடத்தே உள்ள பூக்கள் செறிந்த மரங்களைச் சேரும்; சேர்ந்து அம்மரங்களின் பூவால் அழகு பெற்று, மடவார் கூந்தலிற் சூடிய தேன் பொருந்திய தண்ணிய பூக்களும், மைந்தர் மார்பிடத்தே சூடிய மலரின் இதழ்களும் பரக்கும்படி செல்லும். மீனாகிய முத்துப் பூத்து விளங்கும் வானத்தின் கண் பெரிய கங்கையாறு வருகின்ற தன்மையை ஒத்திருக்கும். இவ்வாறு ஒத்திருத்தல் தேன் வண்டு ஊதுகின்ற வையைக்கு இயல்பு. விளங்குகின்ற ஒளியை உண்ட (மங்கையரின்) கண்ணாகிய கெண்டை மீனுக்கு, மதுபானம், புனலாட்டு, புலவி என்னும் இம்மூன்றினாலும் ஒள்ளிய நிறம் சிவக்கும். பல வரிகளையுடைய வண்டின் கூட்டம் தமது அழகிய வாய்களால், கூந்தலின்றும் நீங்கும் இயல்பினை யுடைய பூக்களின்றும் தேனொழுக மிக்க நீரின் கண் ஆடும் பரத்தையரை அடுத்தடுத்துப் புல்லும்; புல்லுத லால் நெகிழ்ந்து அழிந்ததும் அழியாதது மாகிய கத்தூரிக் குழம்பு மார்பினின்றும் ஒழுகும். அம்மார்பு, பனியால் வளைந்த மூங்கில் அப்பனி நீங்க மேலே எழுந்து சென்று தாக்குதலால் தேன் சோர்ந்து விழும் வரையை ஒத்த தோற்றமுடையதாயிருக்கும். கொடி அணிந்த தேருடைய பாண்டியனது வையை ஆற்றின் இயல்பு இவ்வகை யினது. மேகம் வரையிடத்து ஆரவாரித்து நிற்கும் அவ்வளவிற்கு, இவ்வியல் பினதாகிய வையைத் தீம்புனற்றிரை ஆரவாரிக்கும்.

(இவ்வளவும் தோழி தன்னுள்ளே கூறுவாளாய்ப் புனலாடிய வரலாறு கூறி, மேல் வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயின் மறுக் கின்றாள்)

வையாய்!கண்ணியரும் தாரருமாகிய மைந்தரும், நறுங்கோதை யின ராகிய மகளிரும், முன் பொருள்களைத் தானம் பண்ணி, அதன் பயனாகிய போகத்தை நுகரவேண்டி நாடோறும் ஆடுதலான், அவர் கையுறையாகிய பொன்மீன் முதலியவும், அவரணிந்த சாந்தும். மாலை யும் ஈரம் புலர்த்தும் பொலிந்த புகையும் நினக்குத் தரும் உண்டியும் இடையறாதிருக்கும் பொருட்டு மழை மறா தொழிக. அம்மழையாகிய வெள்ளம் பெருகி நின் பெருக்கு வற்றா தொழிக.

நல்லழுசியார்

17 செவ்வேள்
கடவுள் வாழ்த்து

ஆராதிப்போர், தீபங்களும், இசையுடைய வாத்தியங்களும், சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களும். அகிற்புகையும், கொடி களும் ஆகிய இவற்றை, ஒருங்கே ஏந்தித் தேன் பொருந்திய மலர்களை யும், தழைகளையும், பூத்தொழில்களுடைய துகில்களையும், மணிகளை யும், இலைபோன்ற உயர்ந்த வேலையும் சுமந்து செல்வர்; சென்று சந்தனத்தைத் தெளித்து அறையிடத்தே படிமத்தான் கட்டின கிடாய் நிற்கும் முருகனது கடம்பை ஏத்துவர். ஆலாபனஞ்செய்து பாடல்களைப் பாடுகின்றவர்களாய், விரிந்த மலர்களினின்றும் சொட்டும் தேன் மரங் களை நனைக்கும் குன்றின் தாழ்வாரத்தில் மாலைக் காலத்தே கூடுவார்கள். இவருள் தேவருலகத்து உறைதலை வேண்டுவார் யார்? (வேண்டார் என்றவாறு.)

ஒரு பக்கத்தே பாணர் மீட்கும்யாழின் இனிய ஓசை எழுந்தது. ஒரு பால் பூக்களாகிய புதுவருவாயினையுடைய வண்டு ஊதுகின்ற இனிய இசை எழுந்தது. ஒருபக்கத்தே துளைகளுடைய குழலின் ஓசை எழ, ஒருபக்கத்தே வண்டுகள் பரந்து பண் போன்ற இசையினை ஊதின. ஒருபக்கத்தே ஓசையுடைய முழலின் ஒலி எழ, ஒருபக்கத்தே மலையி னின்று இழியும் அருவிநீர் ததும்பி ஒலித்தது. ஒருபக்கத்தே பாடவல்ல விறலியர் வளைந்து ஆட, ஒரு பக்கத்தே வாடைக் காற்றுக்கு அசைந்து பூங்கொடி ஆடிற்று. ஒருபக்கத்தே பாடினியின் பாலைப் பண்ணாகிய மிடற்றுப் பாடல் எழ, ஒருபக்கத்தே தாளத்துக்கு ஆடுகின்ற மயிலின் குரலெழுந்தது. இவ்வாறு கல்விகளால் மாறுபடும் தன்மை உற்றன போல ஒன்றுக்கு மாறாக ஒன்று மாறுகொள்ளுந் தன்மை பகையை வென்ற முருகன் குன்றிடத்துண்டு.

பாடல்களாற் சிறந்து பலபுகழும் முற்றுப் பெற்ற கூடற்கும் பரங் குன்றுக்கும் இடையே உள்ள நிலம் மிக அணித்தாயினும், மைந்தரும் மகளிரும் நெருங்கிவிளையாடுதலால் மிகத் தூரத்தே நின்றது. அழகு மிக்க அவர் கூந்தலில் நின்றும், 1குஞ்சியினின்றும் வீழ்ந்து அவிழ்ந்த மாலையால் செல்லும் வழி தடுக்கப்பட்டு வழி இல்லை ஆயிற்று.

குற்றந்தீர்ந்த வேதத்தாலும், அது கூறும் வேள்வியாலும் புகழ் திசை எங்கும் பரந்த குன்றிடத்தே, உலகத்தார் பலவிடத்தும் இருந்து செய்கின்ற பூசைக்கண் முருகன் அகிற்புகையை அவியாகக் கொள்வான். அப்புகை இடந்தோறும் மேலே போதலான் சூரிய மண்டலம் மறையும்; தேவர்கள் இமையாது நின்று நீங்குவர்.

குளிர்ந்த மாலையை அழகு பெற அணிந்தோரும், வளைஅணிந்த முன்கையினரும், வளைந்த இறை உடையருமாகிய இளம் மகளிர், அன்பு ஒத்தாரும் தாரணிந்த மார்பினையுடையருமாகிய மைந்தரின் அணை யாகிய மென்தோளிற் தங்கி மனமகிழ்ந்து சுனையிடத்தே பாய்ந்தாடுவர். அதற்கு வெருண்ட வண்டுகள் வெருவிச்சுனையிடத்துள்ள மலர்களின் மகரந்தத்தை ஊதாது நீங்கும். பரங்குன்றினது அலங்காரம் இத்தன்மை யது.

மலையினின்றும் இழிகின்ற நீண்ட வெள்ளிய அருவி மிகவும் பரந்து உழவரது வயலிடத்தே செல்லும். மேலே விளையாடு மகளிர் இயங்குதலால் அவர் பூணினின்றும் விழுந்த நீலமணி உழுகின்ற நிலத்தைச் சிதைக்கும்.

தம்மைப்பிரிந்து சென்ற தலைவர் வினைமுடித்துக்கொண்டு விரைவில் வந்து கூடுதற்குத், தலைவியர், வெள்ளிய அருவி அழகு செய்யும் பரங்குன்றின் கண் தெய்வவிழா எடுப்பர். பிரிந்தவர் கூடிய வழிக் கெடாத பெரிய புகழையுடைய செழுமை பொருந்திய வையையிடத்துப் புனலாடுவர். ஏனையோர், பிடரிமயிர் கொய்த குதிரை பூண்ட, கொடி யணிந்த தேருடைய பாண்டியனது கூடற்கண் புதுப்புனலாடுவர். கற்புடைய மகளிரும் தலைவரது அறம் நிமித்தமாகப் பூசை செய்து அப்பயன் நுகர்தலின் அது அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று.

நீலமணியின் நிறமுடைய மயிலினையும் உயர்ந்த கோழிக் கொடி யினையும் பிணிமுகமென்னும் யானையையும் ஊர்ந்து செய்யும் வெல் லும் போரையுமுடைய தலைவரின் துன்பஞ்சாராத அருளைப் பெறு வேமாக வென்று மக்கண் மாட்டுப்பணிந்த மொழியை ஒழித்து, நின் புகழை ஏத்தி யாமும் எம் சுற்றமும் வேண்டிக்கொள்ளா நின்றேம்.

நல்லழுசியார்

18 செவ்வேள்
கடவுள்வாழ்த்து

திரண்டு வந்து பொருத அவுணரது வலியாகிய செருக்கு ஒழிய, விசும்பிடத்தே பரந்து நிறைந்த சூலுடைய கார்கால மேகம் போல நீர் பரந்ததும் நிலந்தாங்குவதுமாகிய கடலுள், மாவடிவாய்ப் பரந்து நின்ற சூரபன்மாவின் வலியைக் கெடுத்தோய்! நின்னை ஈன்ற புகழைத் தன்னிடத்தே கொண்ட இமயத்தோடு ஒப்பநேர்நின்று மாறுபட்டு ஏற்கும் புகழுடையது இப்பரங்குன்று.

(இனி முருகவேளைப் படர்க்கையாக்கி இம்மலைச் சிறப்புக் கூறுகின்றார்)
ஆடுகின்ற ஒள்ளிய மணிபோலும் அழகிய பொறியினையுடைய மயிலை நோக்கிய முருகக் கடவுள் அதன் அழகையும் களிப்பினையும் உள்ளத்தாற் குறிக்கொண்டார். அதனை வள்ளி கண்டாள்; கண்டு, நீ நினைத்த தறிந்தேன்; இனி அதனை எமக்கு உரை; எம்மை நோக்காது இகழ்தலை மறத்தல் ஒழி, என்று சொல்லி ஊடினாள். அவர் அவ்வூடலை மாற்றி, எனது காதலுக்குரியாய்! அம்மயிலாற் களவுகொள்ள அரிய நின் சாயலை, மிகுந்த மகிழ்ச்சியாற் களவுகொள்ள எண்ணிய அம்மயில், அதனைப் பெறமாட்டாது வருத்தமுற்றது. அதனைக் கண்டு யான் நின் சாயலின் அருமையை நினைத்தேன். நீ, உன்னை இகழ்ந்தேமாகி நின்றேன் என்றாய்,” என இவ்வாறு கூறி அவ்வூடலை உடனே தீர்த்தார். முருகனது குன்றின் இயல்பு இவ் வகையினது.

(இது, பாணனுக்குத் தலைவன் பரத்தைமையைக் கூறுகின்ற ஒரு தலைவியின் கூற்று)
மெய்யில் அழகு பொலிதற்கு ஏதுவாகிய விரும்பத்தக்க பொன்னா பரணங்களையுடைய பாணா! 1ஐந்து வளம் பொலிந்த பரங்குன்றின் மேல் வாழும் பூவின் அழகுடைய குளிர்ந்த கண்ணுடையாரது இறுகுதல் மிகுதியுடைய முயக்கத்தே அம்மகளிர் நகஞ்செய்த வடுக்களால் நந்தலை வரின் பரத்தைமையை நீ காணாய். நின் யாழ் நரம்பிற்கு ஏற்ப நட்ட பாடை என்னும் பண்ணைப் பாடும் நின் பழைய பாட்டுப் பொய்த்தது.

வேலை ஏந்தியவேளே! விரைந்த செலவினையுடைய மயிலின் மீது வரும் ஞாயிறே! மழை முழங்குகின்ற நின்குன்றின் சிகரமும், அதன்கண் இருளைக் கிழிக்கும் கொடி போன்ற மின்னும், நெற்றிப்பட்ட மணிந்த நின் களிற்றை ஒக்கும். நின்குன்றின் கண் சித்திரங்கள் தீட்டிய அழகிய அம்பலம், காமவேள் அம்புப்பயிற்சி செய்யும் 1சிரமச்சாலையை ஒக்கும். தெய்வம் உறைகின்ற வரையிடத்துள்ள சோலைகளிற் றங்குகின்ற முகிலால் நீர் நிறைந்த சுனைகளில் அழகுமிகுந்து விளங்குகின்ற மலர் களின் செறிவு காமனின் கூரிய அம்பு நிறைந்த அம்பறாத் தூணியை ஒக்கும்.

கார்காலத்து மலர்கின்ற காந்தட் பூங்கொத்துகளின் நெருங்கிய அழகு, போரில்தோற்றுக் கட்டுண்டவரின் கையை ஒக்கும். முன்பனிக் காலத்து அழகிய மேகம் வானவில்லை வளைத்தது. சூதாடு கருவியை ஒத்த நினது மலைமேன்மரங்கள் அவ்வில்லுச் சொரிகின்ற கணைகளை ஒப்ப மெல்லிய மலரைப் பரப்பின. 2சூதாடுங்காய்களை உருட்டுதல் வல்ல நின் மலைக்கண் உள்ள கோயிலிற் போரிடத்து மிகும் அரவம் போலத் திரளாகிய தாள மொலிக்கும் ஒலியோடு சிறந்து மேகக் கூட்டங்கள் ஒலித்தன.

அருவி ஓடுதலால் மலையின் சிகரங்கள் முத்தணிந்தாலொத்தன. குருவிகள் ஆரவாரிக்குமாறு தினைக்கதிர்கள் விளைந்தன. கரையினின் றும் சாய்ந்த யானையை முட்டுகின்ற வண்டூதும் சுனையிடத்துள்ள பல நிறமலர்கள் வளைந்து, வளைந்த வானவில்லை ஒப்ப அழகோடு விளங்கின.
(இவ்வளவும் மலைச் சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக்கின்றார்)

பொருகின்ற வேலையுடைய செல்வ! நின் பூசைக்கண் மீட்கும் நரம்பின தொலியும், புலவர் பாடிய அழகிய பாடல்களும் பொருந்தி, வேத ஒலியும், உபசாரமாகிய பூவும் தீபமுங்கூடி எரியின் கண் உருகும் அகிலும் சந்தனமும் தூபமாய்க் கமழ்கின்ற நின் அடியின் கண் உறைதலை, எமக்கு உரித்தாக உறையும் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு கூடியாம் பிரியாதிருப்போமாக.

குன்றம் பூதனார்

19 செவ்வேள்
கடவுள் வாழ்த்து

வானின்கண் உறைதலாகிய விருப்பை நீ இப்பூமியிடத்துங் கொண்டாய்; கொண்டு அறிவின் எல்லையால் அறியப்படாத புகழினை யுடைய கடம்பை மேவினாய்; மேவிப் பெறுதற்கரிய தலைமையை யுடைய தேவரெய்தும் நுகர்ச்சியை இவ்வுலகத்து மக்களும் எய்துக என்று நின்னுடைய பரங்குன்றத்து, மயில் போன்ற சாயலுடைய வள்ளியை அலங்காரத்தோடு கூடிய வதுவை கொண்டாய். அது தேவ ருலகத்துத் தெய்வயானையது மணவிழாவோடு மாறுகொள்ளுந் தன்மை யுடையது.

புணர்ச்சியோடு வந்த இரவு நீங்கி வைகறை வந்தது. இவ்வுலகத்து அறத்தைப் பெரிதாகச் செய்து அதன் பயனை நுகரவேண்டித் தேவ ருலகத்துச் செல்வாரைப்போல, அறிவினாலும் வீரத்தினாலும் பிறரைப் போர் வெல்லும் கூடலிடத்து மகளிரும் மைந்தரும் தமக்கேற்ற மாட்சி யுடைய அணியும் ஆபரணங்களையும் நல்ல பட்டாடைகளையும் அணிந்தனர்; விருப்பமிகுந்த குதிரை மீதினராயும், ஓடுகின்ற தேரராயும் தெரிந்த மலராற் தொடுத்த தாரராயும் தெருவின் இருள் அகலும்படி சென்றனர். நின் குன்றிற்கும் கூடற்கும் இடையே உள்ள இடம் எல்லாம் நெருங்கி அவர் யாத்திரை செய்கின்ற வழி குளிர்ந்த மணல் பரந்த சோலை போன்றது. அவர்களின் மாலையணிந்த தலைகள் இடைவெளி யற நிறைதலால் அவை ஒத்த பூக்களை நிறைய வைத்துக் கட்டிப் பெரிய நிலத்துக்கு அணிந்த மாலை போன்றன.

ஒலிக்கின்ற மணி கட்டிய யானையையுடைய பெரியோய்! அறிவு திருந்திய வழுதி மடமயிலனைய மகளிரோடும் காரியக் கடனறிந்த தன் கண்ணாகிய அமைச்சரோடும் கூடி நாட்டிலுலள்ளவரும் நகரிலுள்ள வரும் ஆலவட்டங்களைத் தோளிற் தாங்கியும், நாவினால் ஏத்தியும், சூழவந்து நின் விசாலித்த மலைமீது ஏறி நீ வீற்றிருக்கும் அழகிய ஆலயம் பெருமை உண்டாக வலம் வருவர். அத்தோற்றம் உடுக்கணங்கள் புடைசூழச் சந்திரன் மேருவின் பக்கத்தே வந்தது போன்றது.

வண்டுகள் தொடர்கின்ற மதம் சொரியும் கன்னமுடைய யானை களைப் பாகர் அவற்றின் கழுத்திற்கட்டியுள்ள அழகிய கயிறுகளால் மரங்களிற் கட்டித் துண்டு துண்டாகத் துணித்த கரும்பை ஊட்டுவர். மாலையணிந்த குதிரைகளை வழியிலே இளைப்பாறும் பொருட்டு நிறுத்துவோர் திண்ணிய தேர்களை வழியிடத்தே நிறுத்துவர். அவை பரத்தலால் நின் குன்றத்தின் கீழ் நின்ற 1இடைநிலம் பாண்டியனது பாசறையின் தன்மையை உடையதாயிருக்கும்.

(இனி, வழுதியுடன் குன்றின்மீது ஏறியோரது விநோதங் கூறுவா ராய் மலைச்சிறப்புக் கூறுகின்றார்)

குன்றிடத்துள்ள குரங்குகள் அருந்தும்படி, சிலர் தின்பண்டங் களைக் கொடுப்பர். சிலர், கருங்குரங்குகளுக்குக் கரும்பைக் கொடுப்பர். சிலர், தெய்வத் தன்மையுடைய பிரமவீணையை மீட்பர். சிலர் குழ லிடத்துக் கையை வைத்து ஊதுவர். சிலர் இளி, குரல் என்னும் இசை களைச் சமமாக யாழிற் பாடி இன்பங் கொள்வர். சிலர், பூசையின் அழகை எடுத்தியம்புவர்; சிலர், யாழ் நரம்பின் இசை கொம்மென ஒலித்த அளவில் அத்தாளத்துக்கு ஏற்ப முரசொலியை எழுப்புவர். சிலர், நாள் மீன்களையும் தாரகைகளையும் உடைய துருவசக்கரத்தைப் பொருந்திய ஆதித்தன் முதலாக வரும் கோட்களது நிலையைத் தீட்டிய சித்திரங்களை நோக்கியறிந்தனர்; விரகியர் வினாவ, இவன் காமன் இவள் இரதி என்று சிலர் விடை இறுத்தனர்.

இப்பூனை இந்திரன், அவ்விடத்திற் சென்ற கௌதமமுனிவன் இவன்; சினமிகுதலால் இவள் கல்லுரு எய்தியவாறிது, என்று கணவனைப் பிழைத்தாரின் தண்டங்களைக் கூறினர் சிலர்.

துதிக்கப்படும் பரங்குன்றத்துத் 2திருமால் மருகனது சித்திர மண்டபத்தின் பக்கம், சென்றவர்கையாற் சுட்டிக் காட்டிக் கேட்கவும், கேட்டவற்றை அயலே நின்றவர் அறிவிக்கவும் பற்பல சித்திரங்களை யுடையதாயிருக்கும். அம்மண்டபம் மூங்கில்களையும் விரிந்த பாறை களையுமுடைய அகன்ற இடத்தே செய்யப்பட்டிருந்தமையால் விளக்க மான நிலைமையை உடைத்து.

பேதைப்பருவத்தாள் ஒரு பெண் பிறந்த தமரினின்றும் நீங்கி அவ் விடத்துள்ளவற்றைக் காண்டல் விருப்பால் உயர்ந்த கற்களின் இடையே புகுந்து ‘வந்த வழியை மறந்தேன்’ என்று திகைத்து நின்றாள். நின்று ‘சிறந்தவரே! சிறந்தவரோ! என்று தமரைக் கூவி அழைத்தாள். அவள் அழைக்கின்ற குரலை மலைக் குகைகள் தாமும் எதிரொலி செய்து அழைத்தன. அதை அறியாத அவள், தமர்தம்மை அழைக்கின்றாராகக் கருதி அவ்வழைத்த விடத்துச்சென்றாள். அவ்விடத்துத் தமரைக் காணாது மீளுமிடத்து அவள் தமரைக் கூவிக் கூவி அழைத்தாள். அன்பரது துதியை உவக்கும் முருகனது குன்றின் இட வேறுபாடு சிறார்க்கு இவ்வாறு மயக்கந்தருதலையுடையது.

மிகவும் அழகிய நுனி சாய்ந்த கொம்பைப் பிளந்து புறப்பட்ட தளிர்களை இளம் மகளிர் விளையாட்டாக இனிய சுனையிடத்து உதிர்ப்பர். அத் தளிர்கள் சுனையிடத்தே தலையை உயர்த்தினவாய் அலரோடும் முகையோடும் பொருந்திக் கிடக்கும். அவற்றுள் அலரோடு கிடந்தவற்றை இது விரிந்த ஐந்து தலையினையும் விளங்குகின்ற பொறி யினையுமுடைய அரவென்றும், அதன்அருகே முதிர்ந்த முகையோடு கிடந்த ஒருதளிரை அதன்மைந்தனென்றும் இளமுகையோடு கிடந்த மற்றொன்றை அதன்குட்டி என்றும் அம்மகளிர் மருண்டனர். பச்சிலை இளங்கொழுந்துகளை நீட்டின. ஆம்பல் மகளிர் வாய்போல் விரிந்தன. காந்தள் நாறுகின்ற குலைகளைக் கைபோற் பூத்தன. எருவை நறிய பூங்கொத்துகளை ஈன்றன. வேங்கை நெருப்புப் போன்ற பூங்கொத்து களைப் பரப்பின. இன்னும் நிறம் மிகுந்த தோன்றி, அலர்ந்த கொத்து களையுடைய நறவம், காலங்குறியாது பூக்கும் கோங்கு கோங்கின் போதோடு நிறத்தாற்பகைத்த மலருடைய இலவம் ஆகிய இவை யெல்லாம் தெற்றின மாலைகள் போல மலரால் நிறைந்தன. அம் மலர்கள் கோத்தமாலைகள் போல நிறம் மாறுபட்டும் தொடுத்த மாலைகள் போல இடைஇட்டும் தூக்கிக் கட்டிய மாலைகள் போல நெருங்கியும் பூத்தலால் ஒன்றோடு ஒன்று மயங்கின. அதனால் நின்குன்றின் உச்சி, விடியற் காலத்துப் பலநிறமேகம் பரந்தவானம் போன்ற காட்சி அளிக்கும்.

குறப்பெண்ணாகிய வள்ளியை மணந்தோய்! எமது வாழ்த்தினை நின் செவிக்குச் சிறந்த உணவாகக் கொள்ள வேண்டும். கடப்ப மாலையையும் சிவந்த உடையையும் உடையை! நின்வேலும் அவ்வாறே பவழக்கொடியின் நிறங்கொள்ளும். நீ நிறத்தால் எரிகின்ற தீயை ஒப்பை; முகங்களால் நீ ஆதித்த மண்டலத்தை ஒப்பை.

உலகிற்கு வருத்தஞ்செய்தலான் நீதியிற் தப்பிய சூரபன்மாவாகிய மாவைத் தடிந்து, வலியகிரௌஞ்சமலையிற் திருந்திய வேலைவிட்டு அதனை உடைத்தோய்! எமது சுற்றமும் நாமும் உன்னை ஏந்திப் பரங்குன் றிடத்துக் கடம்பின் கண் அமர்ந்த நல்ல நின் நிலையை வாழ்த்தினேம்; எமது வாழ்த்து இது.
நப்பண்ணணார்

20 வையை
(இது, பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூதாகச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையை நீர் விழாச் சிறப்பும் கூறியது)
மலைஇடத்துள்ள கல்நொறுங்கும்படி இடி இடித்தது. கடல் வற்றும்படி நீரைக்குடித்துச் சூல் முதிர்ந்த முகில் மலையைச் சூழ்ந்து மழை பொழிந்தது. அம்மழை நீர், எதிர்த்துப் பொருபுலியைப் போழ்ந்த புகர் நெற்றியுடைய யானையின் இரத்தமளைந்த கோட்டின் கண் உள்ள கறை போகும்படி கழுவும். முகிற் கூட்டங்கள் காலை பொழுதிற் கடலை முகந்து மாலைப் பொழுதிற் சூரியன் படுகின்ற திசையிடத்துள்ள மலையைச் சேர்ந்து இராக் காலத்தே மழையைப் பெய்யும்., மரங்கள் தருகின்ற மலர்களின் நாற்றமும், தேன்தருகின்ற மலர் நாற்றமும் காய் கின்ற வெயிலையும் மிக்க காற்றையு முடைய காடுகள் தரும் நாற்றமும் மரக்கோடுகளுதிர்த்த கனிகளது நாற்றமு மாகிய இவற்றை உடன்கலந்து கொண்டு வந்து வையை பிறர்க்குக் கொடுக்கும்.

கரையிடத்துள்ள விசாலித்த சோலையின் நாற்றத்தின் மேலே ஆற்றினது வெம்மையாற் தோன்றும் நாற்றத்தை நுகர்ந்து ஊரார் ஆசை யோடு நீராடும்படி பறை ஒலித்தது, மதிலின் மதகுகளில் நீர் ஓடுகின்ற ஓசையினால் கூடலிலுள்ளார் துயிலெழுந்தனர். எழுந்து நித்திரை மயக்கத்தால் தேர்களில் வண்டிகளிற்பூட்டும் எருதுகளையும், வண்டி களிற் தேரிற்பூட்டும் குதிரைகளையும் பூட்டி ஊர்ந்தனர்; குதிரைகளுக் கிடும் மெத்தையை யானைக் கிட்டனர்; மறதியால் யானைகளை அலங்கரியாது நடத்திச் சென்றனர். மகளிர் மாலையை மைந்தர் புனைந்தனர். மைந்தர் அணியும் குளிர்ச்சி பொருந்திய தாரை மகளிர் அணிந்தனர். தாந்தாம் முந்திச் செல்லுதல் வேண்டுமென்னும் விருப்பி னால் அணியும் முறைமையை மறந்து மாறி அணிந்தவரெல்லாம் விளை யாட்டு மகளிர் இழைத்த சிற்றிலை அழகு செய்யும் வண்டு பாடுகின்ற மணலுடைய கரையின் உயர்ந்த மேட்டை வந்து பொரும் புனலைச் சென்று குறுகினர். அணியாதவர்கள் இல்லினின்றும் புறப்பட்டு மாடங் களுடைய வீதிகளிற் செல்லுதற்கு வருத்த முற்றனர். இவ்வாறெல்லாம் கூடலிலுள்ளார் விரும்புந்தன்மையுடையது வையைப் புனல்.

பூங்கொத்துகளைச் சந்தனப் புகையூட்டி அணிந்தோரும், தாரை நெருக்கி அணிந்தோரும் கண்ணியும் வலயமும் அணிந்தோருமாகிய திரள் வந்தேறி வையைக் கரைப் பரப்பின் கண்ணே நின்றனர். அயலே நிற்பவர், அயலார் அணிந்த அணிகளைப் பார்த்தனர். அவ்விடத்து நின்றோரில், தன் தலைவி அணியும் வளையையும் முத்து மாலையையும் பரத்தைக்குக் கொடுத்த தலைவன் ஒருவனாகும். அவன் தலைவியோடு உடன் நின்றான். காணாது போன வளைகள் பரத்தையின் கையில் இருப்பதைக் கண்ட ஆயத்தார் வருந்தி அவட்கு இவள் மாற்றாள் என்று தம்முள் எண்ணிப் பார்த்தனர். அவற்றை அவட்குக் கொடுத்த அக் கள்வன் அப்பார்வையைக் கண்டு நாணினான். அதனைக் கண்டோர் அவன் முகத்தைப் பார்மின் என்று ஒருவரோடு ஒருவர் கூறினர்.
கோபித்துப் போர் செய்யும் அம்புகளை ஒத்தனவும், அழகிய மலரின் அழகைக் உண்டனவுமாகிய கண்ணையுடைய பரத்தை, அவ்வாயம் தான் அணிந்திருக்கும் வளைகளைக் காணாமல் கூட்டத்துள் ஓடி ஒளித்து மறையலானாள். இச்செயலை ஒருவர் ஒருவருக்குக் காட்டி நின்றனர்.

வையை நீர் கடலுட் புகுந்து மறைந்தாற் போன்று தப்பிப் போகின்றவளைத் தலைவியும் ஆயத்தாரும் கண்டு, மாற்றாள் என்று தெளிந்து மணலுடைய கரையிடத்தே தேடிச்சென்று அவளை நிற்கும் படி கூவினர். பெண்கள் நிரைத்து நிற்கும். கூட்டத்தின்கண் நீயிர் என்னைத் தொடர்தற்குக் காரணம் யாதெனச் சொல்லி அப்பரத்தை எதிர்த்தாள். எதிர்த்தலும் அத் தலைவி சித்தந் திகைத்து ஒன்றும் சொல்லாது நின்றாள்.

(அவள் அங்ஙனம் நிற்ப ஆயத் தொருத்தி பரத்தையை நோக்கிச் சொல்லுகின்றாள்)
விரும்பப்படும் காமத்தை வஞ்சனையுடைய பொய்யோடுங் கூட்டிக் கொள்வாரை மயக்கும் விலைத் தொழிலையுடைய கணிகாய்! நின்பெண்மை யது பொதுமையால் ஒருவராற் பேணப்படுதலில்லாதாய்! ஐம்புலன்களால் நுகரப்படுவனவற்றை நுகர்கின்ற காமுகப் பன்றிகள் நுகரும் இரண்டு இதழ் பொருந்திய தொட்டி!
பெண் தன்மையுடைய வனப்பாகிய வயலிலே இனிய கள்ளாகிய புனலை விட்டுக் காமமாகிய களிப்புள்ள கலப்பையால் எமது எருது வலி கெடாமல் உழும் பழைய உழவுசாலே! பொருளிட்டாரைப் போகாமற் றடுத்து, அழகியமதர்த்த கண்ணைக் கயிறாகக் கொண்டு தோளாகிய தறியோடு பிணித்துக் காமம் மிகுதற் பொருட்டு யாழிசையை ஆர்த்து, அளவில்லாத இவற்றையன்றி எமது ஆபரணங்களை அணிந்து வளையைப் பூண்டு இன்பத்துறைபோலப் பொதுவாயுள்ளாய். முன்னே காணாமற்போன எம் எருதையாம் தேடித்திரிந்து இவ்விளையாட்டு மகளிர் காண இவ்விடத்து வணங்கச் செய்தேம்! செய்து இவ்வையை யாகிய தொழுவத்துப் புகவிட்டு, வசமாக்கி உரப்பி மாலையை அடிக் குங்கோலாகக் கொண்டு அடித்தேம்; அடித்து இவ்வழக்கு உரைக்கும் அவையத்தில் எம்எருதாதல் யாவரும் அறியத் தொடர்ந்தேம். தம் எருதை உழுதற்றொழில் செய்யாமல் ஓடவிடும் முறைமை வேளாளர்க்கின்று.

தனக்குரிய தலைவன் மார்பை நினக்குத் தண்டமாகத் தரும் ஆரத்தையுடையாள் மார்பும், அவ்வாரத்தைக் களவுகொண்டு பூண்ட நின்மார்பும் ஒத்த தன்மையவாய் விட்டனவே என்று ஆயத்தினர் வைது சொல்லினர். அவர்களாற் தேடப்பட்ட அப்பரத்தை தலைவியைச் சிலசுடு சொற்களாலேசினள். அதனைக்கேட்ட வையை யகத்தே நின்ற முதுமகளிர் வெறுத்தனர்; வெறுத்து,‘கற்புடைமையாற் சிந்தித்த அளவிலே பாவம் நீங்கும் தன்மையாளை வையாதொழிக. நீ வெஞ்சொற் சொல்லி அறியாமையுற்றாய். அது நீங்க இவ்வழகிய மயிலின் சாயலை உடையவளை வந்து வழிபடுக’ என்று கூறினர். அதனைக் கேட்ட அப் பரத்தை இது மனத்துட் பெரிய துன்ப மாயிருக்கின்றது என்று தனக் குள்ளே சொன்னாள். பின் அம்முதுமகளிரில் ஒருத்தியை மணலிடத்து நோக்கி அன்னாய்! பகைவரைப் பகைவர் தொழுதல் இளிவரவு; அதனை நீ அறிந்திலை; பெரியோய்! அவ்வாறே மாற்றாளை மாற்றாள் வணங்கு தலும் பெருமையின்று.

தலைவி:- நல்ல மெல்லிய இனிய சொற்களை நாணாமற் பல அவைக் கண்ணுஞ் சொல்லி ஆடுதற்கு முழவுடனே வருவாய். நின் பெருமை கூற வேண்டியதில்லை. எந்தை எனக்கிட்டவளையும் முத்து மாலையுமாகிய பூண் நின்பால் வந்த வழி, மாயத்தையுடைய களவன் றாயின், நினக்கு அவை தந்தவனைக் காட்டித் தந்து பின்னை மேன்மை யுள்ளவளாகு.

பரத்தை:- மோசி மல்லிகையைச் சூடினோய்! நீ சால அன்பு பூண்டவன் என் மாட்டு அன்புடையவனாதலால் இவ்வளையையும், ஆரத்தையும், புணர்தற்கு விலையாகத் தந்தான். அவன் இவற்றையன்றி நாளை நின் காலிடத்துள்ள சிலம்புகளையும் கழற்றுந் தன்மையான்; ஆதலின் யான் கள்வியல்லேன். அவன் கள்வன்; அவனைப் பற்றுவாயாக.

இவ்வாறு அவள் கூறுதலும் அவ்விடத்து நின்றோர் அவளை நோக்கி வசீகரித்தலையுடைய மானே! மாறுபடுதலை ஒழி; நும்மை விரும்பின காமுகர் நுமக்குத் தரும் பொருள் நாடறிய நும்மனவே எனக் கூறித் தணிவுபடுத்தினர். பின் அவர் தலைவியை நோக்கிப், புணர்ச்சி இனிய பரத்தையர்பாற் சென்று அமர்வானை மனையாளாற் செல்லாமற் காத்தலும் சென்றானென்று நீக்கி ஒழுகலும் கூடுமோ? அவை கூடா. சால்புடைமை மிக்காராகிய கற்புடை மங்கையர் தம்மைக் கணவர் இகழினும் அவரை எய்தா நிற்பர். பரத்தைய ரிடத்து மயங்கி விரும்பி அவரைச் சேர்ந்த மைந்தர் மார்பை இனித்தோயோ மென்றிருத்தல் மங்கையர்க்கு முடிவு போவதன்று. முனியாதே; கொடியை ஒத்தவளே! காமம் தகுந்த வழியில் நிற்குமோ? என இவ்வாறு கூறினர். பாண்டியனது வையையின் சிறப்பு இத்தன்மையவாகிய துனியையும் புலவியையும் ஏற்கப் பண்ணும்.

குவிந்த காந்தள் முகையும், அரவு வெகுண்டு படம் விரித்தாற் போல விரிந்த காந்தட்குலைகளும், அக்காந்தளாற் கோலப்பட்டுக் சுனையினின்றும் கழிந்து வீழும் சுனை மலர்களும், புதரிடத்துச் சொரிந்த பூக்களுமாகி அருவி சொரிந்தவற்றைத் திரையாற் தள்ளிக்கொண்டு நெடிய பெரிய மதகின் நடுவாகிய வழியைப் போந்து புனல் சொரியும் அத்தோற்றம் களிறு நீரை உறிஞ்சிக் கைவழியாகச் சொறிவதை ஒக்கும்.

இவ்வாற்றால் புணர்தலும் பிரிதலுமாக இக்காமத்தையும் இதற்குச் செருக்கினைவிளைக்கும் கள்ளையும் உடன் விரவி மகளிர் யாவரும் பாராட்டத் தாம் விரும்பின காதலரோடு புனலாடுமாறு முன் பிரிந்தவரைக் கொண்டு கூட்டுதல் வையைக்குண்டு.

ஆசிரியர் நல்லந்துவனார்

21 செவ்வேள்
கடவுள் வாழ்த்து

நீ ஊர்வது, விளக்கத்தால் எரியை ஒத்த நெற்றிப்பட்டத்தின் நடுவே கிடந்து விளங்கும் சென்னியையுடைத்தாய வேழம். காலிடத்தே தரித்திருப்பது, பவழம் போலும் துவர்நீர்த்துறையிலே மறைய மூழ்கிய இலையினால், தாமரை மலர்போன்ற தாளிற்கு இயையத்தைத்த, பாம்பின் முதுகிற் தோலுடனே அதன் மயிர் நெருங்கிய தோலைக் கீறினவாரை ஒத்த, மயிலிறகால் அழகு செய்த இலைச் செருப்பாகும். கையிடத்துள்ளது, நின்னை மதியாத அவுணர் தமக்குத் துணையாக மதித்த மாவை வெட்டிக் கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேல் பூண் டிருப்பது சுருண்ட வள்ளிப் பூவை இடையே வைத்துத் தொடுத்த வட்டமாகிய கடப்ப மலர்த்தார். அமர்ந்திருப்பது, குற்றந் தீர்ந்த அன்பர் போற்றித் துதிக்கின்ற 1ஏழிலைப் பாலையும் அதனையுடைய சிறிய வரையாகிய தவிசும், அருவியாகிய முகபடாமும் உடையதாய்த் தரையின் கண் நின்று விசும்புற ஓங்கிய யானையாகிய பரங்குன்றம்.

வெற்றியாற் கொடியை அலங்கரித்த செல்வ! நின்னைத் தொழுது இக்குன்றின் அடியில் உறைதல் எமக்கு மறு பிறப்பினும் இயைகவென வேண்டுவேம்.

நின் குன்றிடத்தே, ஒருத்தி, ஓடவைத்த பொன்னாற் செய்த சிலம்பின் முத்தாகிய உள்ளிடுமணி எங்குங் கேட்க ஆர்ப்பத் துடியின் தாளத்துக்கு இயைய அடி எடுத்து வைத்துத் தோளசைத்துக் கள்ளுண்ட மகிழ்ச்சி தடுப்ப அழகு காரணமாகக் கூர்விளங்குகின்ற வேலெனச் சிவந்த நோக்கத்தோடு, துணையாக அணைகின்ற தலைவனைத் துனித்து நின்றாள்.

அழல்போன்று விளங்கும் ஆபரணமுடையாளொருத்தி, இவளி லும் எனக்கு அழகுண்டாய வழி அவளை நோக்கானென்று கருதிக் கண்ணாடியை நோக்கி நின்றாள். இன்னொருத்தி பொங்கிய முலை யிடத்தே சந்தனத்தைப் பூசி உதிர்த்து நாற்றம் நிலைபெற்ற வழி அவன் தன்னைத் தழுவுவானென்று கருதி அதனைப் பின்னும் பின்னும் ஊட்டி நின்றாள். இத் தன்மையவாகிய பலவற்றைப் புரிகின்ற மகளிர் தொழில் களை நினைப்பின் கைவல்லான் எழுதிய ஓவியத்தழகு போலாகும்.

மாவை வெட்டியோய்! நின் குன்றின் மீது எடுக்கப்பட்ட சிற்றால வட்டம்போல மேகம் முழங்குகின்ற இடத்தே இரண்டு இறகையும் விரித்து விளங்கும் பொறிகளையுடைய மயில்கள் எழுந்தாடும். விரலாற் செறித்து ஊதுகின்ற வங்கியத்தின் இசைக்கு ஏற்ப ஊதுகின்ற குர லுடைய தும்பி விரிந்த மலர்களை ஊதும். அழகிய வண்டின் கூட்டம் யாழின் இசையை மேலும் மேலும் எழுப்பும் பாணி என்னும் தாளத்தை யுடைய முழவின் இசை போல அருவி நீர் ததும்பி ஒலிக்கும். இவ்வாறு தம்முள் மாறுபட்ட பலவும் முரசுடையவன் குன்றிடத்தொருங்கே ஒலிக்கும்.

ஆபரணங்களை அணிந்த ஒருத்தி, ஒலிக்கின்ற ஆழ்ந்த சுனை நடுவே மூழ்கி அவ்விடத்தே நீர்மேல் எழுந்தாள். கரையினின்ற கணவனைத் தெப்பமாகிய மூங்கிற் கழியை நீரில் அழுந்துகின்ற தன்கை யிடத்தே தரும்படி வேண்டினாள். அவன் அதனைக் கொடாது அரக்கு நீர் கரந்தவட்டை எறிதலாற் புணை பெறாது ஆழ்ந்த நீரில் அவள்படு கின்ற துயரைக்கண்டு இன்புற்றான். பின் அந்நீரின் கண்வீழ்ந்து அவளைத் தழுவினான். இவ்வியல் பினது தண்ணிய தண்பரங்குன்றம்.

வண்டார்க்கின்ற மலையிடத்தே மைந்தர் பூசிய சந்தனத்தைப் புலர்த்தும் காற்றும், கயலை ஒத்த கண்ணுடையார் கமழ்கின்ற தாதை உதிர்த்த மேகத்தை ஒத்த கூந்தலின் அகத்தே ஊடு புகுந்து அசைத்த காற்றும், வட்டமாகிய பூங்கொத்துடைய கடம்பின் கண் மேவிய நினக்குப் பூசைக் கட்பாத்திரத் தெடுத்த கமழ்கின்ற புகையூடு எழுந்த காற்றும், குகைகளிற் பரந்து இடையறா தொழுகும் அருவியும் நின்குன்ற முடைத்து.

சுடர்பரந்த கொடியின் மின்னுப் போலக் கண்ணிற்கு ஒளிர்ந்து திகழ்கின்ற பொற்றகட்டால் விளக்கமும் அழகும் நெறிப்பும் இடை யிடையே பெறப்புனைந்த அழகிய மாலை கூந்தலோடு அசைய மாணிக் கத்தை ஒக்கச் சிவந்த, தேனாற் சமைத்த கள்ளை நுகர்ந்த மகிழ்ச்சி தடுப்பவும் பச்சை நிறப் பட்டாடை நெகிழவும், கண்சிவப்பேறவும் கணவன் எழுப்புகின்ற துடியின் தாளத்தால் அறுதியை அளப்பது போல முலைக்கண் அணிந்த முத்தாரம் அசைய ஆடுவாள். காற்றினால் ஆடை அசையவும், அணி அசையவும் அசையும் கொம்பருண்டாயின் அவள் அழகை ஒக்கும். துடியின் தாளத்துக்கு இசையத் தோளைப் பெயர்ப்பவள் கண் அம்பு புடை பெயர்வது போலும்.

(இவ்வளவும் மலைச்சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக்கின்றார்)
பகைவரை அமரிடத்துத் தொலைத்த வேலையுடையை! உயர்ந்த பன்னிரண்டு தோள்களுடையை! எம் விரும்பப் படும் சுற்றத்தோடு கூடி நின் அடிக்கண் உறைதல் இன்று போல என்றும் இயைக என்று நின்னைப் பரவுகின்றேம்.

நல்லச்சுதனார்

22 வையை
விளங்குகின்ற வாளுடைய வேந்தன் போர்க்களத்தே வெட்டி வீழ்த்திய யானைப் பிணங்கள் போல முகிற் கூட்டங்கள் நெருங்கின. அரசனைக் கொன்று போரை வென்ற பெரிய வேந்தனது வெற்றி முரசு அதிர்வது போல முழக்கத்தோடு இடி இடித்தது. பகைவரை வருத்து கின்ற அவன் படை வில்லை வளைத்து விசையோடு சொரியும் அம்பு போல துமிகள் நெருங்கிச் சிதறின. கண்ணைப் பகட்டுகின்ற வேகத்தை உடைய மின்னல் மின்னிற்று. அவன் கொடை போல வானம் மழையைப் பொழிந்தது. மழையால் எழுந்த வெள்ளம் நிலத்தில் வந்து கூடி அரசனின் படை போற்பரந்தது; ஊக்கத்தோடு எவ்விடங்களிலும் பரந்து வைக்கோற் போருடைய வயல்களிற் புகுந்தது.

வையை வரவின் கண் கூடலிலுள்ளார் புதுப் புனலாடுதற்கு எழுந் தனர். மணமுரசு ஒலித்தது. அழகிய பெண்கள் பாக்கு, புகை, சாந்து எறிவன, எக்குவன முதலிய நீர் விளையாட்டுக்குரியவற்றையும், அழகிய ஆபரணங்கள், பூத்தொழிலுடைய ஆடை முதலியவற்றையும் ஏந்தி ஆயத்தார் பின் தொடரக் கூட்டங் கூட்டமாக முற்பட்டுச் சென்றனர்.

செறிந்த வினை பொலிந்த பூங்கண்ணி சூடியோரும், குளிர்ச்சி யுடைய வெட்சியின் இதழ் புனைந்த கோதையரும், தாரணிந்த முடியின ரும், அழகிய மார்பினரும், ஊர்ந்து வந்த குதிரையும், யானையும், மணி கட்டிய கோவேறு கழுதைகளும் காவின் கண் நிறைந்தன.

வேற் போரைச் செய்யும் வலியினையுடை முருகனைப் போல ஆற்றலோடு கூடிய வலியினையும், புனைந்த கழலினையுமுடைய மைந்தர் நாற்ற முடைய மலர் அம்பினோனாகிய காமனைப் போலத் தாரையும் அழகையு முடையராயிருந்தனர். அவர்களைக் கண்டோர் இவர் தவப்பயன் மிகப் பெரிதென்று கூறினர்.

இளம் மங்கையர், முகில் போன்று அழகிய கூந்தலும், கயல் போன்ற கண்ணும், முருக்கின் பூவை ஒத்த இதழும், கச்சணிந்த இள முலையும், வகைவகையாகக் கோத்த எண் கோவை மணி முதலியவும், அழகிய இலங்குகின்ற பற்கள் தோன்றச் சிரிக்கின்ற இனிய நகையும் உடையராயிருந்தனர்.

இவ்விருதிறத்தாரையும் கரையையும் வையையையும் நோக்கு கின்ற அழகு காண்டற்கு இனிது. ஓசையுடைய முழவின் இனிய கண்ணின் ஒலிக்கு எதிரே விண்ணின் கண் இடியேறு மாறி மாறி முழங்கிற்று. விரும்பப்படும் பாலையாழின் ஒலிக்கு மாறாகப் புகர் நிறமும், வரியுமுடைய வண்டினம் பூங்கொம்பர்களினிடையே பாடின. ஊதுகின்ற நல்ல இனிய குழலுக்கு மாறாக மலரிடத்திற் தாதூதும் உயர்ந்த சாதி வண்டினங்கள் பாடின. தாள அறுதிக்கு ஆடுகின்ற விறலி யரின் ஆடலை ஒப்ப பூங்கொத்துக்களுடைய மெல்லிய கொடிகள் காற்றுக்கு அசைந்தன. இனிய புனல் உடைய அழகிய மருத முன்றுறை யிடத்து இவ்வாறு ஒன்றோடு ஒன்றுமாறு கொள்ளும்.

பூங்கொத்துகள் பொலிந்த தழைத்து அசைகின்ற கரிய கூந்தலை யுடைய மகளிர் தங்கள் கணவரின் தோளிற் சாய்ந்து தழையும் மலரும் துவளுகின்ற கொடிகள் போலாயினர்.

திருமால்
வானிடத்து ஆர்க்கின்ற முகில் மழை வளம் பெருகும்படி தேன் கூடு பொருந்திய மலையிடத்தே படியும். அம்மழைநீர் நான்மாடக் கூடலிலுள்ளார் எதிர்கொண்டு ஆடித் தம் வினையைப் போக்குவதற்கு மருந்தாகத் துறையிடத்தே பொலியும். இவ்வகையான துறையுடைய இருந்தை யூரிடத்து அமர்ந்த செல்வ! அடியேங்களது தலைமீது நின் பாதங்கள் பொருந்தும்படி வணங்குகின்றேம்.

ஒருபக்கத்தே அழகிய மலருடைய வேங்கையும், கடம்பும் மகிழும் முறுக்கவிழ்ந்த மலருடைய அசோகும் உலர்ந்து செறிந்து பொங்குதலால் நீல நிறங்கொண்ட மலை விளங்கும். ஒரு பக்கத்தே, தண்ணிய நறிய தாமரைப் பூவின் அழகிய நிரையாகிய இதழ்களிடத்து வண்டுகள் ஊதுதலின் விண்ணில் வான்மீன் பரந்த தோற்றமுடைய தடாகம் அழகு செய்யும். ஒரு பக்கத்தே விழா எடுக்கும் ஓசைக்கு மாறாக, எழும் உழவர் உழும் ஓசையைக் கேட்டு செவிடு பட்டுத் திரிந்து நாற்று நடுவோர் கூட்டமாக நிற்கும் செல்வம் மிகுந்த வயல்கள் பரந்து கிடக்கும். ஒரு பக்கத்தே, அறம்புரிதலோடு வேதம் ஓதும் தவம் முதிர்ந்து உயர்ந்த புகழுடையராயும், தெளிந்த அறிவுடையராயும் ஒழுக்கத்திற் குறைவில் லாதவருமாயுள்ள அந்தணர் கூட்டமாக வாழும் மனைகள் பொலியும்.

ஒருபக்கத்தே, உண்பனவும், பூசுவனவும் அணிவனவும், உடுப் பனவும் அலங்கரிக்கும் மணியும் பொன்னும் மலைபடு கடல்படு திரவிய மும் ஆகிய பண்டங்களையும் - குற்றந் தீர்ந்த பயனைத் தருகின்ற நெசவுப் பொருட்களையும் வைத்து வியாபாரஞ் செய்யும் கடைவீதிகள் விளங்கும். ஒரு பக்கத்தே வன்புல மென்புலன்களை விளைவிக்கின்ற உழவரும், அவர் கீழ்க் குடிகளாகிய களமர்வாழும் வீதிகளிருக்கும், பிறபக்கங்களில் இவை போன்றனவும் காட்சிக்கு இன்பம் அளிக்கும் நல்ல அழகிய வீதிகளும் விளங்கும்.

கைவளை ஒலிக்க வண்டு பொரேரென்று எழுகின்ற மிகுந்த தேன் வடியும் பூக்களை வேய்ந்த கூந்தலும், குழை அணிந்த காதும், குண்டலத் தின் ஒளிபட்டு விளங்குகின்ற நெற்றியும் ஊருகின்றதும் தோட்டியால் அடக்கப்படுவதுமாகிய யானையை ஒத்த மைந்தரும், பின்னி முடித்த கூந்தலும் வரிந்து கட்டிய வில்போன்ற புருவமும் விளங்குகின்ற ஆபரண மும் ஒடுங்கி விளங்குகின்ற நெற்றியும் அழகும் நாணும் உடையோரு மாகிய அழகிய மகளிரும் நின்கோயிலிடத்தே கூடுவர். இன்னும் இடபத்தை ஒத்த நடையுடையோரும் மிருதுவான நடையுடையோரும் கடலின் நிரைத்த திரையும் நுரையும் போன்று கருநரையினரும் விளங்கு கின்ற சந்திரனின் கதிர்போன்று அறநரைத்தோரும் சமைத்தற்குரியனவும் குடையும் புகையும் பூவும் ஏந்தி இடையே ஈவு இன்றி நின் பாதங்களை வணங்குதற்கு நெருங்கிக் கூடுவர். அவ்விடத்திற் கூடுதலாகிய வினையின் விளைவைப் பெற்றவர் வினையின் பெரிய பயன் நுகரும் அசைவில்லாத பெரிய சிறப்புடைய சுவர்க்கத்தை ஒத்தது, விளங்குகின்ற பெரிய சிகரமுடைய மலையிடத்து வீற்றிருக்கும் திருமாலின் கோயில்.

வண்டும் தும்பியும் இனிய நரம்புடைய யாழோடு ஆர்த்தன. உயர்ந்த மதமுடைய யானைகள் மேகத்தோடு ஆர்த்தன. நிறைந்த அருவிகளோடு பெரிய முழவுகள் ஆர்த்தன. செவ்வரி பரந்த கண் ணுடைய மகளிரோடு ஆடவர் கூடி விருப்ப மிகுந்த பாடலும் ஆடலும் புரிந்தனர். காம பானத்தோடு காம மகிழ்ச்சி மலர்ந்தது. சிவந்த நறவமல ரோடு கண்கள் சிவந்து காம விருப்பம் மிகுந்தது. நின்னுடைய மலை யிடத்தே ஆபரணங்களணிந் தோரும் பூச்சூடிய முடியுடையோருமாகிய நாகரது நகர் போல இவையும் இவை போன்றன பிறவும் பொருந்தும்.

நீலமணி போன்ற தன்மையைப் பெற்றுச் சுருண்டு தழைத்து நீண்டு விளங்குகின்ற புகழப்படும் கூந்தலிடத்துச் சூடிய முறுக்கவிழ்ந்த மலர்களின் தெளிந்த விளக்கமும், விளக்கமுடைய வண்டுகள் தேனை நுகரும் மலரின் அழகை உண்ட கண்ணும் ஒள்ளிய நெற்றியுமுடைய மகளிர், நீல மயிலின் நடையோடு மாறுபட்ட கடிய ஆண்யானையின் நடையுடைய மைந்தரோடு எல்லா அழகும் பொருந்திய பழைய புகழ் பொருந்திய மலையிடத்தே அதற்கேற்ப அமர்ந்தவனது கோயிலிடத்து வந்து விரைவிற் றமது துன்பம் நீங்க வழிபடுவர்.

விளங்குகின்ற பாற்கடலைக் கடைந்த காலத்து சேடன் மாமேரு மலை விளங்க அதனைப் பிடுங்கி அழகிய சிரசில் வைத்து மீன் துள்ளு கின்ற கடலிடத்தே நாட்டினான். நாட்டித் தான்-தேவர் அசுரர் என்னும் இருதிறத்தோர்க்கும் அமுதுகடைய இரண்டு பக்கத்துக்கும் கடைக யிறாயினான். கடைகயிறாகிய பெரிய வடத்தைத் திருமால் கடைய ஒரு தோழங்காலம் வலி குன்றாது கிடந்தான். அவன் இயமனின் பெரிய வலியை ஒத்தவலிமையைப் பூண் டோன்; அழகிய பணிவில்லாத வலிய இடப வாகனன் முப்புரத்தை எரித்தபோது உயர்ந்த இமய வில்லுக்கு நாணாகிப் பழைய புகழைப் பூண்டான். இத்துணைய புகழமைந்த சேடன் ஆயிரந்தலையை விரித்து இருக்கும் பாம்புகளாகிய சுற்றத்தை யுடைய கடவுளைத் துதித்து யாமும் எம் சுற்றமும் நின்னைப் பிரியா திருக்க வேண்டுமென்று வணங்குகின்றேம்.

வையை
பெரிய நிலந்தோன்றாது மிகுந்த மழை பெய்தது. உயர்ந்த வானம் மயங்கி மிகுந்த மழை பெய்தலும், உயர்ந்த கரிய நாக மலையிடத்துள்ள நறியமலர் பலவற்றின் வாசனையோடு வையை கூடலிடத்தே வேகமாக வந்தது. கூடலிலுள்ளார் வையைப் புதுப்புனலால் அழகு பெற்றதென்ற ஆட விரும்பினர். மாலை அணிந்து மகிழ்ச்சி மிகுந்தவர்களாய் ஒன்று சேர்ந்தனர். ஊரிடத்துள்ளோர் ஒருவரைப்போல் ஒருவர் தம்மை அலங் கரித்தனர்; கடைவீதி, நிறமொன்றுபட்ட வெவ்வேறு நீர் விளை யாட்டுக்குரிய மக்களால் நிறைந்தது.

கையினாற் தொடுத்த மாலையும் கண்ணியும் சூடியோரும், அழகிய நறும்புகை ஊட்டியோரும் அழகிய ஆடை உடுத்து நெய் பூசிய கூந்தலரும் ஆகிய தளிரின் இயல்பையுடைய மகளிர் யானை மிசையராய் விரைந்து சென்றனர். செருக்குடைய குதிரைகளின் மீதும், அழகிய வண்டியும் தேரு மாகியவற்றை ஊர்ந்தும் மகளிர் எவ்விடத்தும் கூட்டங் கூட்டமாக நெருங்கிச் சென்றனர். வண்டியிடத்தே உடம்பைச் சட்டை யால் மறைத்துச் செல்வோராயும், கூடுவாராயும் ஊடலொழிப்போரா யும், ஊடுவாராயும், ஆடுவாராயும், பாடுவாராயும், ஆரவாரஞ்செய்வாரா யும், நகை ஆடுவோராயும், நகையாடி ஓடுவோராயும், ஓடித் தளர்வோ ராயும், உறவினரைத் தேடுவாராயும், தேடி ஊரிடத்தே திரிவோராயும், அவரைக் காணாது கற்றாரும் கல்லாதவரும் கீழ் மக்களும், பெற்றாரும், கணவரைப் பிழையாத பெண்டிரும் பொன் தேருடைய பாண்டியனது கூடலிடத்தும் வையைத் துறையிடத்தும் அளவிடற்கரியர்.

துறையாடுகின்ற தங்கணவரின் தோள் புணையாக ஆடுகின்ற பரத்தையரை, அவர் மனைவியர் மயக்கத்தால் அறியார். என்னே இந்நிகழ்ச்சி எம் முன்னே நிகழா நின்றது என பிறை ஒத்த நெற்றியுடைய அவர் மனைவியர் எல்லோரும் தங்கணவரோடு ஊடி அப்பரத்தையரைக் கண்டிப்பர். அகன்ற வையைத் துறையிடத்து ஆடும் தன் கணவனின் மாலையை நீர் கவர்ந்து அயலே நின்றாள் ஒருத்தியின் கூந்தலிற் சூடிற்று. அதனைக் கண்டு தாவென்று அவனது காதலி கேட்டாள். புனல் வலியத் தந்து என் கூந்தலை வேய்ந்தது. வருந்துகின்ற, ஆபரமணிந்தவளே அதற்கு வருந்தத் தக்கதைத் செய்யேன். இவ்வழகு போதல் உண்டு என்று அறிந்து புனல் செய்ததோ! இது பெரும் வியப்பாக யிருந்தது, என்று கூறினாள். அது கேட்ட தலைவி, மிருதுவாகிய பூத்தந்த காதற் கிழமையால், விரும்பத்தக்க நல்லவளின் அழகிடத்தே முயங்கிக் கூடும் கூட்டம் உண்டாகும். இப்புனலும் அவளுக்குத் துணையாய் நின்றது. மாலையை நீரிடத்து விட்டோய்! நீ அவட்குத் துணையாயிரு, உயர்ந்த சிறப்புடைய பாண்டியன் அணியும் மாணிக்கம் போன்று அழகிய மேனியும், முத்துப் போன்ற எயிறும், அழகிய பவழம் போற் சிவந்த வாயும், அறக் கற்பு முடைய பெண்டிர் நவரத்தின மாலை யணிந்த தமது கணவரோடு ஆடுதல் வையைப் புனலிடத்து ஒழிவின்றாகும்.

புனலின் ஊடே போகின்ற ஓர் பூ மாலைகொண்டை யிடத்த தாதல் ஊழ் வகையினால் ஆயிற்றென்று ஏற்றுக்கொள்ளும் இயல் புடைய புனலிடத்தே, பரத்தையர்க்கு நாட்டார் அறியும்படி பூமாலை யைச் சூட்டி நினைவாரின் நெஞ்சை வருத்தும் கொடுமையோடு, கூடுதலின் முன் நிகழும் ஊடல் கூடித் தீர்ந்த விடத்து, ஊர் அவரைக் கேட்டு மறுபடியும் ஊடாளோ எனும்படி வண்டுகள் மொய்க்கும்படி கள்ளு நிறைந்தது.

வண்டு மொய்க்கின்ற கள்ளையுடையது இவ்வாறெனப் பார்ப் பார் அதிற் படியாது சென்றனர். மைந்தரும் மகளிரும் மணமுடைய பொடிகளைத் தூவினரென்று அந்தணர் தோயா தொழிந்தனர்; தேன் பொருந்தியமையால் வையை நீர் வழுவழுப்புற்றதென ஐயர் ஆற்றில் வாய்பூசாதொழிந்தனர்.

வாசனை கலந்த ஒலிக்கின்ற நுரையோடு கரைவழியே ஊர்ந்து செல்லும் புனலும், ஊரிடத்தே வருகின்ற புனலும், மலைகளினின்று கடலுள் ஓடுகின்ற புனலும், நுரையோடு மதகுதோறும் ஓடுகின்ற புனலும் கரைபுரண்டு கடலிடத்தே செல்லும். இவ்வாறு செல்கின்ற வெள்ளத்தின் மிகுதி ஓய்வின்றாகும். மணி அணிந்த யானை மீது மைந்த ரும் மகளிரும் ஒருமித்து நிரை நிரையாகச் சென்று கூடினர். உயர்ந்த மணிகட்டி யானையுடைய நூல்வல்ல பாணன் மருதமுன்துறையின் முன்புறத்தை அடைந்து பாணரோடு பிணித்த யாழிடத்தே தெளிந்த மருதப் பண்பாடுவன். பாடிப் பாடிப் பாய்கின்ற புனலிடத்தே நீராடுவன். கணவரோடு தலைவியர் ஊடுவர்; பின் ஊடல் தீர்க்கத் தீர்ந்து கூடி மகிழ்வர்; மகிழ்ந்து ஒருவரை ஒருவர் தேடி இளைப்பர்; ஒருவரை ஒருவர் தொழுது மகிழ்வர். நீர் நிறைந்த வைகை யித்தன்மையின தாயிருந்தது. கிழக்கேயுள்ள அறிவுடையீர்!
மிகுந்த அழகுடைய மங்கையரும் மைந்தரும் ஆடி ஒலித்த இந்நீர் முழுவதும் எச்சிலாகிச் சாந்தும் கமழ்கின்ற மாலையும் சுண்ணமும் பெண்களின் கூந்தலும் ஆண்களின் பித்தையும் வாடிய பூவும் அல்லாது இவ் வையையாறு நீர் நிறந் தோன்றாது. மழை நீர் வற்றிய குளத்து வாயலம்பி ஆடிய குங்கும நிறமுடைய அழுக்கடைந்த கலங்கல் நீர் போன்றது வையை.

அச்சந்தரும் கொல்லும் யானையும் உயர்ந்த தோளுமுடைய பாண்டியன் அழகிய கூடலிடத்தவரோடு வையையின் வருகின்ற புதுப் புன லாடிய தன்மை, இப்பெரிய லோகத்தில் உவமிக்கும் பொருளில்லாத பெருமையுடைய ஆகாய கங்கையிடத்து ஆயிரங்கண்ணுடைய இந்திரன் ஆடியது போலாகும்.

மதுரை
புலவர்களது புலமையாகிய தராசின் ஒரு தட்டில் இவ்வுலகத்தை வைத்து, மற்றொரு தட்டிற் தன்னை வைத்து நிறுக்க உலகமுழுவதும் மிதக்கத்தான் பாரத்தினாற் தாழுந்தன்மையுடையது நான்மாடக் கூடல்.

திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒக்கும் அழகிய கூடல்! அப்பூவின் இதழை ஒத்தன வீதிகள். இதழகத்தே இருக்கும் காய் போன்றது பாண்டியனது அரண்மனை. தண்ணிய தமிழ்க் குடிகள் அதன் தாதை ஒப்பர். தாதை ஊதும் வண்டை ஒப்பர் பரிசில் பெறும் புலவர். எமது ஊர், பிரமாவின் நாவிற் பிறந்த வேதங்களை ஓதும் குரலைக் கேட்டு எழுவதல்லது, சேரரது உறையூரையும், சோழரது வஞ்சியையும் போல கோழியின் குரலைக் கேட்டு எழாது.

தண்ணிய தமிழை வேலியாகவுடைய தமிழ்நாட்டின் இடமெல் லாம், நின்று நிலைபெற்றுப் புகழ் பெருகுதலல்லது, மதுரையிடத்துக் கொடி கட்டிய தேரையுடைய பாண்டியனது பரங்குன்று நிலைபெறு மட்டும் குறைவு படுதலுண்டோ?
திருமகளுக்கிட்ட திலகம் போல உலகம் விளங்கும்படி புகழ் பூத்தலல்லது, மதுரையிடத்து அலங்கரித்த தேரையுடைய பாண்டியனது வையை உண்டாமளவும் பொய்யாதலுண்டோ?
கார்த்திகைப் பெண்களின் காதிற்றூங்கும் கனமுடைய மகரக் குழைகளைப் போல் அழகாக விளங்கிச் செல்வம் மிகுதலல்லது மதுரை யிற் கொடி கட்டிய தேருடைய பாண்டியனது சொல் உள்ளளவும் வறுமை உண்டாகுமோ?

ஈவாரைப் புகழ்ந்து ஏற்பாரைப் பார்த்து மகிழும் அழகிய மாடங் களையுடைய கூடலும் செவ்வேள் பரங்குன்றுமாகிய இடங்களில் வாழ்வாரே புத்தேள் உலகு போவார்.

உரைச் சிறப்புப்பாயிரம்
1சிவபெருமான், தலைமையுடைய அகத்தியன். கூரிய வேலுடைய குமரன் முதலிய திருந்திய தமிழ்ப் புலமையுடையார் அரிய தமிழ் நூல்களை ஆராய்ந்த சங்கம் என்னும் உயர்ந்த கடலுள் பரிபாடலாகிய அமுதம் அரிதாக எழுந்தது. தமிழ் அரசர்களின் தடுமாற்றத்தால் குற்ற மில்லாத தமிழ் நூல்கள் நெடுங்காலங் கற்பாரின்றிக் கிடந்தன. அந்நூல் களின் பெருமையை அறிவுடையோர் நண்குணரவும் கந்தி என்பவர் நூல்களின் இடைஇடையே பாடிச் சேர்த்த பிழையும், ஏடெழுதுவோர் பொருள் தெரியாமல் எழுதிய பிழையும் பாடகர்களால் நேர்ந்த பிழை யும் ஆகிய இவை திருந்திய அறி வுடையோரின் செவியை வெதுப்பலின்., சிறிது கற்றோர்க்கும் தெள்ளிதிற் பொருள் தோன்ற, அறிவின் தகைமை யை விதி முறையே பெருக்கியவரும், திருமால் மரபில் வந்தாருமாகிய பரிமேலழகர், அளவிடப் படாத சிறப்பொடு முன்னோர் பாடிய பாடலின் பொருளைச் சுருங்கிய பொருளில் விளக்கிக் காட்டினர்.

வண்டு பாடுகின்ற துளப மாலையணிந்த உயர்ந்த தோளாய்! பரிபாடலின் பயன் அழகிய நீலமலை இமயக் குன்றின் மீது வந்தாற் போல கருடன் மீது செல்லும் திருமாலே.

எஎஎஎ
1.  பல தேவனும், திருமாலும் ஒருவராக வழுத்தப்படுகின்றனர்.

2.  “இறைவன் உமையை வதுவை செய்து கொண்ட நாளிலே இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவனும் அதற்கு உடன்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப அதனை இருடிகள் உணர்ந்து அவன் பக்கல் நின்று வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையி னாலே இறைவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப அருந்ததி ஒழிந்த அறுவரும் வாங்கிக் கொண்டு விழுங்கச் சூல் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப்பாயலிலே பயந்தாராக, ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து இந்திரன் தான் இருடிகட்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டுவந்து வச்சிராயுதத்தை எறிய அவ்வாறு வடிவு மொன்றாய் அவனுடனே பொருது அவனைக் கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ்வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்றதென்று புராணம் கூறிற்று.” (திருமுருகாற்றுப்படை உரை. நச்சினார்க்கினியர்)

“சிவன் ஆறுமுக வடிவங்கொண்டு அவற்றின் நெற்றிக்கண்களாறினும் ஆறு அக்கினிப் பொறிகளைப் பிறப்பிக்க அவை உலக மெங்கும் பரந்தன. தேவியார் அவற்றின் வெம்மையாற்றாது ஓடிப்போய்த் தமது கோயிலடைந்தனர். தேவரும் பிறரும் கலங்கினர். சிவபிரான் அதுகண்டு அபயங்கொடுத்து முன்போலாறு பொறியாக்கி தம்முன் வருவித்துக் கங்கா நதியிற் சேர்க்குமாறு வாயுவுக்கும் அக்கினிக்கும் கட்டளையிட்டு “இப்பொறிகளைக் கங்கா நதியிலுள்ள சரவணத் தடாகத்திற் சேர்த்த வுடன் புத்திரன் தோன்றுவ”னென்று அருளிச் செய்து தேவர் முதலானோர்க்கு விடை கொடுத்தனர். உடனே வாயுதேவரனைவருஞ் சூழ்ந்து வர அப்பொறிகளைச் சிறிது தூரஞ் சுமந்து சென்று மேற் சுமக்கலாற்றாது அக்கினி தேவனிடம் ஒப்பிக்க அவன் அரிதிற் கொண்டு சென்று கங்கையிற் சேர்த்தான். கங்கை சரவணத்துட் சேர்த்தது.

அப்பொழுது ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் உடைய ஒரு குமாரர் தோன்றி ஓர் தாமரை மலர்மேல் வீற்றிருந்தார். அதன்பின் அவர்க்குப் பாலூட்டி வளர்க்கு மாறு கார்த்திகைப் பெண்களறுவர்க்குத் தேவர் பணிக்க அக்குமார ரொருவரே ஆறு குமாரராகத் தோன்றி முலைப் பாலைப் பருகி வளர்ந்தனர். (கந்த புராணம்)

சிவவழிபாட்டோடு வேறல்லாத முருக வழிபாடு அக்காலத்து வடதேயத்தில் முதன்மை பெற்றிருந்த இந்திர வழிபாட்டால் எதிர்க்கப்பட்ட வரலாற்றையே இச்செய்திகள் குறிப்பனவாகும். புராணீகர் புனைந்துரையாகக் கூறும் பொருள்களுக்கு நேரான கருத்தமைத்துக் கூறுதல் ஆகாது.

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மாரறுவர் திருமுலைப்பாலுண்டான் திருக்கைவேல்” (சிலப்)
1. ஆடையை உடுத்து உள்ளே இரண்டு வடமாகிய மேகலையைக் கட்டி அதன் மேலே எண் கோவை முதலிய வடங்களைப் புனைவது முறை. இரண்டு வடமாய்க் கட்டுவதே பின் ஒட்டியாணம் என்று ஆயிற்றுப் போலும்.

1.  முன்னே செல்லும் காலாட்படை

2.  சத்தியஞ் செய்தது.

3.  நின்தொழுபராகிய மகளிர்

4.  ஏடா வென்பது தோழன் முன்னிலைப் பெயர் (திவாகரம்)

5.  உடுக்கை
6.  தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தானாக. தலைவி அவனை உள்ளேவிடாது மறுக்க அவன் பலவாறு இரந்து வேண்டுவான் பின் ஒருவாறு இரங்கிய தலைவி அவனை உள்ளே விடுவாள்.
7.  பரிசுகளையும் பிடிகளையும் ஊர்தல் பரத்தையர்க்கே இயல்பு
8.  சங்கு

9.  முல்லை, அசோகு, நீலம், மா, தாமரை.

10. சீர் = தாளவறுதி
11. இடபவீதி- கன்னி, துலாம், மீனம். மேட மென்பன மிதுன வீதி - தேள், வில், மகரம் கும்பம் என்பன. மேடவீதி- இடபம், மிதுனம், கற்கடகம், சிங்கம் என்பன. ஒரு இராசி என்பது இரண்டே கால் நாளாதலின் (நன்நான்கு இராசியாகிய) ஒரு வீதிக்கு ஒன்பது நாளாயின.

12. ஓடாணி
13. நீராடினார் ஆபரணங்களினின்றும் உதிர்ந்த மணி
14. சாத்துவீகம், இராசதம், தாமதம் என்னும் குணங்கள் மூன்றும் தம்முள் ஒத்த நிலைமையது.
15. திருமாலிருஞ்சோலை

16. நீலமலரைச் சூழ்ந்த அசோகமலர் அவன் பொன்புனை உடைக்கு ஒப்பு; குன்றத்துக் காய் கனியோடு மாறுபட மலர்ந்த வேங்கை அவன் மணிமுடிக்கு ஒப்பு.
17. உச்சிக்குடுமி
18. அரக்கு, கற்பூரம், செந்தேன், மயிலிறகு, நாவி
19. ஆயுதப் பயிற்சி செய்யுமிடம்
20. மலைசூதாடு கருவியையும், மரங்கள் சொரியும் காய்கள் சூதாடுங்காய்களையும் ஒக்கும் என்றவாறு.
21. கூடலினின்றும் போந்து குன்றில் ஏறமாட்டாது நின்ற இடை நிலம்.

22. திருமாலின் குமாரிகளாகிய அமுதவல்லி சுந்தரி என்னும் இருவரும் முருகக்கடவுளின் ஆணையின்படி முறையே இந்திரன் மகள் தேவசேனையாகவும், சிவமுனிவரிடத்து மான் வயிற்றில் வள்ளியாகவும் பிறந்தனர். இவர்களை முருகக் கடவுள் மணந்தமை யான் மால்மருகன் எனப்படுவர். “அநுதினம் விழி துயில்பவர் தங்கச்சிக்கொரு புதல்வோனே” எனத் திருமாலின் தங்கச்சியாகிய உமாதேவியாரின் புதல்வனென்று அருணகிரி நாதர் கூறுவர்.

23. எழிலைப் பாலை மதநாற்றத்துக்கு உவமை
24. சங்கமாரம்பித்த காலத்துப் புலவர்களும் அரசனும் தமது வழிபடு கடவுள்களாகிய முருகவேள் சிவபெருமான் முதலியோரின் திருவுருவங்களைத் தம்மெதிரில் வைத்து அவர்களே கழகத்துக்குத் தலைவர் எனக் கூறினராதல் வேண்டும். இவ்வுபசார வழக்கே பின் மெய்க் கதை போல் வழங்குவதாயிற்றுப் போலும்.
    1
    2

25. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டும் எட்டுத்தொகை எனப்படும்.

26. “ஆசிரியம் வஞ்சி வெண்பாக்கலியே நாலியற்றென்ப பாவகை விரியே”

27. பரிபாடல்லே தொகைநிலை விரியி னிதுபா வென்னு மிய னெறியின்றிப் பொதுவாய் நிற்றற்கு முரித்தென மொழிப (தொல்.செய். 432)

28. பரிபாட்டெல்லை நாலீ ரைம்ப துயர்படியாக வையைந் தாகுமிழிபடிக் கெல்லை (தொல்.செய். 474)

29. காப்புப்பாடிநூல் தொடங்குவது சங்க காலத்து மரபல்ல வென்பது தொல்காப்பியத் தாலும் தொகை நூல்களாலும் விளங்கும்.

30. “பாலைத் திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார்”

31. “மீனேற்றுக் கொடியோன்” (பாலை. 26) “காமன்கொடி” (மருதம். 19) “காமனார்தம் செலவு” (மரு. 29) “காமனும் படையிடுவனப்பு” (முல். 8) “காமன் தனையால் வந்த படை” (முல் 22) “நெடியோன் மகன்” (முல். 23) “சுறாக்கொடியோன் கொடுமை” “காமன் கணை” (நெய். 30) “கிரேக்கர் இரோஸ்” என்றும் உரோமர் ‘கியூபிட்’ என்றும் ஆரியர் மன்மதனென்றும் தமிழர் காமன் என்றும் இத் தெய்வத்தை அழைத்தனர்.

32. இதன்பொருள்: பச்சைமால் போன்ற மேகம் கடல்நீரைப் பருகி உமிழ்ந்த எச்சிலாகிய மழை நீரை நாற்றிசைகளிலுமுள்ள உயிர்கள் அமிழ்து எனும்படி விரும்பி யுண்ணும்; தீயின் எச்சிலாகிய ஆவுதியைத் தேவர்கள் விரும்பித் தினந்தினம் நுகர்வர்; அறிவுடை யோர் அந்தணராகிய நச்சினார்க்கினியரின் எச்சிலாகிய நறிய தமிழை நுகர்வர்.

33. இது நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரம் என்னும் செய்யுளின் வசன நடை.

34. சங்க காலத்தில் கடவுள் வாழ்த்துக் கூறி நூல் ஆரம்பிக்கும் மரபு இருக்கவில்லை. சங்கத்தொகை நூல்களுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பிற்காலத்தில் கடவுள் வாழ்த்துச் செய்திருக்கின்றார். மற்றத் தொகை நூல்களுக்குக் காப்புச் செய்யப்பட்ட காலத்திலேயே கலித்தொகைக்கும் கடவுள் வாழ்த்துச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இச்செய்யுளைச் செய்தவர் பெருந்தேவனாராய் இருத்தலும் கூடும். நல்லந்துவனா ராயின் நெய்தறக்லி செய்தவரல்லாத பிறிதோர் நல்லந்துவனாராதல் வேண்டும். இன்றேல் கலித்தொகையின் காலம் பிற்பட்டதாதல் வேண்டும். நல்லந்துவனாரை சிலர் நவ்வந்துவனார் எனப் பிறழ எழுதுவர். நல்லச்சுதன் நல்லந் துவன் நற்றத்தன் முதலிய பெயர்களைச் சங்க நூல்களிற் காண்பார் நல்லந்துவனாரே திருத்தமான பெயர் எனக் கொள்வர்.

35. சிவபெருமானுக்கு எட்டுக் கரங்கள் என்பதன் காரணம் விளங்கவில்லை. மூலத்தி லுள்ள எண் கை என்பதற்குப் எண்ணப் படுகின்ற (புகழப்படுகின்ற) கை எனப் பொருள் கூறினும் ஆம்.

36. அம்பின் அலகைக் காம்பில் வைத்து இறுக்கிய பொருத்து.

37. அரசன் உயிர் வாங்கினவன்றே கெடுவன் என நச்சினார்க்கினியர் உரைப்பர்.

38. பொருள் இன்மையால் உள்ளே ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு வெளியே ஒரு ஆடையை உடுப்பராயினும் என்பது இன்மையது இழிவு.

39. அழகுதேமல்

40. தோளினும் முலையினும் எழுதும் கோலம்.

41. (ஏனாதிப் பட்டங் கட்டினானொருவன் ஏற்றிய பரத்தைச் சேரி)